அருள் நாம விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.
வணக்கம்,
திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாகிய அருள் நாம விளக்கம்.
பதிக அமைப்பு:
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால், வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. “எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து ……. ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே” என்று பாடல் தோறும் பெருமான் தன் நெஞ்சத்தினை திருவொற்றியூர் திருக்கோயிலுக்கு அழைத்து, அங்கு இறைவனுடைய திருநாமத்தை மனம் உருகி ஓத அறிவுறுத்துகின்றார்.
இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ” ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைஉறுகின்றது.
திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாக வைத்துச் சிறப்பித்தார்.
திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாகவே உள்ளது.
சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய நூல் இரண்டாம் திருமுறையுள் 21 வதாக இடம்பெற்றுள்ளது.
ஏட்டுச் சுவடிகள்:
இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 89, 90 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பதிகப் பொருண்மை:
அருள் நாம விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது.
வள்ளற் பெருமான் தன் மனத்தினை அழைத்து, மனமே? எதிர் பாலினத்தவரின் தேக இச்சையில் அழுந்தி வீன்காலம் கழிக்காமல், நான் சொல்வதைக் கேட்டு, என்னுடன் திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்து, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது அவனுடைய அருள் நாமத்தினை மனம் உருகி தொடர்ந்து ஓதி, வழிபட்டு நின்றால, இறைவனுடைய திருவருளைப் பெற்றுக் கொண்டு என்றும் பேரின்ப வாழ்வில் வாழலாம் என அறிவுறுத்துகின்றார்.
“தேக இச்சையினாலே மிகவும் மெலிகின்ற மனமே, இறுதிக் காலத்திலே எமன் உன்னுடைய உயிரைக் கொண்டு போக நின்றபோது அனுபவித்த இந்த தேக சுகங்கள் உன் கூட வருமா? நிச்சயமாக வராது.
உன் மரண காலத்தில் உன்னோடு வருவது எது? அது இறைவனுடைய திருவருள், அந்த இறைவனுடைய திருவருள் இருந்தால் அந்த மரணத்தையே நீ வெற்றிக் கொள்ள முடியும். எனவே, என்னோடு திருவொற்றியூர் திருத்தலத்திற்கு உடன் வந்து, இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடுவாய்.
நீ மட்டுமா இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடு கின்றாய்?. பிரமனும், விஷ்ணுவும், இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி அங்கே வழிபாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அவ்வாறு வழிபாடு செய்கின்ற போது உனக்கென்ன?
என்னோடு வந்து நீயும் வழிபடு”. என்று இப்பதிகத்தின் ஆறாவது பாடலில் இறைவனை வழிபட தன் நெஞ்சத்தை மிக அழகாக அழைக்கின்றார் வள்ளல் பெருமான்.
அப்பாடல் வருமாறு:
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய்
மறலி வந்து உனை வா என அழைக்கில்
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில்
கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான்
புணரி வைகிய பூ_மகள் கொழுநன்
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
இப்பதிகத்தை ஓதி தேக மயக்கம் நீங்கி கடவுளிடத்திலேயே அன்பு பூண்டு, சன்மார்க்க ஒழுக்கத்தில் பயின்று பெருவாழ்வு வாழ்வோம்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு – 8- ஆம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக