சனி, 22 மார்ச், 2025

திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - சிவநேச வெண்பா - ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திருஅருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம்முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் நான்காவது பதிகமாகிய, சிவநேச வெண்பா

பதிகத் தலைப்பின் விளக்கம்:

நேரிசை வெண்பா என்பது தமிழில் மரபுச் செய்யுள் வகைகளில் ஒன்றான வெண்பாவின் துணைப்பா வகையாகும். நேரிசை வெண்பாவானது பொதுவான வெண்பாவின் இலக்கணங்களோடு நான்கு அடி உடையதாக இருக்கும்.

இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும். நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் அடுத்த இரண்டும் வேறு வகை எதுகை உடையனவாகவோ இருக்கும். அதற்குத் தக, சிவ பரம்பொருள் மீது நேரிசை வெண்பாவினால் பாடப்பட்ட 100 செய்யுள்கள் அமைந்த பாமாலை, ஆதலினால் இது "சிவநேச வெண்பா" என்றும் பெயர் பெற்றது.

இப்பதிகம் இரண்டு காப்பு செய்யுள்களோடு அமைந்துள்ளதால் இது ஒரு தனி நூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக்காப்புச் செய்யுள்களும் நேரிசை வெண்பாவில் அமைந்துள்ளது.

திருவருட்பாவின் முதல் பதிப்பின் ஆசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், தொழுவூர் வேலாயுதனார். அவர் இப்பதிகத்தை முதல் திருமுறையில் நான்காவது நூலாக வைத்துள்ளார். இப்பதிகத்திற்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும் வேலாயுதனார் குறிப்பித்துள்ளார். அவரின் இவ்வரியக் குறிப்புகளே பெருமானாரின் உண்மைக் கருத்துக்களை நாம் உணர நமக்குத் துணை செய்கின்றது. ஊரனடிகளின் வரலாற்று முறைப் பதிப்பில் இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் நான்காவது நூலாக அமைந்துள்ளது.

திருவருட்பா.

சிவநேசவெண்பா.

காப்பு.

நேரிசை வெண்பா.

திருச்சிற்றம்பலம்.


முன்னவனே யானை முகத்தவனே முத்திரலஞ்

சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே

சிற்பரனே யைங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின்றான் சரண்,


வீறுடையாய் வேலுடையாய் வெற்புடையாய் விண்னுடையாய்

நீறுடையாய் நேயர்கடங் நெஞ்சுடையாய் - கூறு

முதல்வாவோ ராறு முகவாமுக் கண்ணன்

புதல்வாகின் றாளெம் புகல்,


திருச்சிற்றம்பலம்.


சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப் 

பேர்சான்ற வுண்மைப் பிரமமே - நேர்சான்றோர் 

நாடும் பரசிவமே நாயேனுக் கன்புரின்பா 

னீடும் படிநி நிகழ்த்து.

பதிக அமைப்பு: 

இப்பதிகத்தின் கலப்புச் செய்யுள்களில், முதல் செய்யுளில் நாத வடிவாம் மூத்தப் பிள்ளையாரையும், இரண்டாம் செய்யுளில் முருகவேலார் இளைய பிள்ளையாரையும் போற்றி வழிபடுகின்றார் பெருமானார்.

100 வெண்பாக்களைக் கொண்ட இப்பதிகத்தில் ஒவ்வொரு வெண்பாவும் விலைமதிப்பற்றவை. பக்தி சுவை நனிச் சொட்ட சொட்ட மதுரமென இனிப்பவையாக உள்ளது.

இப்பதிகத்தின் காப்புச் செய்யுள்கள் இரண்டிற்கு மட்டுமே பெருமானாரின் கையெழுத்து மூலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என பதிப்புச் செம்மல் ஆ.பா அவர்களும் ஊரனடிகளாரும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வெண்பாக்கள் தோறும், தனக்கு இறைவன் விரைந்து திருவருள் செய்ய வேண்டும் எனவும், இறைவன் திருவருளால் அவரை நினைக்கின்றேன் எனவும், தனது மலம், மாயைக் குற்றங்களை இறைவன் நீக்கி அருள வேண்டும் எனவும் பெருமான் விண்ணப்பிக்கின்றார்.

சாதியின் கொடுமைகள் நீங்க வேண்டும் என பெருமான் இப்பதிகத்தின் 5ஆம் பாடலில் விண்ணப்பிக்கின்றார்.

"அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் இப்பாரில் சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம் சோதிஉரு வாக்குந் துணை."

இறைவன் வந்தியின் பிட்டு உண்ட வரலாறு, இறைவன் ஆலம் உண்ட அருட்செயல், சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய வரலாறு முதலியவற்றை முன்னோர்களின் வழி நின்று நினைவு கூறுகின்றார்.

அரிச்சந்திரனின் வரலாறும் 62ஆம் பாடலில் பெருமானாரால் நினைவு கூறப்படுகின்றது. ஒவ்வொரு வெண்பாவும் அதற்கே உரிய சிறப்பில் தேர்ந்தவை.

பொருள், சுவை, இலக்கிய, இலக்கண சுவைகளோடு அமைந்துள்ளது. அன்பர்கள் பலமுறை ஓதி ஓதி பயன்பட வேண்டிய பதிகம் இது. இப்பதிகம் இறை அன்பை வளர்க்கும். இறைவனின் பெருமையையும் அடியார்களின் பெருமையையும் உணர்த்தும்.

அன்பர்கள் ஓதி அருள்நலம் பெற வேண்டுகின்றேன். 

துணை நூல் பட்டியல்:

1. திருவருட்பா முதல் பதிப்பு. (1867 தொழுவூர் வேலாயுதனார்)

2. திருவருட்பா செம்பதிப்பு. (7ஆம் நூல் ஆ. பாலகிருஷ்ணன்)

3. திருவருட்பா வரலாற்று முறைப் பதிப்பு ஊரனடிகள்.

4. தமிழ் இலக்கிய அடிப்படை.

நன்றி வணக்கம்.

வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!


மகாதேவ மாலை - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 மகாதேவ மாலை - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் ஐந்தாவது நூலாகிய மகாதேவ மாலை.

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  தலைமை தெய்வமாம் மகாதேவரின் மீது இயற்றப் பட்ட 100 பாடல்கள் கொண்ட பாமாலை என்பதால் இப்பதிகம் மகாதேவ மாலை என பெயர் பெற்றுள்ளது. 1-68 மற்றும் 100 வது பாடல்களில் “”தேவே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறை உறுகின்றது.

இம் மகாதேவ மாலை, காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக் காப்புச் செய்யுள் ஒன்று மட்டும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. அது கருதியே, திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் ஐந்தாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய நூல் மூன்றாம் திருமுறையுள் ஐந்தாவதுநூலாக இடம்பெற்றுள்ளது.

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, இம் மாலையை உணர்ந்து ஓதும் அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் உண்மை கருத்துக்களை உணர உதவியாய் உள்ளது என்பது இங்கு நினைக்கத்தக்கது. 

பதிகச் சிறப்பு:

“மஹாதேவ மாலை என்னும் இத்தெய்வநூலினை ஆழ்ந்த பத்திமையோடும், பேர் ஆர்வத்தோடும், பெரு வியப்பொடும்,  பேர் ஒளியோடும், பயிலாத பொதுநெறித் திருவாளர்களே அருள் விளங்கும் நம் நாட்டில் இல்லை'   தேவாரப் பெருமறையின்கண் திருத்தாண்டகம் பொலிவது போல் இந்நூல் திரு அருட்பாவில் பொலிந்து விளங்குகிறது. இறைவனை "வேதங்கள் ஐயா என, ஓங்கிய ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!" என்றழைக்கும் தெய்வத் திருவாசகத்தின் உட்கிடையையும் அநுபவத்தையும் உணர்ந்துணர்ந்து நுகர்ந்து நுகர்ந்து தத்துவங்க ளெல்லாம் ஒருங்கே சுவைத்து சுவைத்து இன்புறுவது போன்று இருக்கிறது. நம் பெருமானார் இராமலிங்க அடிகளார் தம்மை மறந்து அருளமுதம் உண்டு தேக்கித் தெய்வத் தீந்தமிழில் தமிழ்நாட்டின் தவப்பயனாகத் திருவாய் மலர்ந்தருளிய இந்நூல்” என்று திருஅருட்பா பதிப்பு செம்மல் ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் இப்பதிக சிறப்பை வியந்து பேசுகிறார்கள்.

ஏட்டுச் சுவடிகள்:

இம் மகாதேவ மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் முழுவதும் கிடைக்கப் பெற்றுள்ளன என ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சுவடியின் முதல் ஏட்டில் "உ.சிவமயம். கணபதி துணை. சண்முகன்றுணை. மஹாதேவமாலை" என்று பெருமான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். 

பெருமான் அவர்களின் அன்பர் திரு தருமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய ஏட்டுப் பிரதியின் தலைப்பேட்டில் "ஓம் சிவாய நம, எனது சற்குருவாகிய சிதம்பரம் இராமலிங்க தேசிகர் திருவாய் மலர்ந்தருளிய மஹாதேவ மாலை" என்று குறித்திருக்கிறது. இவை தவிர இந் நூலுக்கு வேறு மூன்று பிரதிகளும் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. 

“பெருங்கருணையும் பேரறிவும் எப்பாங்கரும் எஞ்ஞான்றும் எவ்வுயிரினிடத்தும் பொங்கித் ததும்பும் இறைவனுடைய பேரருள் வடிவத்தை, நம் பெருமானார், தாம் கண்டு அநுபவித்தவாறு, ஏழை எளியோம் ஆகிய நம் பொருட்டு ஓர் ஓவியமாகத் தேன்வழியும் அமுதச் சொற்களால் பேரன்போடும் பேருவகையோடும் சாயல் பெறத் தீட்டியிருத்தல் கண்டு மகிழ்க” என்று ‘கருணைநிறைந் தகம்புறமும்’ என்னும் இக்காப்புச் செய்யுல் குறித்து ஆ. பாலகிருஷ்ண பிள்ளை நெகிழ்கிறார்கள்.   

பதிகப் பொருண்மை:

மகாதேவ மாலை எனும் இப்பதிகத்தில், இறைவனை சமய மதங்களைக் கடந்த பொதுநிலையில் வைத்து வள்ளற் பெருமான் விண்ணப்பித்து வழிபடுகின்றார்கள். பாடல்கள் “தேவே” என நிறைவுற்று. இறைவனை பொதுவாகச் சுட்டுகின்றது. 

1 - 68 வரையிலான பாடல்கள் இறைவன் இவ்வுலக பொருட்களாகவும், தத்துவங்களாகவும், ஞான பொருட்களாகவும், இருந்து. எவ்வாறெல்லாம் அதில் விளங்கி திருவருள் செய்கின்றார் என்கின்றவாறு வள்ளல் பெருமான் இறைவனுடைய தன்மைகளை இங்கு விவரிக்கின்றார். 

69 – 100 வரையிலான பாடல்களில்  இறைவனுடைய திருவருள் தனக்கு வேண்டும் என்றும் தனது குற்றங்களையெல்லாம் இறைவனிடம் விண்ணப்பித்தும், அக் குற்றங்களை கருதாது இறைவன் தன்னை ஆட்கொள்ள வேண்டுமென்றும், மலமாயங்களினால் தான் அடைகின்ற துன்பங்களை இன்னது என்றும், தனக்கு அம்மல மாயை குற்றங்களை நீக்கி இறைவன் திருவருள் செய்யவேண்டும் என்று இறைவனிடத்தில் விண்ணப்பித்து வள்ளற் பெருமான் இங்கு இறைஞ்சுகிறார்.

ஐந்தொழில் செய்கின்ற கர்த்தர்கள் முதல் யாராலும் சென்று காணமுடியாத இறைவன்,  தானே தேடி வந்து சில ஆன்மாக்களை கலந்து கொள்கிறாராம். யார் அந்த ஆன்மாக்கள் அவர்களுடைய தன்மை எத்தகையது என்பதை வள்ளற்பெருமான் இந்த மகாதேவ மாலையின் 49 ஒன்பதாவது பாடலில் குறிப்பிடுகின்றார்கள்.

வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்

நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை

மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற

வான்சுடரே ஆனந்த மயமே, ஈன்ற

ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்

அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே. 

தாயைக் காணாது கலங்குகின்ற இளம் கன்றினைப் போல. கசிந்து உருகி இறைவனிடத்திலேயே அன்பு வைக்கின்ற அடியவர்களை இறைவன் தானே தேடி வந்து கலந்து கொள்கின்றார் என வள்ளற் பெருமான் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

இந்த உலகத்தில் இருக்கின்ற பொருட்கள் எல்லாம் அளவைகளுக்கு உட்பட்டன. இந்த உலகத்தில் எதை எதையெல்லாம் அளக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்களோ அவைகள், எல்லாவற்றையும் அளப்பதற்கு ஒரு கருவியை அல்லது ஒரு வழியை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால் எந்த கருவி கொண்டும், எந்த அறிவியலைக் கொண்டும் அளக்க முடியாத ஒரு பொருள் இறைவன், அந்த இறைவனுடைய நீளமும், அகலமும், அவனுடைய வடிவமும், வண்ணமும் என்றைக்கும் யாராலும் அளக்க முடியாதது. அது அளவைகளை கடந்தது என்கின்ற அருங்கருத்தை வள்ளற் பெருமான். இந்த மகாதேவ மாலையின் 54 ஆவது பாடலிலே மிக அழகாக குறிப்பிடுகின்றார்கள்.

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட

பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்

வாராய பலபொருளும் கடலும் மண்ணும்

மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்

ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை

ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

 இறைவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன், சமய மதங்களைக் கடந்தவன், பல்வேறு சமயங்களும் மதங்களும், அவைகளுடைய அனுபவத்திற்கு தக்க வகையில் இறைவனுக்கு வடிவம் வண்ணங்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர். அதை பின்பற்றுகின்றவர்களும் பலர். ஆனால் யார் எந்த சமயத்தை பின்பற்றினாலும், அந்த சமயத்தினுடைய நிறைவு நிலையில் வாய்ப்பது ஒரு பொருளான இறை அனுபவமே. எனவே எல்லா சமயங்கள் உடைய முடிவும் கடவுள் என்கின்ற ஒரு பொருளே. 

பல்வேறு வழியாக ஓடி வருகின்ற ஆறுகள் நிறைவாக கடலிலே சென்று கலப்பது போல பல்வேறு வழிகளை காட்டி மக்களை நெறிப்படுத்துகின்ற சமயங்கள் நிறைவாக சங்கமிப்பது இறைவன் என்கின்ற ஒருவன் இடத்திலே. அவனே அருட்பெருஞ்ஜோதி. அந்த ஒப்பற்ற ஒரு பொருளே எல்லா சமய மதங்களுக்கும் நிறைவானது என்கின்ற சமரசத்தை வள்ளல் பெருமான் அவர்கள் இந்த 49 வது பாடலிலே உணர்த்துகின்றார்கள்.

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்

தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்

செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவ தேவே.

இவ்வாறு ஞானக் களஞ்சியமாக விளக்குகின்ற மகாதேவ மாலை. திருவருட்பாவிற்கு கண் போன்று விளங்குகின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. எனவே பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இன்நூலினை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

 


நெஞ்சறிவுறுத்தல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 நெஞ்சறிவுறுத்தல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும். திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் மூன்றாவது நூலாகிய நெஞ்சறிவுறுத்தல்.

பதிகத்  தலைப்பின் விளக்கம்:

கலிவெண்பா, வெண்பா வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும். அதன்படி, நேரிசைக் கலிவெண்பாவால் இயற்றப் பட்ட 703 கண்ணிகளைக் கொண்ட  மனதிற்கான அறிவுரை என்பதால் இப்பதிகம் நெஞ்சறிவுறுத்தல் (நெஞ்சு - மனம், அறிவுறுத்தல் - நல் வழிப்படுத்தல்/உபதேசம்) என பெயர் பெற்றுள்ளது.

நெஞ்சறிவுறுத்தல், காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக் காப்புச் செய்யுள்கள் குறள் வெண்பாவில் அமைந்துள்ளது. 

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் மூன்றாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, பிற்கால உரையாசிரியர்களுக்கு வள்ளல் பெருமானின் உண்மைக் கருத்தை அறிவதற்கு மிக உறுதுணையாக அமைந்துள்ளன என்பது இங்கு நினைந்து போற்றத்தக்கது.

பதிக அமைப்பு:

இந்நூலின் காப்பு செய்யுள்களில் முறையை, நாத வடிவாம் கணபதியையும், ஒளிப்பிழம்பில் தோன்றிய முருக வேலையும் வாழ்த்துகின்றார் வள்ளல் பெருமான். 

703  கண்ணிகளைக் கொண்ட இந்நூலில், முதல் மூன்று கண்ணிகளில், நெஞ்சை அழைத்து அதைப் பாராட்டி, தான் கூறும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும் எனப் பணிக்கின்றார்.

4 முதல் 39 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் எதுவாய், எங்கனம் திகழ்கின்றான் என்பதை போற்றி புகழ்கின்றனர்.

40 முதல் 52 வரையிலுள்ள கண்ணிகளில்  இறைவன் திருவருள் பெற்ற சுத்த சன்மார்க்க ஞானிகளின் மெய்ப்புகழை பேசுகிறார்.

53 முதல் 59 வரையிலுள்ள கண்ணிகளில், இறைவனை நிருத்தன் என்றும் தீர்த்தன் என்றும், வண்ணன் என்றும், வினோதன் என்றும் பலவாறு புகழ்ந்து பரவுகின்றார்.  

60 முதல் 99 வரையிலுள்ள கண்ணிகளில், இறைவன் செய்யும் அதி அற்புதங்களை நினைந்து புகழ்ந்து சித்தனே என விளிக்கின்றார்.

இக் கண்ணிகளை ஆராய்ந்து ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் பதிப்பித்த குறிப்புகள் மிகவும் பயன் உள்ளது, இனிவரும் குறிப்புகள்  அப்பெருமகனாரின் நெஞ்சறிவுறுத்தல் பதிப்பில் கண்ட குறிக்கப்பட்ட குறிப்புகளே!

100 முதல் ஒன்பது கண்ணிகளில் இறைவன் ஒரு கள்வனே போல் மறைந்து நின்றது. தொழிற்படுதலை மொழிந்து வைத்திருப்பது கண்டு மகிழ்க.

110 முதல் ஐந்து கண்ணிகளில் இறைவனைத் தந்திரம் கைதேர்ந்த ஒருவன் போல் இயங்குவதாக இயம்பியிருப்பது காண்க. 

115 முதல் 129 வரையிலான கண்ணிகளில் இறைவனை ஒரு தேவனே போல் தொழிற்படுவதாகச் சொல்லியிருப்பது காண்க, 121 முதல் ஒன்பது கண்ணிகளில் பத்திமையுடைய அடியார்களது தன்மையையும் அவர்கள் அடையும் அனுபவத்தையும் அறிவித் திருப்பது கண்டு மகிழ்க.

130 முதல் 160 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் சிவமூர்த்தம் சம்பந்தமாகப் போற்றப்பட்டிருப்பது காண்க.

161 முதல் நான்கு கண்ணிகளில் இறைவனை ஞானோபதேசம் செய்யும் தேசிக மூர்த்தியாக வருணித்திருப்பது காண்க.

165 முதல் பத்துக் கண்ணிகளில் இறைவனைத் தந்தையாகப் போற்றி யிருத்தலைக் காண்க.

175 முதல் 186 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனைத் தாயாகப் போற்றியிருத்தலையும், 176, 186-இல் அடிகளார்தாம் நேரில் கண்டனுபவித்த கருணையை உரைத்தலையும் காண்க.

187 முதல் 207 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனை அம்மானாகவும் தோழனாகவும் சுற்றமாகவும் நண்பனாகவும் அரசனாகவும் செல்வமாகவும் ஆண்டானாகவும் விவரித்திருப்பது கண்டு தெளிக.

208 முதல் 232 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனுடைய வடிவத்தின் பேரழகு வருணிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்க. 

233 முதல் ஐந்து கண்ணிகளில் இறைவனது கண்கவரும் வனப்பில் திளைப்பதனால் உண்டாகும் பெரும்பயனைக் கூறுவது கண்டு தெளிக.

238 முதல் 268 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் அருள்தன்மையை வியந்தும் நெஞ்சின் ஈரமில்லாத பாழுந்தன்மைக்காக வருந்தியும் விவரித்திருப்பது காண்க.

269 முதல் 286 வரையிலுள்ள கண்ணிகள் மனத்தின் கேடுகெட்ட தன்மையை அதாவது விலங்குகட்கும் கீழ்ப்பட்ட தன்மையை விளக்குகின்றன.

287 - ஆம் கண்ணியில் நெஞ்சுக்கு இனிய சொல் சொல்லப்படுகிறது.

288 - முதல் நான்கு கண்ணிகளில் மனத்தின் பொய்யும் 

292 முதல் 396 வரையிலுள்ள கண்ணிகளில் ஒருவனுக்குப் பால் (Gender) விளைகின்ற பேரரிழிவினையும் பெருங் கேட்டினையும் விவரித்து, அம்மயக்கம் அறவே தெளிதற் பொருட்டு, ஒருவன் தன் மனத்திற்கு அந்தரங்கத்தில் சமயத்துக்குப் பொருத்தமாகச் சொல்லிக் கொண்ட வெறுங்கற்பனைகள் மேற்கொண்ட - உபதேசங்கள் உரைத்திருப்பது காண்க.

397 முதல் 417 வரையிலுள்ள கண்ணிகளில் இந்த நில உலகினை ஆட்டி வைக்கும் செல்வத்தின் மீதுள்ள பற்றினைக் குறித்துப் பகிர்ந்திருப்பது காண்க.

418 முதல் 431 வரையிலுள்ள கண்ணிகளில் மண்ணாசையைக் குறித்து மொழிந்திருப்பது காண்க.

432 முதல் 445 வரையிலுள்ள கண்ணிகளில் வீடு பேற்றிற்குத் தடங்கலாக நிற்கும் கோபம், கொலை, பொய்ம்மை முதலிய இழிகுணங் களை விவரித்திருப்பது காண்க.

446 முதல் 460 வரையிலுள்ள கண்ணிகள் இளமை நிலையாமையை விளக்குவன ஆகும். 

461 முதல் 524 வரையிலுள்ள கண்ணிகளில் உடம்பும் உடம்பைச் சார்ந்தெழுந்த பெற்றோர் முதல் எண்ணப்பட்ட உறவினர் தொடர்பும் பயன்படாது வெம்பி வீழ்வது விளக்கியிருக்கிறது.

525 முதல் 612 வரையிலுள்ள வகுத்துரைத்த இழிகுணங்களும் தாழ்ந்த ஒழுக்கங்களும் ஒருவனுடைய நெஞ்சின் உயர்ந்த தன்மைக்கு அழகல்ல என்பதை வற்புறுத்தியிருக்கிறது.

613 முதல் 622 வரையிலுள்ள கண்ணிகளில் ஆன்மாநுபவம் இத்தன்மையது என்று உணர்த்தியிருப்பது கண்டு கொள்க. 

623 முதல் 703 வரையிலுள்ள கண்ணிகளில் ஆன்மாநுபவம் அடையும் சன்மார்க்கம் உபதேசித்திருப்பது கண்டு மகிழ்க.

இந்நூலில் வள்ளல் பெருமான், திருக்குறள், தேவாரம் முதலிய அருளாளர்களின் அருள் மொழிகளை மேற்கொள் காட்டி பாடியிருப்பது, வள்ளற்பெருமான் பண்டைய அருளாளர்கள் மீது கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நமக்கு விளக்குவனவாக அமைந்துள்ளது.

நம்முடைய உலகியல் நோய்க்கு இன்னூல் மருந்து என்றும் சொல்லலாம், அப்படிப்பட்ட இந்த நெஞ்சறிவுறுத்தல் பகுதியை அனைத்து அன்பர்களும் ஒரு முறையாவது பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

அன்பர்கள் அனைவரும் அனுதினமும் இந்நூலினை ஓதி, அந்தக்கரண மயக்கங்கள் தெளியப் பெற்று, பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு

4. நெஞ்சறிவுறுத்தல் - எளிய விளக்கம், - திருமதி. பா. இராஜேஸ்வரி 

   அம்மையார்





 









விண்ணப்பக் கலிவெண்பா - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 விண்ணப்பக் கலிவெண்பா - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும். திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் இரண்டாவது நூலாகிய விண்ணப்பக் கலிவெண்பா.

பதிக்கத்  தலைப்பின் விளக்கம்:

கலிவெண்பா, வெண்பா வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும். அதன்படி, நேரிசைக் கலிவெண்பாவால் இயற்றப் பட்ட 417 கண்ணிகளைக் கொண்ட முறையீடு என்பதால் இப்பதிகம் விண்ணப்ப கலிவெண்பா என பெயர் பெற்றுள்ளது.

இவ்விண்ணப்பக் கலிவெண்பா, காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. அது கருதியே, திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் இரண்டாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, பிற்கால உரையாசிரியர்களுக்கு வள்ளல் பெருமானின் உண்மைக் கருத்தை அறிவதற்கு மிக உறுதுணையாக அமைந்துள்ளன என்பது இங்கு நினைக்கத்தக்கது.

பதிக அமைப்பு:

417  கண்ணிகளைக் கொண்ட இந்நூலில், முதல் 279  கண்ணிகளில், மூவர் பெரு மக்களால் பாடப்பெற்ற சைவத் திருத்தலங்களையும், அத் திருத்தல சிறப்புக்களையும், தலங்களின் வரலாறுகளையும்  எடுத்துக் கூறி அத் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற  இறைவனை புகழ்ந்து  பாடுகின்றார் வள்ளற் பெருமான்.

1 முதல் 64 வரை உள்ள கண்ணிகளின் மூலம், சோழ நாட்டின் காவிரிக்கு வடகரையில் உள்ள  தேவாரத் தலங்களையும்,

65 முதல்191 வரை உள்ள கண்ணிகளில்  சோழ நாட்டின் காவிரிக்கு தென்கரையில் உள்ள  தேவாரத் தலங்களையும்,   

192 முதல் 193 வரை உள்ள கண்ணிகளில்  ஈழ நாட்டுத் தலங்களையும், 

194 முதல் 206 வரை உள்ள கண்ணிகளில்  பாண்டிய நாட்டிலுள்ள தலங்களையும், 

207 ஆம் கண்ணியில்  மலை நாட்டுத் தலமான திரு அஞ்சைக்களத்தையும், 208 முதல் 214 வரை உள்ள கண்ணிகளில்  கொங்கு நாட்டுத் தலங்களையும், 215 முதல் 236 வரை உள்ள கண்ணிகளில்  நடு நாட்டுத் தலங்களையும்,

237 முதல் 271 வரை உள்ள கண்ணிகளில்  தொண்ட நாட்டுத் தலங்களையும்,

272 ஆம் கண்ணியில்  துளுவ நாட்டுத் தலமான திருக்கோகரணத்தையும்,

273 முதல் 279 வரை உள்ள கண்ணிகளில் வட நாட்டுத் தலங்களையும்,

முறையே வழிபட்டு வணங்குகின்றார் வள்ளற் பெருமான்.   

280 முதல் 290 வரை உள்ள கண்ணிகளில் இறைவனை பொதுவில் வழிபட்டு விண்ணப்பிக்கிறார். 

291 முதல் 370 வரை உள்ள கண்ணிகளில் சிவானுபவத்திற்கு தடையாக நிற்பவைகளைப் பட்டியலிட்டு, அவைகளை நிவர்த்தித்து தன்னை ஆட்கொள்ள வேண்டும் என இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்.

371 முதல் 386 வரை உள்ள கண்ணிகளில் உயிர்களின் குற்றங்களையும் குணமாகக்கொண்டுக் கொண்டு இறைவன் அவைகளுக்கு கருணையை செய்த, அருள் வரலாறுகளை நினைவு கூறுகிறார்.

387 முதல் 417 வரை உள்ள கண்ணிகளில் இறைநிலையை அடைய தனக்குண்டான கோரிக்கைகளை முறையிட்டு,  

"என்னையும் நீன் தொண்டருடன் சேர்த்து அருள்க! நின் தாள்மலர் வாழ்க! என விண்ணப்பக் கலிவெண்பாவினை நிறைவு செய்கின்றார்.

"இவ்விண்ணப்ப கலிவெண்பாவை ஒருமையுடன் ஓதும் அடியார்கள் உளம் நெகிழ்ச்சி உற்று ஆன்ம  அனுபவம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை" என பதிப்புச் செம்மல் ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்கள் இப்பதிகத்தை குறித்த அனுபவத்தை தெரிவிக்கின்றார், எனவே பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இன்நூலினை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு

4. வடலூர் - வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பாடக் குறிப்புகள் - முனைவர் இராம. பாண்டுரங்கன்





 









திருவடிப்புகழ்ச்சி - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 திருவடிப்புகழ்ச்சி - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

உலகம் உய்ய, ஞானக் களஞ்சியமாகிய, திருஅருட்பாவினை நம்முடைய அருட்தந்தையாகிய திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு அருளிச் செய்திருக்கின்றார்கள். திருவருட்பா பல்வேறு சன்மார்க்க பெரியவர்களான தொழுவூர் வேலாயுதனர், இறுக்கும் ரத்தினம், சிவானந்தபுரம் செல்வராயர், புதுவை வேலு, காரணப்பட்டு கந்தசாமி, ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை, ஊரன் அடிகள் முதலிய பல்வேறு அறிஞர்களின் உழைப்பாலும், தியாகத்தினாலும் இன்றைக்கு நம் கையில் அருட்செல்வமாகத் தவழுகின்றது.

இத்திருஅருட்பா ஆறு திருமுறைகளாகவும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஆகவும் விரிந்து இவ்வுலகத்திற்கு மெய்ஞ்ஞான கருத்துக்களை வழங்கி வருகின்றது. அத் திருஅருட்பாவினை அன்பர்கள் உணர்ந்து ஓதி பயன்பெறும் பொருட்டாக, திருவருட்பாவின் பதிகங்களை அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே, இக்கட்டுரைத் தொடர்.

திருவடிப்புகழ்ச்சி:

திருவடி + புகழ்ச்சி - திருவடிப்புகழ்ச்சி. இறைவன் திருவடியைப் புகழ்வது என்பது இந்தப் பதிக தலைப்பின் பொருள். இது நான்கு அடிகளைக் கொண்ட ஆசிரிய விருத்தம்,  இது 128 அடிகளால் மிக்குவந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனத் தொழுவூர்  வேலாயுதனாரும், 192 சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என ஊரன் அடிகளாரும் குறிப்பிடுவர்.  

“திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் கையெழுத்தில் உள்ள மூல ஏடு இந்த திருவடிப் புகழ்ச்சி அச்சுக்கு ஆதார ஏடாக அமைகின்றது. இதன் ஒவ்வோர் ஏட்டிலும் பெருமான் “உ சிவாயநம" என்னும் பஞ்சாட்சரத்தை முதற்கண் வைத்தே தொடங்கியிருக்கிறார்கள்” என்று பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய திருவருட்பா செம்பதிப்பில் குறிப்பிடுகின்றார்.

1867 இல் வெளிவந்த  முதல் நான்கு திருமுறையில் இது முதல் திருமுறையில் அமைந்துள்ளது. ‘இன்று வருமோ’ என்னும் காப்புச் செய்யுளோடு இருப்பதால் இஃது ஓர் நூலாகும்.  முதல் திருமுறையில் உள்ள எட்டு நூல்களுள் இதனை முதல் நூலாக அமைத்தவர் தொழுவூர் வேலாயுதனர். ஊரன் அடிகளாரின் வரலாற்று முறைப் பதிப்பில் இது மூன்றாம் திருமுறையில் உள்ளது.

திருவடிப் புகழ்ச்சி நான்கு அடிகளாக அமைந்திருக்கின்றது. முதல் அடி ‘பரசிவம்’ என்றும், இரண்டாவது அடி 'தரம்மிகும்'  என்றும் மூன்றாவது அடி 'மரபுறு' என்றும், நான்காவது அடி 'இரவுறும்'  என்றும் தொடங்குகின்றது.

‘பரசிவம்’ என்னும் முதல் அடி, வேத ஆகமங்கள் இறைவனைத் தொழுகின்ற தன்மையை நமக்கு உணர்த்துவதற்காக அம்மறை மொழிகளைக்கொண்டே, வடமொழிச் சொற்களாலேயே இறைவனுக்கு பாமாலையாக சூட்டப்பட்டு இருக்கின்றது. முறையே  இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஆகம இதிகாச புராணங்களின் வழி நின்று கடவுளின் அருள் செய்கைகளை, அவரின் திருவடியை, வாழ்த்தி வணங்குகின்றார் நமது பெருமான். 

கடவுளின் பொது இலக்கணம், கடவுளின் சிறப்பு இலக்கணம், இறைவனின் திருவடி பல்வேறு சத்திகளாய் தொழில் படுகின்ற தன்மைகள். இறைவனுடைய திருநடனத்திறம். ஐந்தொழில் கர்த்தர்கள், எண்திசைக் காவலர்கள், பல்வேறு கணத்தவர்கள், சிவகணத் தலைவர்கள், அடியவர்கள் முதலானவர்கள் இறைவனுடைய திருவடியை வழிபடுகின்ற விதம், முதலியவைகள் இங்கு வள்ளல் பெருமானால் விரிவாக பேசப்படுகின்றது.

நான்காவது பகுதியில், அருளாளர்கள் ஆகிய நால்வர் பெருமக்களுக்கு  இறைவனின் திருவடி அருள் செய்த திறத்தையும், பின்பு தனக்கு அத்திருவடி அருள் செய்த விதத்தையும், தான் இறைவனின் திருவருளோடு கலந்து அனுபவிக்கும் அனுபவத்தையும், அது அழிவில்லாத நிலையை தனக்கு தந்தது பற்றியும் வள்ளல் பெருமான் இங்கு குறிப்பிடுகின்றார்.

பெருமான் சித்தி வளாகத்தில் உறைந்த காலத்தில், திருவடிப் புகழ்ச்சியே வெகுவாக பாராயணம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது செவி வழி செய்தி. ஒரு முறை, காரணப்பட்டு கந்தசாமி அவர்கள் திருவடிப் புகழ்ச்சியை இசையோடு பாடிக் காண்பிக்க, அவர் பாடியதை விடவும் மிகுந்த இசையோடு அழகாக வள்ளற் பெருமான் அத் திருவடிப்புகழ்ச்சியைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் என்கின்ற செய்தியையும், நாம் வள்ளல் பெருமானுடைய வரலாற்றில் காணலாம்.

இத் திருவடிப்புகழ்ச்சியை இறைவன் திருமுன்பு ஓதி வழிபடுவார்கள் வேதம், ஆகமம், புராணம். அருளாளர்கள் உடைய வாய் மொழிகள் ஆகியவற்றைக் கொண்டு இறைவனை வழிபட்ட பலனை பெறுவார்கள் என்பது பெரியோர்களுடைய கருத்து.

பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இத் திருவடிப் புகழ்ச்சியை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன். 

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு

4. வடலூர் - வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பாடநூல் - முனைவர் இராம. பாண்டுரங்கன்


அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...