திங்கள், 9 ஜூன், 2025

வடிவுடை மாணிக்க மாலை - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.


வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் ஏழாவது நூலாகிய வடிவுடை மாணிக்க மாலை.

பதிக அமைப்பு:

கட்டளைக் கலித்துறை விருத்தத்தால்,  தனிப்பெருங்கருணை  நாயகியாம் திருஒற்றியூர் வடிவுடை மாணிக்கத் தாயார் மீது பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட பாமாலை என்பதால் இப்பதிகம் வடிவுடை மாணிக்க மாலை என பெயர் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ”வடிவுடை மாணிக்கமே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறை உறுகின்றது.

இவ் வடிவுடை மாணிக்க மாலை, காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக் காப்புச் செய்யுளும் கட்டளைக் கலித்துறை விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. அது கருதியே, திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை முதல் திருமுறையில் ஏழாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிநூல் இரண்டாம் திருமுறையுள் 75 வதாக இடம்பெற்றுள்ளது.

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, இம் மாலையை உணர்ந்து ஓதும் அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் அரும்பெரும் கருத்துக்களை உணர உதவியாய் உள்ளது என்பது இங்கு நினைந்து போற்றத்தக்கது.

 

பதிகச் சிறப்பு:

வடிவுடை மாணிக்க மாலை என்னும் இந்நூலினை நம் பெருமானார் இராமலிங்க அடிகளார் அழகும், அன்பும், ஆநந்தமும் கலந்து தேக்கிய செம்பொருட் பெருவெள்ளத்தில், அடியாராவார் எல்லவரும் மீளா ஆளாய் மூழ்கி உய்யுமாறு திரு அருளால் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்.

உலகம் யாவையும் பெற்றெடுத்து வளர்த்து வரும் நம் தாயினை அடிகளார் 'மடலவிழ் ஞான மலரே' என்றும், 'மதுரச் செழுங்கனியே' என்றும், 'காம நெஞ்சர் காணாத பொன்னே' என்றும், 'வாடாமணி மலர்க்கொம்பே' என்றும், 'மலை மங்கையங் கோமள மானே' என்றும், 'ஒப்போத மலைப் பெண் அமுதே' என்றும், 'மன்னும் கடைக்கண் மயிலே' என்றும், 'மரகத மென்கரும்பே' என்றும், 'இமயப் பொற்பாவாய்' என்றும், 'மனங் கடந்து, ஓதும் அவ்வாக்கும் கடந்த மறை அன்னமே' என்றும், 'எழுதா எழில் உயிர்ச் சித்திரமே' என்றும், 'இசையிற் கனிந்த குயிற்குரலே' என்றும், 'இரும்பேய் மனத்தினர்பால் இசையாத இளங் கிளியே' என்றும், 'செம்பால் கலந்த பைந்தேனே' என்றும், 'குயின் மென் குழற் பிடியே' என்றும், 'தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே' என்றும், 'வண்ணப் பசும்பொன் வடிவே' என்றும், 'எண்ணப்படா எழில் ஓவியமே' என்றும், 'மாறாக் கருணை மழையே' என்றும், 'காதார் நெடுங்கட் கரும்பே' என்றும், 'மெய்யன்பர் புனைந்த தமிழ்ப்பாவாய்' என்றும், இன்ன பலப்பல வகையில் எழுதற்கரிய பேரழகு பிறங்க, பேரன்போடு புனைந்து, ஆனந்தமாக அழைக்கும் இப்பசுந்தமிழ்ப் அகக்கண்களாலும், புறக்கண்களாலும் கண்ணிறைந்து காண்பவர் அன்புருவம் அடைந்தும் இன்புருவம் எய்தியும் பேரா இயற்கைப் பெருவாழ்வடைதல் ஒருதலை. வரிக்கு வரி சொற்கள் தோறும் எழுத்தெழுத்திற்கு அழகொழுகும் இளந்தமிழில் இங்ஙனம் ஒரு நூல் உருக்கொண்டது தமிழ் மக்களான நாமும் நம் முன்னோரும் பின்னோரும் செய்த பெருந்த வத்தின் உறுபயனே ஆகும் என்க”, என்று திருஅருட்பா பதிப்பு செம்மல் ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் இப்பதிக சிறப்பை வியந்து பேசுகிறார்கள்.

 

ஏட்டுச் சுவடிகள்:

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் முழுவதும் கிடைக்கப் பெற்றுள்ளன என ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இச்சுவடியின் முகாப்பேட்டில், "உ.சிவமயம். சண்முக நம. சுந்தரீ நம. வடிவுடை மாணிக்கமாலை” என்றும், காப்புச் செய்யுளுக்குப் பிறகு சிவ சிவ என்று பதினாறு முறையும் பெருமான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

பெருமான் அவர்களின் அன்பர் திரு தருமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய ஏட்டுப் பிரதியின் தலைப்பேட்டில் " "சிவ கணபதிதுணை. எனது சற்குருவாகிய சிதம்பரம் இராமலிங்க தேசிகர் திருவாய் மலர்ந்தருளிய வடிவுடை மாணிக்க மாலை. திருச்சிற்றம்பலம்" என்று குறித்திருக்கிறது.

 

முதற்பாவில் வடிவுடை மாணிக்கத்தை நம் பெருமானார் கரை கடந்த பேரன்போடு பாலூறு தேன்வாய் கொண்டு அமுதம் சொரிய அழைத்தலைத் தத்துவங்களெல்லாம் குழையப் பின்பற்றி அழைத்து இன்புறுக. பின்வரும் பாக்களில் பெரும்பாலன இத்தன்மையனவே’ என . பாலகிருஷ்ண பிள்ளை நெகிழ்கிறார்கள்.  

பதிகப் பொருண்மை:

வடிவுடை மாணிக்கமாலை என்னும் இந்த அற்புதப் பதிகம். வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது. வள்ளற்பெருமான் அவர்கள், ஒரு முறை திருவொற்றியூர் சென்று அம்மையப்பனை வழிபட்டு காலம் கடந்து வீடு திரும்பிய பின், வீட்டில் உள்ளவர்களை எழுப்பி உணவு கேட்க மனமில்லாது பசியோடு படுத்து இருந்தார். பெருமானின் பசியை தெரிந்து வடிவுடை அம்மையே, மனித வடிவு கொண்டு வந்து உணவு கொடுத்து, வள்ளல் பெருமானை பசியாற்றினார் என்கின்ற நிகழ்வு வள்ளல் பெருமானுடைய வரலாற்றில் காணக் கிடைக்கின்றது. வள்ளல் பெருமானும் இக்கருத்தை

இம்மைதனில் - அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது

நன்றிரவில்சோறளித்த நற்றாய்காண்

என்று நெஞ்சறிவுறுத்தலில் பாடுகின்றார்கள்.

இப்படி வள்ளல் பெருமானுக்கு பெரும் கருணையை செய்த வடிவுடை அம்பிகையை வள்ளல் பெருமான் அவர்கள் இந்த மாலையில் மிகச்சிறப்பாக வழிபட்டு மகிழ்கின்றார்கள். அம்பிகையினுடைய, அழகிய சாயலையும் அவருடைய பேரருட் கருணையையும், பேரருள் கோலத்தையும், இங்கு பெருமான் படுகின்றார்கள். அம்பிகையினுடைய தனிப்பெரும்கருணையே எல்லா உயிர்களையும் அன்போடு வாழ்விக்கின்றது என்றும், வள்ளற் பெருமான் இங்கு அகமகிழ்கிறார்கள்.

கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே” 10

என்றும் குறையாத அருள் குண மலையாக திகழ்கின்றவளே, சிவமாம் செம்பொருள் மீது யார் நாட்டமில்லாமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு தன் அருட் கருணையை செலுத்தாத அம்மயே. அன்பர்களுக்கு பேர் இன்பமாக விளங்குகின்றவளே!, திருவொற்றியூர் எம்பெருமான் இடப் பாகத்தை அலங்கரிக்கின்ற பெருந்தவமே!, வாடாத அழகிய மணி மலர் கொம்பினை போன்றவளே, வடிவுடை மாணிக்கமாகிய என்னுடைய தாயே உன்னை வணங்குகின்றேன் என்று மிக அழகாக இங்கு விண்ணப்பிக்கிறார் நமது பெருமான்.

தன்னுடைய குறைகளை எல்லாம் அம்பிகை பொருட்படுத்தாது அதைக் குணமாகக் கொண்டு தனக்கு திருவருள் செய்யவேண்டும் என்றும் பல பாடல்களில் விண்ணப்பிக்கிறார்கள்.

நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ணமோ எனைப் பெற்றளிக்கும்
தாயே கருணைத் தடங்கடலே ஒற்றிச்சார் குமுத
வாயேர் சவுந்தர
 மானே வடிவுடை மாணிக்கமே” – 26

என்னை பெற்ற அளித்த தாய் போன்றவலே, நீயே அடியேன் செய்யக் கூடிய பிழைகளை எல்லாம் கருத்தில் கொண்டால் எனக்கு திருவருள் செய்பவர்கள் யார்? யாருமில்லை. உனக்கு அடிமையாகிய யான். வேறு என்ன செய்ய முடியும். எனவே அருட்கடல் போன்றவளே, அழகிய மலரினை ஒத்த திருவாயினை உடைய, மான் போன்றவளே, அடியேனுடைய பிழைக் குறியாது எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று இங்கு விண்ணப்பிக்கிறார்.

வடிவுடை மாணிக்க மாலையின் எல்லாப் பாடல்களும்  செந்தமிழ் பொக்கிஷங்களாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் வார்த்தை அழகையும், அது பயின்று வருகின்ற முறையையும், எவ்வளவு விரித்து பேசினாலும் அதற்கு ஈடாகாது. எனவே அன்பர்கள் அனைவரும் அமுதமாகிய வடிவுடை மாணிக்கமாலையை பயின்று, அம்மையின் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...