திருவருண் முறையீடு - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.
வணக்கம்,
திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் ஆறாவது நூலாகிய திருவருண் முறையீடு.
பதிக அமைப்பு:
கட்டளைக் கலித்துறை விருத்தத்தால் பாடப்பட்ட 232 பாடல்களைக் கொண்ட முறையீட்டு தொகுப்பு ஆதலினால் இது திருவருண் முறையீடு என வழங்கப்படுகின்றது. திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் ஆறாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய நூல் மூன்றாம் திருமுறையுள் ஆறாவது நூலாக இடம்பெற்றுள்ளது.
வள்ளல் பெருமான் எழுதிய மூல ஏடு இந்நூலுக்கு கிடைத்திருப்பதாக பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ணனார் அவர்கள் தெரிவிக்கின்றார். வள்ளல் பெருமான் அருளிச்செய்த மூல ஏட்டின் படியே தொழுவூர் வேலாயுதனார் அவர்களும் ஆ.பாலகிருஷ்ணனார் அவர்களும் பதிப்பித்து இருக்கின்றார்கள்.
இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும் தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, இப் பாடல்களை உணர்ந்து ஓதும் அன்பர்களுக்கு, வள்ளல் பெருமானின் உண்மை கருத்துக்களை உணர உதவியாய் உள்ளது என்பது இங்கு நினைக்கத்தக்கது.
பதிகச் சிறப்பு:
இப் பதிகத்தை தன்னுடைய ஏழாம் புத்தகமான பெருநூல் பகுதியில் பதிப்பித்த ஆ. பால கிருஷ்ணனார் அவர்கள் இப்பதிகத்தின் சிறப்பினை தமக்கே உரித்தான, அழகிய தமிழில் அருள் நிலையில் நின்று விளக்கியிருக்கிறார்கள். இது இப்பதிகத்தை முழுமையாக உணர்வதற்கு நமக்கு பெரிதும் துணை நிற்கின்றது. அப்பகுதி வருமாறு:
"திருஅருண் முறையீடு என்னும் இவ்வருள்நூலில், நம் பெருமான் இராமலிங்க அடிகளார்,
தம் குற்றம் குறைகளை எடுத்தெடுத்துப் பகுத்துப் பகுத்து விரித்து விரித்து,
தம்மை நொந்து வருந்தியும்,
உலகியலானது ஒருவனை மாயை வயப்படுத்தி, உயிர்களுக்குள் வேற்றுமையையும் வெறுப்பையும் கற்பித்து, நெஞ்சைக் கல்லாக்கி, கொலைபுலைக்கு ஆளாக்கி, இழிவுபடுத்தி, அழித்துவிடுகிற தென்று இரங்கியும்,
வழிஅடியர்களுடைய என்புருகும் பேரன்பையும் அளப்பரும் திறலையும் அகம்நெகிழ்ந்து பெருமிதம் கொண்டுபேசியும்,
தமக்கு இறைவனைத் தவிர வேறு பற்றுக்கோடு இல்லை என் பதைப் பல வழியில் மெய்ப்பித்தும்,
மெய்யடியார்களுடைய குற்றங் குறைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஆட்கொண்டருளும் இறைவனுடைய அருட் பூரணத்தை வியந்து வியந்து போற்றியும்,
தம்மையும் அங்ஙனம் ஆட்கொண்டருளுமாறு, உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகிக் கல்லும் கனிந்துருகுமாறு, இறைவன் திருத்தாளில் மீண்டும் மீண்டும் முறையிட்டுக் கொள்வதைக் காணலாம்…………
திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், இவ்வருள் நூலை இடைவிடாது ஓதுமாறு தம்மைச் சார்ந்த அன்பர்களுக்குப் பல்கால் எடுத்தோதுவதை யான் கண்ணாரக் கண்டும் செவியாரக் கேட்டும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததுண்டு.” என விவரித்து மகிழ்கின்றார்கள்.
இப்பதிகம் 29-ம் பாடலில், தாயினும், சிறந்த தந்தையாகிய இறைவனின் திருவருளை வேண்டி விண்ணப்பிக்கின்றனர்.
தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_
நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே
அருட்சத்தியாம் உமையின் காதலனே! பிள்ளைகள் தன் தாயை அடைந்து ஒரு பொருளைத் தருக என்று வேண்டினால் “சிறிது காலம் தாழ்த்தி” பிறகு கேட்டதைக் கொடுப்பாள்; ஆனால் தந்தையோ! அவரை பிள்ளைகள் வாயார வாழ்த்தினாலும், மனம் நோக ஏசினாலும் அவற்றைப் பொருள்படுத்தாமல் “அப்பா எனக்கு இப்பொருள் தருக” என வேண்டினால் காலம் தாமதிக்காமல் உடனே தருவார் என்பது உலக வழக்கு, இதை நினைந்தே உன் பிள்ளையாகிய நான் உன்னை அடுத்து என் எண்ணங்கள் நெறி பிறழாமல் அருள் நெறி சொல்ல வேண்டி நிற்கின்றேன்; நீ மனம் இரங்கி அருள் செய்தல் வேண்டும் என விண்ணப்பம் செய்கின்றார்.
இப்பதிகம் முப்பத்தி இரண்டாம் பாடலில், இறைவனின் திருவடி நோகுமே என்று வள்ளற்பெருமான் வருந்துகின்றார். இறைவன்மீது வள்ளல் பெருமான் கொண்ட அன்பினை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அந்நாள்
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப்
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப்
பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே!
“அருட்ஜோதி ஆண்டவனே! எனது கண் போன்றவனே! அன்று மதுரை நான்மாடக் கூடலில் பாணபத்திரன் என்னும் அடியவனுக்காக, ஏமநாதன் என்னும் இசைவாணனின் செருக்கை அடக்க, விறகு வெட்டியாக உருவெடுத்து மதுரையின் வெப்பம் மிகுந்த வீதிகளில் வெயில் பட்ட மணலானது உன்னுடைய காலை உறுத்தும் படியாக நீ நடந்தே சென்று விறகு விற்ற துன்பத்தை நினைக்கும் தோறும், கருணை கடலான உனக்கே இவ்வளவு துன்பமா? என என்னுடைய உள்ளம் பதக் கின்றது” என்று வள்ளல் பெருமான் தனது இறை அன்பை வெளிப்படுத்துகின்றார்.
இப்படி அற்புதமான பல்வேறு விண்ணப்பங்களை இத் திரு அருண் முறையீட்டில் நாம் காண முடியும். அன்பர்கள் ஊன்றி இறைவனை நினைந்து, முறையிடுவதற்கு இந்நூல் ஒரு சிறந்த கருவி என்பதில் ஐயமில்லை.
எனவே பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இன்நூலினை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்