திங்கள், 9 ஜூன், 2025

இங்கித மாலை - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 


வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் 8 - வது நூலாகிய இங்கித மாலை.

பதிக அமைப்பு:

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  இறைவனை ஆன்மத் தலைவனாகவும், தன்னை ஆன்மத் தலைவியாகவும் கொண்டு வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 165 பாடல்கள் கொண்ட பாமாலை என்பதால் இப்பதிகம் இங்கித மாலை என பெயர் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ” இது-தான் சேடி என்னேடீ” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறை உறுகின்றது.

இவ் இங்கித மாலை, காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக் காப்புச் செய்யுளும் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. அது கருதியே, திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை முதல் திருமுறையில் 8 - வது நூலாக வைத்துச் சிறப்பித்தார். சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிநூல் இரண்டாம் திருமுறையுள் 98 வதாக இடம்பெற்றுள்ளது.அன்பர்-பால் நீங்கா என் அம்மையே” என்னும்  இப் பாடலை ஊரன் அடிகளார் தம் பதிப்பில் காப்புச் செய்யுளாக அமைத்திருக்கிறார்.

இப்பாமாலை பாடாண் திணை (கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் (வினா உத்திரம்)) என தொழுவூர் வேலாயுதனார் தம் முதல் பதிப்பில் குறிப்பிடுகிறார்.

 ஓர் ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளைக் கூறி, அவனது வீரத்தையும் புகழையும் குடிப்பெருமையையும் கொடைவள்ளன்மையும் கல்வியறிவையும் செல்வத்தையும் குறித்துப் புகழ்ந்து பாடுவது, ஆண்மகனின் ஒழுங்கலாற்றைக் கூறுவது பாடாண் திணை ஆகும்.

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  வர் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, இம் மாலையை உணர்ந்து ஓதும் அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் நுட்பக் கருத்துக்களை உணர உதவியாய் உள்ளது என்பது இங்கு நினைந்து போற்றத்தக்கது.

ஏட்டுச் சுவடிகள்:

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

பதிகப் பொருண்மை:

இங்கிதமாலையில், இறைவனே தலைமகன்: ஆன்மாவே தலை மகள். வீடு பெறும் உயிர்க்குத் துணையாக நிற்கும் முடிந்த தத்துவப் பகுதியே உயிர்த் தோழியாகும். இவ்விருபாலரிடை நிகழும் காதல் மொழிகளும் மெய்ப்பாடுகளும் தெரிக்கும் அந்தரங்காநுபவங்களே இவற்றுள்ள விவரிக்கப்படும் பொருட் கூறுகள். இவை மோப்பக் குழையும் அனிச்சப் பூ ஒத்த மென்மை வாய்ந்தன. பொதுவாக எல்லார்க்கும் தெரியும் நேர் மொழிகளில் உரைத்திருப்பது போல் மேலோட்டமான பார்வைக்குப் படும். எனினும், இதன் பாக்களூடு, பல சொல் ஒரு சொல்லாகவும், ஒரு சொல் பல பொருள்படுவ தாகவும், ஒரு சொல் பலபொருள் படுவதாகவும் ஒருசொல் அதற்கீடான பிறிதொரு சொல் குறிப்பதாகவும் இவ் விரண்டாம் சொல் முதல் சொல்லுக்கு இல்லாத வேறு பொருள் குறிப்பதாகவும், முன்பின் சொற்களைச் சேர்க்கும் வகையிலும், இல்லாத சொற்களை வருவிக்கும் வகை யிலும், உடன் நிகழும் மெய்ப்பாடுகளை உணர்த்தும் வகையிலும், பற்பல இன்ப வடிவமான மறைபொருள் உறுவதாகவும், இன்ன பிற மிகமிக நுட்பம் செறிந்த பான்மையுள்ளதாகவும் - துறை போய பெருங் கல்வியாளர்க்கும், நுண்ணறிவாற்றல் நிரம்பியவர்க்கும், மெய்ப்பத்திமை வயம் அடைந் தார்க்கும் பெருங்களிப்பு அளிப்பதாக - இந்நூல் அமைந்திருக்கிறது. இந்நூலைப் பயிலுந்தொறும் பயிலுந்தொறும், "அறிதோ(று) அறியாமை கண்டற்றால், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு” என்னும் பொய்யாமொழி - உவமப் பொருளும் உவமிக்கப்படும் பொருளும் ஆகிய - இருவாற்றானும் புலப்படுத்தும் பேரநுபவம் விளங்கும் என்க.

இந்த நூலின் பாக்களுடைய பொருள் நுட்பத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அரிது. ஒவ்வொரு பாவிலும் அடங்கிய சொற்கூறுகளையும் பொருட்கூறுகளையும் வரன் முறைப்படுத்தி விளக்கினாலன்றி அப்பாவினைப் போதுமானபடி நுகர்ந்து பயன்பெறு மாறில்லை. ஒரு பொருளை மட்டும் குறித்து வைப்பது என்றால், பாவின் பரப்பையும் ஆழத்தையும் நுட்பத்தையும் நெறி தவறிக் குறைப்பதாகும். இங்ஙனம் ஒருவாறு குறிப்புக்கள் குறித்தாலும், அவை இப்பெருநூல் தரத்திற்குமேல் பின்னும் இடங்கொள்ளும் எனத் தெரிகிறது” என்று திருஅருட்பா பதிப்பு செம்மல் ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் இப்பதிக பொருண்மை பற்றி வியந்து பேசுகிறார்கள்

பதிகச் சிறப்பு:

இங்கித மாலை என்னும் இந்த அற்புதப் பதிகம். வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது. தமிழ் இலக்கிய உலகிற்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனில் அது மிகையாகாது. வள்ளற்பெருமான் அவர்களின் ஆழ்ந்த தமிழ் ஞானத்தை இந்த நூலின் வழியாக நாம் கண்டுணர முடியும்.

மொழி ஞானம் மட்டுமல்லாது வள்ளல் பெருமானின் சிவானுபவ. உண்மையையும் இந்த நூலை மிக நுட்பமாக ஓதுபவர்கள் அறிந்து உணர முடியும்.

பக்தி நூல் என்கின்ற நிலையைத் தாண்டி ன்ம அக அனுபவத்தை பேசுவதுதான் திருவருட்பாவினுடைய முக்கியமான சிறப்பு அந்த வகையில் இந்தப் பாமாலையும், ஆன்ம அனுபவத்தை மிக நுட்பமாக, தலைவன் தலைவி என்ற நிலையில் நின்று பேசுகிறது.

உரை நூல்கள்:

வள்ளல் பெருமானின் இவ் இங்கித மாலை, அதி நுட்பமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு இலக்கிய, மெய்ப்பொருள் நுட்பங்களால் ஆக்கப்பட்டதனாலே இந்நூலுக்கு உரை அவசியமாகின்றது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், இந்நூலுக்கு உரை செய்திருக்கின்றார்கள்.

1904 வருடம் பச்சையப்ப முதலியார் கல்லூரியின் தமிழ்ப் பண்டிதர். க.வ திருவேங்கட நாயுடு  அவர்களும், 1969 ஆம் ஆண்டு பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களும், பின்பு உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை புலவர் அடியன் மணிவாசகன் ஆகியோரும் இம் மாலைக்கு உரை செய்திருக்கின்றார்கள்.

இவ்வான்மா அனுபூதி நூலை, நாமும் பெரியோர்களுடைய துணையோடு அறிந்து, வள்ளற்பெருமான் பெற்ற, பேரின்ப சித்தி பெரு வாழ்வை உணர்ந்து,  இன்புறுவோமாக!

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...