ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

“திருஅருட்பா செல்வர்”  திரு. ஆனந்த பாரதி, பெங்களூரு.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் பத்தாம் பதிகமாகிய பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல். 

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட சிறந்த பாமாலை இது. திருவொற்றியூர் இறைவனான தியாகராசப் பெருமானிடம்  வள்ளல் பெருமான் விண்ணப்பம் செய்யும் பகுதியாக இது அமைந்துள்ளது. இப்பதிகத்திலுள்ள பத்து பாடல்களிலும் சிறந்த பழமொழிகளை கையாண்டு அதன் பின் தன் குற்றங்களை முறையிட்டு இறைவனிடம் திருவருள் வேண்டுகின்றார் நம் பெருமான். 

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப்பதிகத்தை இரண்டாம் திருமுறையின் பத்தாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் பத்தாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகர் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப்பதிகம் இரண்டாம் திருமுறையுள் 61 -வதாக இடம்பெற்றுள்ளது. 


ஏட்டுச் சுவடிகள்: 

இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, சுவடியில் ஏடு எண் 82, 83, 84 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, சிவமயம்” எனவும் “உ” “உ” எனவும் பெருமான் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பதிகப் பொருண்மை

பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை நோக்கி பெருமான், "நானோ தகுதியற்றவன், ஆனால் உன்னையே நம்பியிருப்பவன்" என்று சரணாகதி தத்துவத்தை முன்வைக்கிறார். அறியாமையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, அதை பொருத்து இறைவன் தனக்கு அருள வேண்டும் என முறையிடுவதாக   இப்பதிகம் அமைந்துள்ளது. 

விளக்கம்: 

1. வானை நோக்கி மண்ணில் நடப்பவன்:

முதல் பாடலில், "வானத்தைப் பார்த்துக்கொண்டே தரையில் நடப்பவன் கீழே விழுவது உறுதி" என்ற பழமொழியைப் போன்றது என் நிலை என்கிறார். இறைவா, உன் அருளை அடைய நினைக்கிறேன், ஆனால் என் கண்கள் உலகியல் இன்பங்களை (ஊன்) நோக்குகின்றன. இருப்பினும் என்னை உய்யப்பண்ணுவது உன் கடன் என்று இறைவனை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் பெருமான்.

“வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின்  அருள் வழியிடை நடப்பான்

ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய்”


2. வாய் இல்லான் பெருவழக்கு உரைப்பது போல்:

பேசத் தெரியாத ஒருவன் நீதிமன்றத்தில் பெரிய வழக்கை வாதிட நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதுபோல தகுதியற்ற நான் உன் அருளைப் பெற விழைந்தேன் என்கிறார். அன்பர்கள் மனதைக் கோயிலாகக் கொண்ட குன்றே, என்னை ரட்சிப்பாய் என்றும் பெருமான் இங்கு வேண்டுகின்றார்.

“வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம்

தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய்”. 

3. வித்தையின்றி விளைச்சல் விரும்புதல்:

விதையே விதைக்காமல் அறுவடையை எதிர்பார்க்கும் விவசாயியைப் போல, உன் திருவடியில் பக்தி என்பதே இல்லாமல் நான் முக்தியை (வீடுபேறு) எதிர்பார்க்கிறேன். இது முட்டாள்தனம் என்றாலும், உன் கருணைக்கு எல்லை இல்லை அல்லவா? என்றும் இறைவனிடம் இறைஞ்சுகின்றார். 

“வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர்ப் பதத்தில்

பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய்”

4. கலம் (கப்பல்) இன்றி கடல் கடத்தல்

பெரிய கடலைக் கடக்க ஒரு தோணியோ கப்பலோ தேவை. ஆனால், எந்த நற்செயலும் செய்யாமல் பிறவிக்கடலைக் கடக்க நினைக்கும் நாயினும் கடையவன் நான். என் பிழைகளைப் பொறுத்து அருள்வாய் "தியாகநாதா" என நமது பெருமான் உருகுகிறார்.

“கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும்

நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய்”

5. வெள்ளத்தில் பொன் புதைப்பவர்

பெருகி வரும் ஆற்று வெள்ளத்தில் ஒருவன் பொன்னை புதைப்பது போன்றது என் செயல். நிலையற்ற இந்த உலக ஆசைகளுக்கிடையே உன் திருவடியை என் நெஞ்சில் வைக்க நினைக்கிறேன். இது சிறுபிள்ளைத்தனமானது என்றாலும், குமரன் தந்தையே எனக்கு அருள் செய் என்கிறார்.

“போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடைப் புனித நின் அடியைச்

சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய்”

6. ஓட நினைத்து உறங்குபவன்

வெகுதூரம் ஓட வேண்டும் என்று நினைப்பவன், ஓடாமல் தூங்கினால் இலக்கை அடைய முடியுமா? உன் அருட்கடலில் திளைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது, ஆனால் மங்கையர் மயலில் ஆழ்ந்து கிடக்கிறேன். இந்த முரண்பாட்டை நீயே உன் திருவருள் தந்து போக்க வேண்டும் என முறையிடுகிறார்.

“ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில்

ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய்”

7. முதலீடு இன்றி லாபம் தேடுதல்

வியாபாரத்தில் ஒரு ரூபாய்கூட முதலீடு செய்யாமல் பெரும் லாபத்தை எதிர்பார்க்கும் மூடனைப் போன்றவன் நான். உன்னைத் துதிக்கும் குணம் இல்லை, ஆனால் அருள் வாழ்வு மட்டும் வேண்டும் என்று நினைக்கிறேன். நெற்றிக்கண்ணனே, எனக்கு உன் அன்பு அமுதைத் தந்து அருள்வாய் என அருள் ஆசைப் படுகின்றார்.

“முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்

துதல் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ”

8. கல்லைத் துணையாகக் கொண்டு நதி கடத்தல்

நீரில் மூழ்கும் கல்லைத் தழுவிக்கொண்டு ஆற்றைக் கடக்க நினைப்பவன் மூழ்கிப்போவான். காமம் என்ற கல்லைச் சுமந்துகொண்டு பிறவிக்கடலை நீந்தும் எனக்கு, தில்லை மன்றுள் ஆடும் அமுதமே, நீயே கைகொடுத்து காத்தருள வேண்டும் எனவும் வேண்டுகின்றார்.

“கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால்

எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ”

9. நெய்யால் நெருப்பை அணைக்க முயலுதல்

நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது இன்னும் அதிகமாக எரியுமே தவிர அணையாது. அதுபோல, பொய் நிறைந்த உலக வாழ்க்கையைச் செய்துகொண்டே பாவத்தைப் போக்க நினைக்கிறேன். இது நெய்யால் நெருப்பை அணைக்கும் முயற்சி போன்றது. விமலனே, உன் அருள் எனக்குக் கிடைக்குமா?  என ஏங்குகின்றார் நமது பெருமான்,

“நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த

பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ”

10. நீர் ஊற்றி விளக்கு எரித்தல்

எண்ணெய் ஊற்றி எரிக்க வேண்டிய விளக்கில் தண்ணீரை ஊற்றி எரிக்க நினைப்பவன் எவ்வளவு பெரிய அறிவிலி! பக்தியால் உன்னை அடையாமல், உலக விஷயங்களில் மூழ்கிக் கிடக்கிறேன். மேகம் மழையைப் பொழிவது போல உன் கருணையை என் மீது பொழிந்து என்னை ஆட்கொள்வாயாக என நிறைவாக பெருமான் இங்கு முறையிடுகின்றார்கள்.

“நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான்

பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனைக் கூவி நின்று ஆள்வாய்”

இப்பதிகத்தின் மூலம் நம் ஒவ்வொருவருடைய நிலையையும் அழகிய பழமொழிகள் கொண்டு பெருமான் உணர்த்துகின்றார். நாம் இறைவனிடம் திருமுன்பு ஓத இது சிறந்த பதிகம் என்பதில் ஐயமில்லை. இப் பதிகத்தை ஓதி,  நம் சிறுமைகளை இறைவனிடம் முறையிட்டு, அவைகள் நீங்கப்பெற்று, நாம் பேரின்ப சன்மார்க்க வாழ்வில் திளைப்போம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஒன்பதாம் பதிகமாகிய அவலத் தழுங்கல். 

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட அழகிய பாமாலை இது. திருவொற்றியூர் இறைவனான தியாகராசப் பெருமானிடம் தன் குறைகளை எடுத்துரைத்து வள்ளல் பெருமான் உருகும் பகுதியாக அமைந்துள்ளது. இப்பதிகத்திலுள்ள பத்து பாடல்களும் தன் மனதின் குற்றங்களை நீக்கி, இறைவன் தன் அளப்பரிய கருணையைத் தர வேண்டும் உருக்கமாக விண்ணப்பிக்கிறார். 

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஒன்பதாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஒன்பதாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 40 -வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, சுவடியில் ஏடு எண் 84, 85 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, சிவமயம் ஒற்றியூர் ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பதிகப் பொருண்மை

அவலத் தழுங்கல் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை நோக்கி பெருமான் தனது குற்றம் குறைகளை ஆன்ம உருக்கத்தொடு முறையிடுவதாக   இப்பதிகம் அமைந்துள்ளது. 

சிலபாடல்களும் விளக்கமும்: 

பாடல்களின் தொடக்கத்திலேயே பெருமான், தான் எந்த நற்பயனையும் அடையாத "நிர்மூடன்" என்றும், வீண் வாதம் பேசும் வஞ்சகர்களுடன் காலத்தைக் கழித்தவன் என்றும் வருந்துகிறார். நஞ்சைக் கண்டாலே உலகம் நடுங்கும், ஆனால் வள்ளல் பெருமானோ, "என் மனதின் வன்மையையும் அன்பில்லாத தன்மையையும் நினைத்தால் அந்த நஞ்சமே நடுங்கும்" (பாடல் 1) என்று குறிப்பிடுவது மிக நீள நினைக்கத்தக்கது. 

ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் 

உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன்

வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் 

இழுக்குற வன்மைகள் பேசி

ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் 

அன்பு இலாத என் வன்பினை நினைக்கில்

தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

பெருமான், தன்னைத் தாழ்த்திக் கொண்டாலும், இறைவனிடம் பெருமான் காட்டும் உறுதி ஈடு இணையற்றது. "விஷ்ணு அல்லது பிரம்மன் பதவியைக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம், உன் சன்மார்க்க அடியாருடன் தொடர்பு கொள்ளும் வாழ்வே எனக்கு வேண்டும்" என பாடல் 6 இல் விண்ணப்பிக்கிறார். 

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி 

வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன்

மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் 

மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன்

ஒருப்படாத இ என்னளவு இனி உன் 

உள்ளம் எப்படி அப்படி அறியேன்

திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

உலகியல் வாழ்வில் நிலையற்ற இன்பங்களைத் தேடி அலைவதையும், கல்லினும் வலிய நெஞ்சம் கொண்டிருப்பதையும் பெருமான் இங்கு சுட்டிக்காட்டுகிறார். "அலையில் அகப்பட்ட துரும்பு போல" (பாடல் 7) என் மனம் அலைபாய்கிறது என்றும், தவமே உருவான பெரியோர்களின் பெருமையை அறியாது கயவர்களுடன் கலந்து பொழுதைக் கழித்தேன் என்றும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

நிலையிலா உலகியல் படும் மனத்தை 

நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன்

விலையிலா மணியே உனை வாழ்த்தி 

வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன்

அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் 

அற்பனேன் திரு_அருள் அடைவேனே

சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

நிறைவாக, "மின்னிடைப் பொலி வேணியம் பெருமானே, நான் உன்னை விட்டு வேறல்ல; என்னை ஏற்றுக்கொள்வது உன் கடன்" (பாடல் 9) என்று சரணடைகிறார். எத்தனை பிழைகள் செய்திருந்தாலும், இப்பிறவியிலும் எப்பிறவியிலும் நீயே கதி  (பாடல் 10 )என்று இறைவனின் திருவடிகளை பெருமான் வழுத்துகின்றார்.

இச்சிறந்த பதிகத்தை ஓதி,  நம் சிறுமைகளை இறைவனிடம் முறையிட்டு, அவைகள் நீங்கப்பெற்று, நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


முத்தி உபாயம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 முத்தி உபாயம்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் எட்டாம் பதிகமாகிய முத்தி உபாயம்

பதிக அமைப்பு:

வஞ்சித்துறை விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட மிகச்சிறிய அழகிய பாமாலை இது. குழந்தைகளும் நினைவு வைத்து பாடுவது ஏற்றது. திருக்குறள் போல மிகவும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. இப்பதிகத்தின் பாக்களில் ஒற்றியூர் இறைவனை வணங்கி வாழ்த்த வேண்டும் என தன் நெஞ்சுக்கு வள்ளல் பெருமான் அறிவுரைப் பகர்கின்றார்கள். 

“ஒற்றி” எனத் தொடங்கும் இப்பதிகம் ‘ஒற்றியே’ என்னும் சொல் கொண்டு நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் எட்டாவதாக வைத்துச் சிறப்பித்தார். 


அதன் புகைப்படம்:


திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் எட்டாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 71-வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, இரண்டாம் சுவடியில் ஏடு எண் 201 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, ஒற்றியூர் ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பதிகப் பொருண்மை

முத்தி உபாயம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. திருஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை நெஞ்சமே நீ வாழ்த்தி வணங்கு, அவனை வணங்கினால் உனக்கு முத்தி நிச்சயம், அத்தகைய முத்தியினை தரும் இறைவனின் திருக்கோயில் தூரமல்ல, என்றெல்லாம் தமது நெஞ்சுக்கு அறிவுரை கூறி திருஒற்றியூர் பூங்கோயிலுக்கு அழைக்கின்றார் பெருமான்.   

சில பாடல்களும் விளக்கமும்: 

உயிர்களாகிய நாம் முக்தி அடைவதற்கு வள்ளல் பெருமான், இந்த அருட்பதிகத்தில் பல்வேறு உபாயங்களை குறிப்பிடுகின்றார். அதிலே மிக முக்கியமான உபாயம். இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டும் என்பது. இந்த பக்தி தான் நமக்கு முக்தியைக் கொடுக்கும். இறைவன் மீது நாம் செய்கின்ற அன்பு,  நமக்கு முத்தியாகிய பேரின்ப நிலையை பயக்கும் என வள்ளற் பெருமான் இங்கு குறிப்பிடுகிறார். இதை மிக அழகாகவும் எளிமையாகவும் 

“சேர நெஞ்சமே

தூரம் அன்று காண்

வாரம் வைத்தியேல்

சாரும் முத்தியே.

முத்தி வேண்டுமேல்

பத்தி வேண்டுமால்

சத்தியம் இது

புத்தி நெஞ்சமே”

எங்கின்றார்.                  

மற்றொரு பாடலில்:

பிறவிப்பிணி முதல் எல்லா பிணிகளும், ஒற்றியூர்அப்பன் திருவடிகளைத் தொழ நீங்கும் என்கிறார்.

ஊற்றம் உற்று வெண்_

நீற்றன் ஒற்றியூர்

போற்ற நீங்குமால்

ஆற்ற நோய்களே.

நோய்கள் கொண்டிடும்

பேய்கள் பற்பலர்

தூய்தன் ஒற்றியூர்க்கு

ஏய்தல் இல்லையே.  

இச்சிறந்த பதிகத்தை ஓதி,  இறைவனிடம் அன்பு பூண்டு, வழிபட்டு,  நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


சிவபுண்ணியத் தேற்றம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 சிவபுண்ணியத் தேற்றம்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஏழாம் பதிகமாகிய சிவபுண்ணியத் தேற்றம்

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் திருநீற்றில் அவசியம் இறைவனின் பெருமை முதலிய செய்திகளை இங்கு உறுதியாகப் பாடிப் பரவுகின்றார் வள்ளல் பெருமான். 

“பொருட்டே” என்னும் சொல் பாடல் தோறும் மகுடம் பெற்று நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஏழாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஏழாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 38 வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 28, 29 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ. சிவமயம், சிவமயம்” என்றும்,  “உ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பதிகப் பொருண்மை

சிவபுண்ணியத் தேற்றம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. தொன்மைச் சைவ நெறியின் அருட் சின்னமாம் திருநீற்றின் சிறப்பையும், அச் சைவ நெறியின் கண் இருந்தும் அதை அணியாது இருத்தலின் குறையும், சிவபெருமானின் பல்வேறு அருள் வரலாறுகளும், இப்பதிகத்தில் பெருமானால் விதந்து பேசப்படுகின்றது. 

சில பாடல்களும் விளக்கமும்: 

சைவ நெறியில் நின்று ஒழுகுபவர்களுக்குத் திருநீறு அணிவது மிகவும் அவசியமானதாகும். சைவ சமய அருட்சின்னங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திருநீறு அருளாளர்களால் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் முதலிய அருளாளர்கள் அருளிய "மந்திரமாவது நீறு" என்னும் பதிகத்தை ஓதுவோருக்கு, திருநீற்றின் உண்மைப்பொருள் நன்கு புலப்படும். அத்தகைய அருளாளர்களின் வழிநின்று, வள்ளல் பெருமானும் அத்திருநீற்றின் உண்மையையும் பெருமையையும் இங்கு சிறப்பித்துப் பாடுகின்றார்.

திருநீறு அணிவது என்பது சைவ சமயத்தின் ஒரு முக்கியமான கொள்கையாகும். இத்திருநீற்றை அணிவது, இறை அன்பை வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. திருநீறு அணிந்தவரே சிவபெருமானிடம் மிகுந்த அன்பு பூண்டவர் என்பதற்கு அது ஒரு முக்கிய சான்றாகும் என்பது சைவர்களின் நம்பிக்கை. அந்த வகையிலே வள்ளல் பெருமான் திருநீற்றை 'கடவுள் நீறு' எனக் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட கடவுளிடத்தில் இருக்கின்ற அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாகிய அத்திருநீற்றை அணியாதவரை, வள்ளல் பெருமான் இங்கு 'கடையர்' எனக் குறிப்பிடுகின்றார்.

எதற்காகத் திருநீறு அணிய வேண்டும் என்றால், அத்திருநீற்றின் வெண்மையைப் போல நம் மனமும் தூய்மையுற்று, நாம் ஒற்றியூர் இறைவனைச் சென்று வணங்கி வழிபட வேண்டும். அதன் பொருட்டு நாம் திருநீறு அணிதல் வேண்டும் என வள்ளல் பெருமான் இங்கு குறிப்பிடுகின்றார்.

அதுமட்டுமின்றி, இராவணனின் சாமகானப் பாடலுக்கு இசைந்து, இறைவன் அவருக்கு வாழ்நாளும் வாளும் அளித்தருளிய வரலாற்றையும் நமது பெருமான் இங்கு நினைவுகூர்ந்து பேசுகிறார்.


அப்பாடல் வருமாறு:

கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்

கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக

அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை

அணியும் தொண்டரை அன்புடன் காண்க

தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்

தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை

நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய

நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.

மற்றொரு பாடலில்:

சைவ நெறியையும் ஜீவகாருண்யத்தையும் கடைப்பிடிக்காமல், துன்மார்க்கத்தில் நடப்போரை நாம் ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்று வள்ளல் பெருமான் நமக்கு அறிவுறுத்துகிறார். மாறாக, உண்மை ஒழுக்கத்தையும், ஜீவகாருண்யத்தையும் மேற்கொண்டு சைவ நெறியில் நடப்போரை நாம் மனதார மதித்து, அவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்.

எதற்காக நாம் இந்த வழியில் நடக்க வேண்டும் என்றால், உண்மையான அடியார்களை (நண்பர்களை) நம்மோடு இணைத்துக்கொண்டு அன்பு செலுத்தினால், அவ்வன்பு திருவொற்றியூர் இறைவனிடம் நாம் வைத்துள்ள அன்பை மேலும் வளர்க்கத் துணைபுரியும். அதன் பொருட்டே நாம் இதைச் செய்ய வேண்டும் என வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்.

அதுமட்டுமின்றி, அந்த இறைவன் எப்படிப்பட்டவர்? அவர் செய்த அருள் விளையாடல்கள் எத்தகையவை? என்பதையும் வள்ளலார் நமக்கு உணர்த்துகிறார். மேரு மலையை வில்லாக வளைத்தவர்; திருமாலைத் தனக்கு வாகனமான இடபமாக (காளை) உடையவர்; ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தவர்; பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து உண்டாகிய ஆலகால விடத்தைத் தானே அருந்தி உயிர்களைக் காத்தவர்—எனப் பலவாறாக நமக்கு அருள் செய்த அந்த இறைவனை, நாம் அன்போடு வழிபட வேண்டும் என வள்ளல் பெருமான் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

அப்பாடல் வருமாறு:

நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்

நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக

கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்

கருதி நின்றுளே கனிந்துநெக் குருக

மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்

மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்

அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்

அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.

இச்சிறந்த பதிகத்தை ஓதி,  இறைவனின் அருட் பெருமைகளை உணர்ந்து ஓதி, வழிபட்டு,  நாம் பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...