வியாழன், 9 மே, 2024

அருட்செல்வரைப் பேற்றுவோம்! - ஆனந்த பாரதி

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி.

அருட்செல்வரைப் பேற்றுவோம்!

-        ஆனந்த பாரதி

ஆன்மநேய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வள்ளல் பெருமானின் இருநூறாவது வருவிக்க உற்ற வருடத்தைக் கொண்டாடி வருகின்ற சன்மார்க்க உலகத்துக்கு மற்றொரு முக்கிய நினைவு கூறத்தக்க நிகழ்வு அருட்செல்வர் என். மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு. வள்ளலார் அவதரித்த 100 ஆண்டுகளுக்கு பிறகு இத்தமிழ் மண்ணில் தோன்றி சன்மார்க்க வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்தவர் அருட்செல்வர். என். மகாலிங்கம் அவர்கள், அண்ணாரின் சன்மார்க்கப் பெரும் பணிகளை நன்றியோடு நினைவு கூறி, அவருடைய பெரும் புகழைப் போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிறப்பும், இளமையும்:

திரு.நாச்சிமுத்து, திருமதி.ருக்மணி தம்பதியினருக்கு 1923 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் அருட்செல்வர் பிறந்தார். பொள்ளாச்சியில் பள்ளிக் கல்வி முடித்து பின் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்றார், பின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.

அருட்செல்வரின் தந்தை நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக இருந்தவர். 1934இல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே காந்தியின் கொள்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.

அருட்செல்வர் அவர்களுக்கும் அவரது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களுக்கும் 1945 இல் திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர்.

அரசியல் தொண்டு:

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞர் அருட்செல்வர் அவர்கள். பின்னர் 1957, 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார்.

இராமலிங்கர் பணி மன்றம்:

1969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் பணிகளை மேற்க்கொள்ளத் தொடங்கினார். தனது தந்தை அவர்களின் வழியில் காந்தி அடிகள் மற்றும் வள்ளல் பெருமானின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டு காந்திய மற்றும் சன்மார்க்கப் பணிகளில் ஆர்வம் கொண்டார். சென்னையில் “இராமலிங்கர் பணி மன்றம்” என்னும் அமைப்பைத் தொடங்கி சன்மார்க்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.

திருஅருட்பா உரைத் திருப்பணி:

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேரறிஞரும்-உரைவேந்தர் என்று தமிழ் உலகம் போற்றும் தமிழறிஞருமான ஒளவை, சு.துரைசாமி அவர்களைக் கொண்டு, பெரு நிதியும் செலவு செய்து திருவருட்பா முழுவதற்கும் வரலாற்று முறைப்படி விரிவுரை எழுதச் செய்தார்கள் அருட்செல்வர் அவர்கள். 1969 ஆம் ஆண்டுமுதல் ஏழாண்டு காலம் பொள்ளாச்சியில் அருட்செல்வரின் இல்லத்தில் தங்கி இந்த அருட்பணியை செய்தார் ஒளவை, சு.துரைசாமி அவர்கள்.

திருவருட்பா உரைப் பகுதிகள் அனைத்தையும் பல்கலைக் கழக இணைவேந்தரும், பெருவள்ளலுமான ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களிடம் அருட்செல்வர் ஒப்படைத்தார்கள். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்களின் துணையாலும், அரசர் அவர்களின் வழிகாட்டல் படியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவ்வுரைகளை 1983 ஆம் ஆண்டு முழுவதும் வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியது.

திருவருட்பா முழுதுக்கும் வரலாற்று முறைப்படி உரை காணச் செய்த அருட்செல்வர் அவர்களுக்கு சன்மார்க்க உலகமும் சன்மார்க்க அன்பர்களும் அவரின் இன்னூற்றாண்டில் நன்றியோடு நினைவுகூற வேண்டும்.

அகவல் உரைவிளக்கத் திருப்பணி:

வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1596 வரிகள் உள்ளன. இந்த அரிய நூலுக்கு உரைகாண வேண்டும் என்று பலரை அருட்செல்வர் வேண்டிவந்தார். யாரும் முன்வரவில்லை. எதிர்பாராமல் அன்பர் ஒருவரின் மூலம் திண்டுக்கல் தவத்திரு சரவணானந்தரைத் தரிசிக்கும் பேறு பெற்றார். அவரிடமும் இந்த  வேட்கையை வெளிப்படுத்தினார். சுவாமிகளோ பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாக அறைக்குள் சென்று நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களை அளித்தார். அவைதான் அகவல் உரை.

ஞானசபைத் திருப்பணி நடந்து வரும் க்காலத்தில், அகவலின் விளக்க உரை நூல் வடலூர்த் திருநாளாகிய 1974 வைகாசி 11ல் அருட்செல்வரின் இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலம் வெளிவந்தது.

சுத்த சன்மார்க்க நிலையம்:

முன்னால் தமிழக முதல்வர் ஒ.பி. இராமசாமி அவர்கள் நிறுவிய  வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் தலைவர் பொருப்பை ஏற்று சிறப்பாக நடத்தினார். பல்வேறு கல்வி நிறுவனங்கள் இன்றும் வடலூரில் சிறப்பாக இயங்கி வருவது இதற்குச் சான்றாகும்.  வடலூர் சத்திய ஞான சபைத் திருப்பணி அண்ணாரின் சன்மார்க்கப்பணிகளில் மிகமுக்கிய பணியாகும்.

அக்டோபர் முதல் வாரத்தில் ஆண்டுதோரும் நடைபெறும் வள்ளலார்-காந்தி விழா அருட்செல்வர் சன்மார்க்க உலகத்திற்கு அளித்த முக்கிய கொடைகளில் ஒன்று.

சன்மார்க்க உலகத்தின் பெரு வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற அத்தனை தொண்டுகளையும் செய்த அருட்செல்வர் அவர்கள். 91 ஆண்டுகள் இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இந்த காலத்தில் அவர்கள் சன்மார்க்க ஒழுக்கங்களை ஒழுகி, சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள் என்பது மிக மிக முக்கியமான செய்தியாகும்.

ஊரன் அடிகளார், கோவை. சிவப்பிரகாச சுவாமிகள், சுவாமி சரவணானந்தர் முதலிய சன்மார்க்கப் பெரியவர்களை ஆதரித்து அவர்களுடைய தொண்டுக்கள் சிறக்க பல்வேறு உதவிகளை அருட்செல்வர் அவர்கள் செய்தார்கள். அருட்செல்வர் அவர்களின் சன்மார்க்க தொண்டு இந்த சிறிய கட்டுரையினால் முழுவதுமாக விளக்கக் கூடியவை அன்று. அவரின் தொண்டினை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வள்ளல் பெருமானின் வழிவழி தொண்டர்கள் வரிசையில் அருட்செல்வர் முக்கிய இடத்தை என்றும் பெறுவார், வள்ளல் பெருமானை போற்றுகின்ற நாம் ஒவ்வொருவரும் அருட்செல்வரின் சன்மார்க்க பெரும் தொண்டை போற்றி அவரை என்றும் நினைவுகூறுவோம். அதுவே நாம் அவருக்கு செய்கின்ற பெரும் நன்றியாகும்.

நன்றி வணக்கம்.

 

வடலூர் வள்ளல் பெருமான் தொடர்புடைய இடங்கள் – தமிழ் நாடு - ஆனந்தபாரதி

 

எண்

ஊர் பெயர்

குறிப்பு

1

மருதூர்

வள்ளல் பெருமான் பிறந்த ஊர்

2

சிதம்பரம்

வள்ளல் பெருமான் அருட்காட்சி பெற்றது, திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

3

சின்னக் காவனம் - பொன்னேரி

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த ஊர், வள்ளல் பெருமான் தாயாரின் சொந்த ஊர்

4

ஏழு கிணறு - சென்னை

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த ஊர்

5

கந்தக் கோட்டம் – கந்தசாமிக் கோயில் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

6

சோமுச் சொட்டியார் இல்லம், லிங்கிச் செட்டி தெரு, முத்தியாலு பேட்டை, சென்னை

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் முதல் சொற்பொழிவு செய்த இடம்

7

திருஒற்றியூர்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் வாழ்வில் பல அற்புதங்கள்  நடை பெற்ற இடம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

8

வியாசர்பாடி சென்னை

வள்ளல் பெருமானை பாம்பு பணிந்து வழிபட்டு சென்ற இடம்

9

திருமுல்லை வாயில் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

10

திருவலிதாயம் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

11

திருத்தணிகை – திருத்தணி

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

12

வைத்தீச்சுரன் கோயில் – வைத்திய நாதசுவாமிக் கோயில்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

13

கருங்குழி கிராமம் – குறிஞ்சிப்பாடி வட்டம்

வள்ளல் பெருமான் 9 ஆண்டுகள் வாழ்ந்த ஊர். அற்புதம் பல நிகழ்த்தப்பட்ட ஊர், சங்கம் தொடங்கப்பட்ட இடம்.

14

திருப்பாதிரிப் புலியூர் - கடலூர்

வள்ளல் பெருமான் வந்து உபதேசங்கள் செய்த ஊர்.

15

வடலூர்

வள்ளல் பெருமான் சாலையும் சபையும் நிறுவிய இடம்

16

வேட்டவலம் – விழுப்புரம்

ஜமீந்தாரின் மனைவிகளின் பேயும், நோயும் நீக்கிய ஊர்

17

பின்னலூர் இராமலிங்கேசர் கோயில்– வடலூர் அருகில் உள்ளது

வள்ளல் பெருமானின் வருகை தந்த இடம்

18

புதுப்பேட்டை – பண்ரூட்டி அருகில்

வள்ளல் பெருமான்  சென்று வரட்சி நீக்கி மழைவருவித்த ஊர்

19

விருத்தாசலம்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

20

திருவதிகை திருக்கோயில்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

21

திருஎவ்வுளூர்

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

22

திருவாரூர்

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

23

திருக்கண்ண மங்கை

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

24

திருவண்ணாமலை

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

25

சித்திவளாகம் – மேட்டுக்குப்பம்

வள்ளல் பெருமான் சித்தி பெற்ற இடம்

26

சீர்காழி

வள்ளல் பெருமான் சென்று வழிபட்ட கோயில்

27

சிங்கபுரி முருகன் கோயில் – குறிஞ்சிப்பாடி


திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

28

திருநறுங்குன்றம் (தின்ராங்கோட்டை கிராமம்) – ஊளுந்தூர்பேட்டை அருகில் உள்ள சமண மலைக்கோயில்

வள்ளல் பெருமான் தனது சீடர் கல்பட்டு ஐயாவை நேரில் சென்று ஆட்கொண்ட இடம்

29

காரணப்பட்டு – கடலூர் மாவட்டம்

வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர்களின் ஒருவராகிய ச.மு.கந்தசாமிப் பிள்ளையின் பூர்விகத்தலம், வள்ளல் பெருமானின் உண்மைப் பாத ரச்சை வழிபாட்டில் உள்ள ஊர்



தொடரும்.....

தனித்தலைமைப் பெரும்பதி - திரு. ஆனந்தபாரதி, வடலூர்.

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

 

                                    “தனித்தலைமைப் பெரும்பதி”                     27/06/2023

கட்டுரை: திரு. ஆனந்தபாரதி, வடலூர்.

 

முன்னுரை:

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் விளக்கம் செய்த சுத்த சன்மார்க்க நெறியின் முதல் தலையாய கொள்கை கடவுள் ஒருவரே என்பது, கடவுள் ஒருவர் உள்ளார் என்றும், அந்த ஒரே கடவுளாகிய உண்மைக் கடவுளை உயிர்கள் கருத்தில் கருதி வழிபாடு செய்து, அந்த கடவுளுடைய திருவருள் விளக்கம் உயிர்களிடத்து விளங்கி அந்த விளக்கத்தினால் உயிர்கள் பெறவேண்டிய ஆன்ம லாபத்தை பெறலாம் என்பது சுத்த சன்மார்க்கத்தினுடைய முக்கிய கொள்கை.

பல்வேறு கடவுள்களை சிந்தித்தும். மதத் தலைவர்கள், பத் தலைவர்கள் முதலியவர்கள் இடத்தில் சிந்தையைச் செலுத்தியும் மக்கள் வீண்போது கழித்து தங்களுடைய பிறவிப் பயனை அடையாது, திருவருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாது. பல்வேறு கற்பனைகளில் உழன்று வருகின்றார்கள் என்று வள்ளல்பெருமான் வருந்துகின்றார். கடவுள் ஒருவரே உண்டு என்பதையும் அந்த ஒரே கடவுளாகிய தனித்தலைமைப் பெரும்பதியின் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மக்களினத்தில் மயக்கம்:

ஆதிலே கடவுளுடைய அருளால் தோற்று விக்கப்பட்ட சுத்த சன்மார்க்க கொள்கையின் அடிப்படையில் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருந்தது. இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம் என்று வள்ளற் பெருமான் குறிப்பிடுவதுனாலே இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படி மக்களினம் தூய நெறியான சுத்த சன்மார்க்கத்தில் வழங்கி வந்த காலத்தில், காலப் போக்கில், பல்வேறு சமய மத மார்க்கங்கள் இங்கு தோன்றியன, அப்படி சமய மத மார்க்கங்களைத் தோற்றுவித்த பெரியவர்களும் முழுமையா மாயையிலிருந்து வெளிப்பட்டு வந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது ஆதலினாலே அவர்அவருடைய போக்கின்படி இறைவனுக்கு வடிவம், வாகனம் முதலியவைகளை அமைத்தும்,  தான் வந்த வழியின்படியும் அல்லது தனக்கு தெரிந்த வழியின் படியும் தன்னைச் சார்ந்திருந்த மக்கள் இனத்திற்கு வழிபாட்டு முறைகளை காட்டியும் அவர்கள் மறைந்தார்கள்.

அதன் காரணமாக வழிபாட்டு முறைகள் பல கடவுள் வழிபாடாக மாறத் தொடங்கின. கடவுள் ஒருவர் என்றும் அந்த ஒரு கடவுள் ஆகிய தனித் தலைமைப் பெரும்பதியையே நாம் வழிபட்டு அவருடைய திருவருளை நாம் அடைய வேண்டும் என்கின்ற எண்ணமானது மாறுபட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் என்றும், ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்தால் அதன் மூலமாக நமக்கு அந்த பொருள் கிடைக்கும் என்றும் கடவுள் வழிபாடானது உலக வாழ்க்கையினுடைய மயக்கத்திற்கு உதவுகின்ற ஒரு செயலாக மாறிப் போய்விட்டது.

ஆக இப்படி பல்வேறு கடவுள்களும், பல்வேறு கற்பனைகளும், சமய சடங்குகளும் மதமாச்சரியங்களும் இங்கு உண்டாகி மக்களுடைய மனத்தில் பதிந்து உண்மை நெறியிலே செல்லாமல் தடுத்துவிட்டது. இதையே வள்ளல் பெருமான்

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

(#6-066 ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு)

என்கின்ற பாடலில் குறிப்பிட்டு வருந்துகிறார்கள்.

மதத்தலைவர் - பதத்தலைவர்:

கடவுளுடைய சமூகத்திலேயே பல்வேறு சத்திசத்ர்களும், மதத் தலைவர்களும், பதத் தலைவர்களும் பணி செய்கிறார்கள், அப்படி செய்கின்ற அவர்களினாலேயே பரிபூரணமான திருவருளை அவர்களை வழிபடுகிறவர்களுக்கு வழங்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகிறார்கள்,

அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை

அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்

உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்

மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

#6-081 ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்

என்று மிக அழகாக தன்னுடைய அருட்பாவில் குறிப்பிடுகிறார்கள்.

மக்களினம் அடைய வேண்டிய. நான்கு புருஷார்த்தங்களாகிய 1.ஏமசித்தி 2. சாகாக் கல்வி, 3.தத்துவ நிக்கிரகம் செய்தால் 3. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கின்ற இந்த நான்கு உயரிய மெய்ஞ்ஞான நிலைகளையும் மதத் தலைவர்களாலும், தத் தலைவர்களாலும் அல்லது சிறு தெய்வங்களாலும் வழங்கப்பட முடியாதவையாகவும், ஏக இறைவனாகிய தனிப்பெரும் தலைவன் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவராலேயே இந்த புருஷார்த்தங்களை உயிர்களுக்கு வழங்கி பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று வள்ளல் பெருமான் நம் மனித இனத்திற்கு மிக மிக உறுதியாகத் தெரிவித்துக் கொண்டே வருகிறார்.

 

கடவுள் ஒருவரே எனத்தெளிதல்:

கடவுள் ஒருவர்தான் அந்த கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக விளங்குகின்ற தனிப்பெரும் தலைமை தெய்வம் என்று நாம் உணர்வது தான் சுத்த சன்மார்க்கத்தில் முதலிலேயே அடைய வேண்டிய தெளிவாகும்.

கடவுள் ஒன்றுதான் என்று உணராமல், கடவுள் ஒன்று என்றும், இரண்டு என்றும் மூன்று என்றும் இப்படி பல வாறாக நாம் எண்ணுவது, நம்முடைய உடம்புக்கு உயிர் பலவாக இருப்பதைப் போல இருக்கின்றது என்று சொல்லி வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்கள்.

உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்

ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி

இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்

எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.

(#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்)

மேலும் சத்திய சிறு விண்ணப்பதில் ஐந்தொழிலுக்கு ஆணை செலுத்தி உயிர்களை வாழ்விக்கின்ற கடவுள் ஒருவரே என்று உறுதியாகக் கூறுகின்றார்.

எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டு” என்கின்றார்.

தெருள் பெறில் அருள்உரும்:

வள்ளற்பெருமான் மனிதர்களின் மீதும் பிற உயிர்களின் மீதும் மிகுந்த கருணையை உடையவர்கள் ஆதலிளால் மனிதர்கள், உண்மையான ஒரு கடவுளை தெரிந்து கொள்ளாது, பலவேறு கற்பனா மார்கங்களிலேயே சென்று அதனாலே வீண் போது கழித்து மரணத்தை தழுவி, பிறந்து, பிறந்து இறந்து இறந்து வீண் போகாமல் தடுப்பதற்கு இந்த சுத்த சன்மார்க்க கொள்கையை நிறுவினார்

இந்த சுத்த சன்மார்க்கத்தினுடைய அடிப்படையிலே, கடவுள் ஒருவர் என்கின்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அந்த ஒரே உண்மைக் கடவுளை கருத்தில் கருதியும், அன்பு செய்தும் ஜீவகாருண்யத்தையும். ஒழுக்கத்தையும் சாதனமாக கொண்டு, கடவுளை வழிபட்டு அவருடைய திருவருளை பெற வேண்டும். அப்படி அவருடைய திருவருளை நாம் பெற்றால் அந்த திருவருள் நமக்கு மரணமில்லாத பெருவாழ்வு முதலியவற்றை வழங்கி மனித இத்தை என்றும் அழியாத அருள் மாக ஆக்கி திருவருள் செய்யும் என்பதற்காகவே வள்ளல் பெருமான் கருணையினாலே இந்த தெய்வம் தெளிதல் என்கின்ற விஷயத்தை சுத்த சன்மார்க்கத்தின் முதற் கொள்கையாக வைத்திருக்கிறார்.

நிறைவுரை:

சன்மார்க்ககளாகிய நாம் ஒவ்வொருவரும் பல கடவுள் வழிபாடுகளை விடுத்து. சடங்கு, சமயம், மதம் மார்க்கம் முதலியவற்றில் இருக்கின்ற பற்றை விட்டு. ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கைவிட்டு, கருணை நன் முயற்சியினாலும், சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தினாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கருத்தில் கருதி வழிபாடு செய்து உண்மை அன்பினால் வழிபட்டு வந்தால் அந்த ஆண்டவருடைய திருவருளை. நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சன்மார்க்களாகிய நாம் முதலில் பெற வேண்டியது தெய்வம்  தெளிதல் ஆகிய இந்த ஒரு கொள்கையே. கடவுள் ஒருவரே என்பதை நாம் ஊன்றி அறிந்து அந்த கடவுளை நினைந்து அவருடைய அருளை பெறுவோம்.

 

நன்றி, வணக்கம்

“வள்ளலார் போற்றிய அருளாளர்கள்” – ஆனந்தபாரதி

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!.

வள்ளலார் போற்றிய அருளாளர்கள்” – ஆனந்தபாரதி

(2023 - வள்ளலார் 200 - மலேசிய விழாவுக்கு அளித்த ஆய்வுரை)

முன்னுரை:

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் என்றும், சிதம்பரம் இராமலிங்க அடிகள் என்றும், பெரியவர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற நம்முடைய வள்ளல் பெருமானார், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானியாவார். சமரச சுத்த சன்மார்க்கம் என்பது சமயம் மதங்களை கடந்த ஒரு தனிக் கொள்கை என்றாலும், வள்ளற் பெருமான் சமய மதங்களைச் சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு அன்னியமல்ல அன்னியம் என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்தினுடைய உட் பகுதிகளாக விளங்குகின்றன. அவைகள் அன்னியம் அல்ல, அவைகள் சுத்த சன்மார்க்கத்திற்கு தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன என்பது பெருமானுடைய கருத்து.

வள்ளல் பெருமான் சமரச ஞானி ஆதலால் சமய, மத மார்க்கங்களில் இருக்கின்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களையும் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களையும் கண்டிக்கின்றார்கள் என்றாலும், சமயங்களிலேயே சொல்லப்பட்டிருக்கின்ற உயர்ந்த கருத்துக்களை அவர்கள் மதிக்கின்றார்கள். அதனால் தனக்கு முன்பு சமய நெறியில் தோன்றிய அத்துணை அருளாளர்கள் உடைய உட்கருத்துக்களையும் வள்ளல் பெருமான் உள்வாங்கி, அந்த கருத்துக்களையும் அனுபவத்திலே உணர்ந்து அதற்கும் மேம்பட்ட நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்கள், அதனால் “வாழையடி வாழை என அடியார்கள் மரபில் தம்மையும் சுட்டுகின்றார்கள்”.

அந்த வகையிலே வள்ளல் பெருமானுக்கு வழிகாட்டியாக விளங்கிய அத்துணை ஞானிகளையும், வள்ளல் பெருமானார் நன்றியோடு நினைந்து தன்னுடைய அருட்பாடல்களிலேயே அவர்களை பாராட்டுகிறார்கள். தன்னுடைய உரைநடைகளிலேயே வர்களை குறிப்பிட்டு, அவர்களுடைய பெருமையை நமக்கு உணர்த்துகின்றார்கள். அந்த வகையிலே வள்ளல் பெருமான் போற்றிய அருளாளர்களின் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை இந்த கட்டுரையில் நாம் காண்போம்.

திருவள்ளுவர், திருமூலர்:

வள்ளல் பெருமான் திருவள்ளுவரையும், திருமூலரையும் போற்றுகின்றார், அவர்களின் நூல்களின் மீதும்  ஆழ்ந்த ஆர்வம் உடையவராக விளங்கி இருக்கிறார்கள். திருக்குறளை தன்னுடைய முதல் மாணவரான தொழுவூர் வேலாயுதனாரைக் கொண்டு வள்ளல் பெருமான் வகுப்பாக நடத்தினார்கள் என்கின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. திருக்குறளின் பெருமையைக் கருதி, திருக்குறளின் சில குறட்பாக்களையே தன்னுடைய திருவருட்பாவின் நெஞ்சறிவுறுத்தலிலேயே அப்படியே எடுத்து ஆள்கின்றார்.

கறங்கின் நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்

மருவும் குறட்பா மறந்தாய்  இந்த திருக்குறளை நினைந்து உன்னை செம்மைப்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று மனத்தை கேட்கின்றார் பெருமான்,

திருஅருட்பாவின் உபதேச குறிப்பிலேயே சாகாக் கல்வி என்கின்ற தலைப்பிலேயே சாகாக் கல்வியைப் பற்றி திருவள்ளுவர் தேவர் முதல் அதிகாரத்தில் சொல்லி இருக்கின்றார், அதை தக்க ஆசிரியர் மூலமாக தெரிந்து கொள்க என்று வள்ளற் பெருமான் நமக்கு உபதேசிக்கிறார்கள்.

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்

திருமூலர் அருளிச் செய்த திருமந்திரத்திலே சன்மார்க்கத்தினுடைய உண்மை தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்கள். சன்மார்க்கத்தினுடைய உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் திருமந்திரத்தை பார்க்கையில் விளங்கும் என்பது வள்ளல் பெருமானுடைய கருத்து. திருமூலர் சன்மார்க்க வழிநடந்த ஞானி ஆதலால் திருமந்திரத்தை வள்ளற்பெருமான் சாத்திரங்களிலேயே சிறந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில்

சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம்…..இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.

இந்த குறிப்புகள் இரண்டும் வள்ளல் பெருமானுடைய உபதேச குறிப்பிலே காணப்படுகின்றன.

 நால்வர் பெருமக்கள்:

            சைவ சமய குரவர்களாக விளங்குகின்ற நால்வர் பெருமக்களின் மீதும் வள்ளற் பெருமான் அவர்கள் நான்கு மாலைகளை தன்னுடைய திருவருட்பாவில் அருளிச் செய்து இருக்கிறார்கள். அந்த நான்கு மாலைகளும் அந்த நால்வர் பெருமக்களுடைய சிறப்பை அறியாதவரும் அறிந்து கொள்ளும்படியாக அவர்களுடைய பெருஞ் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வழியாக விளங்குகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் அருட்பெருமையை இந்த நான்கு ஆளுடைய மாலைகளும் (திருஅருட்பா 4ஆம் திருமுறை) நமக்கு தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல். திருவருட்பாவினுடைய முதல் திருமுறையிலேயே முதல் பதியமாக விளங்குகின்ற திருவடிப்புகழ்ச்சியிலேயே நால்வர் பெருமக்களின் அருளிச் செயல்களும், இறைவன் அவர்களுக்கு. உதவிய அருட்கொடையும் மிகச் சிறப்பாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்

ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்

ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்

ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்

அதுமட்டுமல்லாமல் திருஅருட்பாவினுடைய பல இடங்களிலே நால்வர் பெருமக்கள் உடைய பெருமைகள் பேசப்படுகின்றன.

அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர்:

முருகப் பெருமானுடைய அடியவர்களாகிய நக்கீரர் அருணகிரிநாதர், குமரகுருபரர் முதலியவர்களையும், வள்ளல் பெருமான் தன்னுடைய அருளிச் செயல்களிலே குறிப்பிடுகின்றார்கள். வள்ளல் பெருமான் அருளிய சுப்பிரமணியம் என்கின்ற விளக்கத்தில் சுப்பிரமணியம் என்கின்ற கடவுளின் உண்மை தத்துவத்தினை ஆராய்ந்து அந்த தத்துவத்தினுடைய வழி நின்று சித்தி முத்தி முழுவதையும். அடைந்த பெரியவர்களாக நக்கீரரையும், அருணகிரி நாதரையும், குமரகுருபரரையும் குறிப்பிடுகின்றார்.

அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அவ்வுண்மைக் கடவுளை வேதாகம விதிப்படி உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.” – சுப்பிரமணியம் விளக்கம் – உரைநடை

தத்துவராயர்:

யோகானந்த நிலை முழுவதும் கைவரப்பெற்ற நம்முடைய வள்ளற் பெருமான், குருதுரியம் என்கின்ற மிக உயர்ந்த யோக அனுபவ நிலையை அடைந்த மகான் என்று தத்துவராய சுவாமிகளைக் குறிப்பிடுகின்றார். தத்துவராய ஸ்வாமிகள்  தமிழகத்தில் வீரைநகர் என்னும் ஊரில் அவதரித்தவர் ஆவர், சுவாமிகள் “சசி வன்ன போதம்” முதலிய ஞான நூல்களை அருளியுள்ளார்கள், சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் உள்ள எறும்பூர் என்னும் இடத்தில். தத்துவராய சுவாமிகளுடைய மகா சன்னிதானம் இன்றும் மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்” -  உரை நடைப்பகுதி -மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது.

தத்துவராய ஸ்வாமிகள் குரு துரிய பதத்தை அடைந்து அந்த பதத்தை அடைவதற்குரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்கள் என்று வள்ளற் பெருமான் சுட்டி தத்துவராய ஸ்வாமிகளின் பெருமையை இந்த உபதேசத்தின் மூலம் உணர்த்துகின்றார்கள்.

 நிறைவுரை:

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க ஞானி ஆதலால் சமய மத மார்க்கங்களில் உள்ள பெரியோர்களுடைய உயர்ந்த அனுபவத்தையும் பாராட்டுகின்றார். மேலே நாம் ஒரு சில ஞானிகளுடைய பெயரையும் வள்ளல் பெருமான் வர்களைப் பாராட்டுவதைப் பற்றியும் சிந்தித்தோம். திருஅருட்பாவையும், திருவருட்பா உரைநடைப் பகுதியையும். மேலும் ஆராய்ந்தால் பல ஞானிகளை வள்ளற்பெருமான் புகழ்ந்து இருப்பதும், அவர்களுடைய அனுபவங்களை பாராட்டி இருப்பதும் மேலும் விளங்கும். அன்பர்கள் திரு அருட்பாவையும் உரைநடை பகுதியையும் மேலும் படித்து இக்கருத்துக்களை உணர்ந்து, பண்டைய ஞானிகளை போற்றி, பேதம் பாராட்டாமல் அவர்களுடைய அனுபவத்தை மதித்து திருவருட்பிரகாச வள்ளல் பெருமானி சமரச சன்மார்க்க வழிநடந்து பெருவாழ்வு பெறுவோம்.

நன்றி வணக்கம்.

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...