ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

புண்ணிய விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை திரு. ஆனந்த பாரதி

                             புண்ணிய விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் முதல் நூலாகிய புண்ணிய விளக்கம்

பதிக அமைப்பு:

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 11 பாடல்கள் கொண்ட பாமாலை இது. “நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்” என்று பாடல் தோறும் பெருமான் தன் நெஞ்சினை அழைத்து உறுதி கூறுகின்றார். இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ”சிவாயநம என்றிடு நீறே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைஉறுகின்றது.

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் முதல் நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் முதல் நூலாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரி நூல் இரண்டாம் திருமுறையுள் 25 வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 


பதிகப் பொருண்மை

புண்ணிய விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது. 

இறைவனுடைய திருவருளை ஆன்மாக்கள் பெற்று அனுபவிப்பதற்கு பல சாதனங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கிய சாதனம், இறைவனுடைய திரு நாமத்தைத் தொடர்ந்து நினைந்து இறைவன் மீது அன்பு செலுத்துவதாம்.

வாழையடி வாழையென வந்தத் திருக்கூட்ட மரபினர் யாவரும், இறைவன் திருநாமத்தினை நினைந்து இறைவனிடம் அன்பு செலுத்துகின்ற இந்த சாதனத்தை கைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அம் மரபு பற்றியே வள்ளல் பெருமானும் இங்கு இறைவனுடைய திருநாமத்தினை நினைந்து அத் திருநாமத்தை நினைந்து வழிபடுவதற்குரிய அடியார்களின் அடையாளமாக திருநீறு புனைந்து, இறை அன்பு செலுத்தினால் அவ்இறை அனுபவத்தினை பெறலாம் என்று இங்கு தன் நெஞ்சுக்கு ஆணையிட்டு, கலக்கம் தவிர்த்து, அமைதி செய்கின்றார் வள்ளல் பெருமான்.

இறைவனுடைய திருநாமங்களை நினைந்து தியானித்தல் முதலிய சாதனங்களை, உண்மையான இறைஅன்போடு கைக்கொள்வதினால்  உண்டாகும் நன்மைகளை வள்ளற்பெருமான் இந்த 11 பாடல்களில் பட்டியல் இடுகின்றார்.

இறைவனின் திருநாமங்களில் ஒன்றாகிய சிவாயநம என்னும். திருவைந்தெழுத்தினை ஓதி இறை அன்பு செலுத்தி திருநீறு அணிவதாகிய இச்சாதனத்தை செய்து வந்தால்.

இறைவனின் புகழைப் பாடுவதற்குரிய நல்ல ஞானமும், வறுமை இல்லாது வாழக்கூடிய நல்ல நிலையும், அதனால் பால் அன்னம் முதலிய சுகபோஜனங்களும், இறைவனுடைய திருவடியையே என்றும் நினைந்து வழிபடக்கூடிய அடியார்களின் சன்மார்க்க சங்க சேர்க்கையும், நல்ல சத்துவ குணமும், உயர்ந்த புகழையும் நாம் பெறலாம். எனவே மனமே நீ! மல மாயைகளால் உண்டாகின்ற துன்பங்களைக் கண்டு அஞ்சாதே! கீழ்க்கண்டவாறு அழகாக மொழிகின்றார் நம் பெருமான்.

பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்

கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்

தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

மேலும்,

இச் சாதன முதிர்வில், அதைக் கடைப்பிடித்து ஒழுகும் சுத்த ஆன்மாக்களுக்கு உண்டாகும் பெரு நிலைகளையும் வள்ளல் பெருமான் இங்கு பட்டியல் இடுகின்றார்

இச்சாதனத்தின் நிறைவு நிலையடைந்த ஆன்மாக்களுக்கு. மூவகை வினைகளும் அற்றுப் போகும், இறைவனை அடைந்து, அந்த இன்பத்தை அனுபவிப்பதற்கு உரிய நெறி அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக காண்பிக்கப்படும், அவர்கள் மெய்ஞ்ஞான வீட்டில் என்றும் இருந்து பேரின்பத்தை அனுபவிப்பதற்குரிய பெரு நிலையில் வாழ்வார்கள். என்று குறிப்பிடுகின்றார் நம் பெருமான்.

வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து

உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்

ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்

செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே.

உயிர்களிடத்தில் கருணை, இறைவனிடத்திலேயே அன்பு, தன்னளவிலே ஒழுக்கம் என்னும், மூன்று முக்கிய சன்மார்க்க சாதனங்களில் ஒன்றாகிய இறைவனிடத்தில் அன்பைப் பற்றி இப்பதிகத்தில் வள்ளற் பெருமான் நமக்கு மிக தெளிவாக விளக்கி அருளுகிறார். இப்பதிகத்தை ஓதி இறைவனிடத்திலேயே பேரன்பு பூண்டு, சன்மார்க்க ஒழுக்கத்தில் நின்று பெருவாழ்வு வாழ முயலுவோம். 


நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...