அபராதத் தாற்றாமை - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
“திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி, பெங்களூரு.
வணக்கம்,
திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் பதினோராம் பதிகமாகிய அபராதத் தாற்றாமை.
பதிக அமைப்பு:
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில், வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட அழகிய பாமாலை இது. திருவொற்றியூர் இறைவனிடம் வள்ளல் பெருமான் விண்ணப்பம் செய்யும் பகுதியாக இது அமைந்துள்ளது. இப்பதிகத்திலுள்ள பத்து பாடல்களிலும் “என்னை என்செய்தால் தீருமோ அறியேன்” என்று தன் குற்றங்களை முறையிட்டு இறைவனின் கருணையை வேண்டுகின்றார் நமது வள்ளல் பெருமான்.
பதிப்புகள்:
திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப்பதிகத்தை இரண்டாம் திருமுறையின் 11-வதாக வைத்துச் சிறப்பித்தார்.
திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் பதினோராம் பதிகமாகவே உள்ளது.
சன்மார்க்க தேசிகர் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப்பதிகம் இரண்டாம் திருமுறையுள் 7 -வதாக இடம்பெற்றுள்ளது.
ஏட்டுச் சுவடிகள்:
இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, சுவடியில் ஏடு எண்கள் 56, 57 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, சிவமயம், ஒற்றியூர்” எனவும் “உ” எனவும் பெருமான் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பதிகப் பொருண்மை:
பெருமான் இப்பதிகத்தில் இறைவனின் பேரருளைப் போற்றுவது ஒருபுறம் இருக்க, தன்னை ஒரு பாவியாகவும், கடையனாகவும் உருவகப்படுத்திப் பாடுவது அவரது பணிவின் உச்சமாகும். "அபராதத் தாற்றாமை" என்ற இப்பகுதி, தான் செய்த பிழைகளை எண்ணி வருந்தி, "என்னை என் செய்தால் தீருமோ அறியேன்" என்று இறைவனிடம் சரணடைவதாக அமைந்துள்ளது.
சில பாடல்களும், விளக்கமும்:
இப்பதிகத்தின் 5 ஆம் பாடலில், மண்ணுலக மாயையில் மயங்கிக் கிடக்கும் மனதை மீட்டு, இறைவனின் மலரடிகளைத் துதிக்கச் சிறிதும் எண்ணாத தன் நிலையை எண்ணி 'கொடிய ஏழையேன்' என பெருமான் வருந்துகிறார்.
இத்தகைய பெரும் பிழைகளைச் செய்த தன்னை இறைவன் எவ்விதம் மன்னித்து உய்விப்பார் என்ற ஏக்கம் இப்பாடலில் தொனிக்கிறது.
அதே சமயம், இறைவனை விண்ணின் ஒளியினுள் ஒளியாகவும், கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிப் பொருளாகவும், பெறுதற்கரிய மாணிக்கமாகவும் போற்றுகிறார்.
திருவொற்றியூர் கரும்பாகிய இறைவனின் திருவருள் மட்டுமே தன் அறியாமை இருளை நீக்கவல்லது என்ற ஆழ்ந்த சரணாகதியை இப்பாடல் உணர்த்துகிறது.
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே.
7 ஆம் பாடலில்
"இறைவனை நினையுங்கள்" என்று அடியவர்கள் பலமுறை காட்டியும், தெளிவுபெறாத கல் போன்ற மனமுடைய குரங்காகத் தான் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
உழைப்புக்கு உதவாத எருது போல வீணாகக் காலம் கழிக்கும் தன்னை, "பாவியேன்" என்று நொந்துகொள்ளும் அவர், இத்தகைய பிழைகளைச் செய்த தனக்குத் தீர்வுதான் என்னவென்று இறைவனிடம் வினவுகிறார். மருத மரங்களுக்கு இடையே நின்ற மாணிக்கமே, தீராத பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே என இறைவனைப் போற்றுகிறார்.
மன உறுதி படைத்த பெரியோர்களின் உள்ளத்தில் ஒளியாய் விளங்கும் திருவொற்றியூர் இறைவனே, எனக்கு நீயே உறவு என்று இப்பதிவில் சரணாகதி அடைகிறார்.
கருது என அடியார் காட்டியும் தேறாக் கல்_மன குரங்கு_அனேன் உதவா
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே.
நிறைவான 10 ஆம் பாடலில்:
வீண் வாதம் புரிந்து பிறரைத் துன்புறுத்தும் கொடிய புலி போன்ற குணம் கொண்டவனாகத் தன்னை உருவகப்படுத்துகிறார். வஞ்சக மனமும், பொல்லாத குற்றங்களும் (ஏதம்) நிறைந்த தான், இக்கதியிலிருந்து தப்பிக்க என்ன செய்வேன் என்று வருத்துகின்றார்.
அத்தகைய பிழைகளைச் செய்த தன்னை இறைவன் எவ்விதம் மன்னிப்பாரோ என்ற ஏக்கத்தை "என்னை என் செய்தால் தீருமோ" என்ற வரி பிரதிபலிக்கிறது. இறைவனை அறிவாகவும் (போதம்), ஐம்பூதங்களின் சாரமாகவும், என்றும் மாறாத புனிதமாகவும், மணமிக்கப் புதுமலராகவும் போற்றுகிறார்.
"உன் திருவடிகளே சரணம்" என்று வீழ்ந்து வணங்கும் அடியவர், தன்னைப் பாதுகாத்து ஆட்கொள்ள வேண்டியது இறைவனின் கடமை (பரம்) என்று கூறித் தன் பொறுப்பை இறைவனிடமே முழுமையாக ஒப்படைக்கிறார்.
வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புது மணப் பூவே
பாதமே சரணம் சரணம் என்றன்னைப் பாதுகாத்து அளிப்பது உன் பரமே.
வள்ளல் பெருமான் போன்ற ஒரு ஞானி, "கொடும் புலி அனையேன்", "வஞ்சக மனத்தினேன்" என்று பாடுவது அவர் செய்த குற்றங்களுக்காக அல்ல.
சாதாரண மனிதர்களாகிய நாம் அன்றாடம் செய்யும் தவறுகளைத் தன் மேல் ஏற்றி, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார் என்று நாம் கருத வேண்டும்.
இப்புனித பதிகத்தை இறைவன் முன் ஓதி, நம் மல மாயைகள் நீங்கப்பெற்று, நாம் பேரின்ப சன்மார்க்க வாழ்வில் திளைப்போம்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு – 8- ஆம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக