உ
தயவு
வள்ளலாரின் வழிவழித் தொண்டர்
வடலூர் திரு. சீனி சட்டையப்பர் அவர்களின் மாணவர்
திரு. லோக. ஆனந்த பாரதி - எழுதிய
உத்திர ஞானசித்திபுரத்து உறையும்,
“வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்”
கல்பட்டு ஐயா திவ்ய சரித்திரம்
பாடல் வடிவில்
காப்பு
சிவமே ஒருஞானத் திருமேனியாக் கொண்டு
பவமே புரிந்திடும் இப்பாரினிடை வந்து
அவமே நீக்கியமை ஆளுடைய வள்ளல்
உவமே யம்மில்லா உயர்சேவடிக் காப்பு.
அருட்பிரகாசரின் அருமை:
ஆதியும் நடுவுமற்றை அந்தமும்இல்லாச் சோதி
சாதியும் மதமும்கொண்ட சழக்கெலாம் மாயத்தானே
நீதியும் நெறியும்கொண்ட நிமலசன்மார்க்கம் ஓத
பாதியாம் உமையைவிட்டு இப்பாரிடை வந்ததன்றே.
கொலையெலாம் களைபட்டழிய புலையெலாம் புரைபட்டோட
மலையெலாம் வளங்கள்ஓங்க மகிழ்ந்தருள் ஞானமூர்த்தி
கலையெலாம் தவித்துமற்றை கதியெலாம் விளங்க வந்து
நிலையெலாம் உடையவாழ்க்கை நெறியினை உரைக்கலுற்றார்.
அவையடக்கம்:
வாய்கொண்டு உரைக்கஒன்னா வன்நாய்தன் நிலைநோக்காதே
தூய்கொண்ட வேதஞானத் தொகையினை பாடல்போல
பேய்கொண்ட வினையால் பெரும்பித்துண்டநானே இங்கு
தாய்கொண்ட உள்ளத்தன்னார் தகைவினை உரைக்கலூற்றேன்.
நூல்:
அடியார் பலர்:
சுற்றிடும் கோள்பலவும் சூரியன்வெம்மை தன்னை
பெற்றிடும் பேணிப்பெரும் அண்டத்தொளிரு மாப்போல்
உற்றிடும் ஞானமெல்லாம் உருதான்ஆன வள்ளல்
பற்றிடும் பாதைக்காணப் பலரும்பின் பண்பில் நின்றார் (1)
கல்பட்டு அடியவரின் சிறப்பு:
நின்றிடும் அப்பலருள்ளும் நித்தியமார்க்கம் ஓதி
கன்றிடும் தாயேபோலக் கருணைநெறி உற்றுத்தம்மை
வென்றிடும் மலநோய்தன்னை விரைந்துஅக் கணமேநீக்கும்
மன்றிடும் மறையேன்மீது மாயோகம் செய்யலுற்றார். (2)
நடுநாட்டுச் சிறப்பு:
முத்தா நதிசூழும் முதுகுன்றும் அதிகையதும்
அத்தா எனஓதும் அறத்துறையும் பாதிரியும்
பித்தா எனஅன்றுப் பேசிய வெண்நல்லூரும்
மத்தா வரையென்ன மாமலையும் சூழ்நாடு. (3)
கல்பட்டு ஊர் சிறப்பு:
சிற்றூர் எனச்சிலர் செப்புவர் கல்பட்டை
பற்றூர் உள்ளப் பாவியர் மொழியதுவாம்
கற்றூர் யோகத்தகைவினர் தலைவனைத் தான்
பெற்றூர் எனில் அதுஞாலப் பேரூரே. (4)
மரபு அறியோம்:
தந்தையும் தாயும் தலைவனுக்கு இல்லையாப்போல்
யந்தையும் யாயும் எம்வள்ளல் என்றுநிதம்
சிந்தையே செய்யும் சித்தராம் கல்பட்டார்
முந்தை மரபினையாரோ முழுதுஉரைக்க வல்லாரே? (5)
கல்பட்டார் இயற்பெயர்:
பாருளோர் பலரும்செய்தப் பழவினைதம்மை போக்கும்
சாருளோர் தலைவனாம் தனிஅருட்பிரகாச வள்ளல்
சீருளோர் சிந்தைசெய்யும் சீராமலிங்க நாமம்
ஊருளோர் அவர்க்குஇட்டார் அண்ணலார் நிலைஉணர்ந்தே. (6)
இளமையில் யோக நெறி:
போகாந்த நிலைவிரும்பும் புன்மையாம் உலகினிடை
மாகாந்த காரத்தில் மதியிலியாய் கிடப்போரை
சாகாந்த நிலையேற்றும் சன்மார்க்கம்அது காண
யோகாந்த மலைஏற முயன்றிட்டார் இளமைமுதல். (7)
திருநறுங்குன்றம் சார்தல்:
பாரெலாம் ஓடிப் பணம்தேடும் வாழ்விடை
காரெலாம் நீங்கி கதிபெற எண்ணிட்டார்
ஊரெலாம் தேடியும் உயர்குருவைக் காணதே
பேரெலாம் மிக்கப்பெரும் நறுங்குன்றம் சார்ந்திட்டார். (8)
திருநறுங்குன்றச் சிறப்பு:
கொல்லா விரதம்கொண்டு ஒழுகும் ஞானியர்கள்
பல்லாரும் சூழ்ந்து பண்பினில் தலைப்பட்டும்
எல்லாரும் உய்யஎன்றும் தவம் செய்யும்
நல்லார் உறைகின்ற நறுகுன்ற மலையதுவாம். (9)
கல்பட்டார் தவநெறியில் ஒழுகுதல்:
முந்தையவர் பிறப்பின் முழுதுணர் நிலையோ
எந்தையாம் வள்ளல் எம்இறை தன்னருளோ
பிந்தை இப்பிறப்பின் பெற்றியோபேரோ அவர்
சிந்தை ஒடுங்கிசீர் யோகம் உற்றதுவே. (10)
அருள் உற ஏக்கம்:
தன்நிலைத் தனில்நின்று தமியோகம் தனைச்செய்து
பன்னிலை தனைக்காட்டும் பவநெறியது விலக
நன்னிலை நமைவந்து நாடும்எனும் உணர்வில்
என்னிலை யும்மறந்து என்றும்இருந்திட்டார். (11)
ஊரார் உணவிடல்:
ஞாயிறு திங்களும் ஞாலமும் நோக்காதே
மாயிறு காலமும் மாபாழ் இருந்திட்டார்
வாயிறு வஞ்சக வன்பசிப் பிணிப்போக்க
தூயிரு உணவை அவ்வூர்மனையர் தந்திட்டார். (12)
குருவானவர் தம்மை ஆட்கொள்ள விருப்பம்:
முன்னுறுநிலை யும்முழுதறியாத மூடமனத்தை மாய்த்திட்டு
பின்னுறுநிலை யும்பேரருள்என்னும் பெரும்பரிசதனைப் பெற்றிட்டார்
தன்னூறுநிலை யேதந்துஎனைஆள தாயெனகுருவும் வந்திட்டால்
என்னுறுநிலை யேஇறைநிலையாக என்றிடும் எனக்கண்டிட்டார். (13)
யோகக் காட்சி:
இன்னத்திங்களில் இன்னக்கிழமையில் இன்னநாளில் இன்னநாழிகையில்
இன்னலதுநீக்கி இன்பநிலைகாட்ட இறையென குருவும்வந்திடுவார்
முன்னதுசெய்த மலஇருள்நீங்க முத்தியினைதான் தந்திடுவார்என
பன்னலும்பண்ண பழந்தவப்பயனால் பேரருள் காட்சிகண்டிட்டார்.(14)
வள்ளல் வரவினை கல்பட்டார் ஊரார்கும் உரைத்தல்:
பெருங்கடல்என நம்மைபிடித்த பிறவிப்பிணியது போய்அகல
இருங்கடல்என என்றும்இருந்திடும் இருவினையாம் அந்நோய்அகல
அருங்கடல்என அருளுருவான அய்யன்வரு நாள்ஈதே
கருங்கடல்எனக் கார்சூழ்மலையீர் காணவம்மின் என்றுஅழைத்திட்டார். (15)
வள்ளல் பெருமான் கல்பட்டாரை ஆட்கொள எண்ணுதல்:
அண்ட பிண்டமும் அதில்உறு பண்டமும்
உண்ட துவாக்கிய உயர்தனி வள்ளல்
கொண்ட அத்தவத்தான் குறிப்பினை அறிந்து
கண்ட ழைத்துவர உளம் உகந்தார்.(16)
வள்ளல் பெருமானார் திருக்கோயிலூர் நோக்கி புறப்பாடு:
உயர்ஆதித்தன் உயிர்களுக்குஇரங்கி மண்ணினில்தன்அழல் தருகின்றான்போல்
அயர்க்கும்மால்கும் அறியாபதத்தோன் அன்பினில்தானே எழுந்தருளி
மயர்வறநீக்கி மதிவிளக்கேற்றி கல்பட்டாரை ஆட்கொள்ள
அயர்வறஅன்று உலகுஅளந்தான்ஊர் உறுதிசைநோக்கிப் பயணித்தார். (17)
வள்ளல் திருநறுங்குன்றத்துக்கு எழுந்தருளள்:
ஊருளோர் செய்தஉயர்தவப் பயனோ? மனச்
சீருளோர் தன்சிந்தையின் விளைவோ? தெருள்
பேருள ஞானியர் பிறங்கியப் பேரோஅருள்
நேருள வாகிய நிமலர் வந்தடைந்தார். (18)
பெருமான் திருநறுங்குன்றமலை புகுதல்:
துரியமா மலைகள் பலவையும் கடக்கும்
அரிய நிலைபல அன்பர்க்கும் காட்டும்
பெரிய அருட்பெருஞ் ஜோதியே உருவானார்
கரிய முகில்சூழ் நறுங்குன்றமலை புகுந்தார்.(19)
பெருமானை கல்பட்டார் வழிபடல்:
பெற்ற தாயின் பெருவரவு நோக்கி
உற்றி டும்கன்றின் உணர்வின் மிக்கார்
அற்றைப் பொழுதே வள்ளலின் அடிமலர்
சற்றே கண்டதும் சார்ந்து அடிதொழுதார்.(20)
கல்பட்டார் பெருமானைப் போற்றுதல்:
அன்பேசரணம்! அருளேசரணம்! இன்பேசரணம்! எழிலேசரணம்!
பண்பேசரணம்! பரனேசரணம்! குருவேசரணம்! குலமேசரணம்!
பண்ணியபாவம் தீர்ப்போய்சரணம்! பழிவாராது இனிக்காப்போய்சரணம்!
சன்மார்க்கசங்கத் தலைவாசரணம்! அடியனைஆளுதல் வேண்டும்சரணம்!(21)
உத்தரவு வரும் என பெருமான் உரைத்தல்:
நித்தியவாழ்வை நெடுநாள் விரும்பி என்றும்
பத்திய தவத்தை பழுதற இயற்றி
சத்திய வாழ்வில்தழைக்கும் அடியரே! நாம்
“உத்தர தருவோம்” அத்தினம் வாரும் என்றார்.(22)
மீண்டும் தவ வாழ்வில் கல்பட்டார்:
நான்மறை முடிபோன் நவின்ற அப்படியே
வான்மறை மலையில் வள்ளலின் திருவடி
தான்மறை மலரை தன்னுலே எண்ணி
ஆன்மறை கன்றேன அருந்தவம் புரிந்தார். (23)
வள்ளலிடம் இருந்து உத்தரவு வந்தது:
இறப்பொழிக்கும் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்தே
பிறப்பொழிக்கும் பெருநெறியை பேணிஅறிந்திடவும்
சிறப்பொழிக்கும் பசிப்பிணியை சார்ந்து நீக்கிடவும்
மறபொழிக்கும் கல்பட்டீர் வருகஎன்றார் வள்ளலவர்.(24)
கல்பட்டார் கருங்குழிக்கு புறப்பாடு:
பண்ணிய பூசை பலித்தது இன்று
எண்ணிய எண்ணம் இசைந்தது இன்று
புண்ணிய தவத்தால் கருங்குழி இன்றே
நண்ணிய வர்அடி அடைவேன் என்றுஎழுந்தார்.(25)
கல்பட்டார் கருங்குழி வருகை:
முன்னவனும் திருமாலும் முன்னே எழுந்தருளி
பண்ணறிய தவம்செய் பதியின் பேரூராம்
எண்ணறிய பெருமையர் எம்இறையாம் வள்ளலவர்
நண்ணியா ங்குஇலங்கிடும் கருங்குழி வந்தடைத்தார்.(26)
கல்பட்டார் பெருமானின் அடிதொழுதல்:
காணாத காட்சிஎல்லாம் காட்டுவிக்கும் கண்மணியார்
வாணாடார் வந்துதொழும் வள்ளலெனும் பெருடையார்
ஊணாடா வகைசெய்யும் உயர்தவத்தார் ஒண்தாளை
சேணாடும் ஊரார் சேர்ந்து தொழுதிட்டார்.(27)
கல்பட்டார் தில்லையில் இருக்க பெருமான் உத்தரவு:
மன்னும்சீர் தில்லைஎனும் மாமறையோர் தலமாம்
கண்ணுதல் நம்பெருமானார் கலைவளர்க்கும் இடமாம்
சின்னுதலால் சிவகாம தேவிஇடம் சேர்என்று
பின்னும்ஓர் உத்தரவு பெருமானார் பிறப்பித்தார். (28)
கல்பட்டாரை தில்லை அனுப்பக் காரணம்:
செம்பினை தங்கமாய் மாற்றுதல் போல
எம்பிரான் யோகத்தை ஞானமாய் மாற்ற
அம்பினை இலக்குக்கு அனுப்புதல் போல
நம்பியை தில்லைக்கு செலுத்தினார் வள்ளல். (29)
கல்பட்டார் வடலூர் வருகை:
ஓராறு திங்கள் கடந்த அப்பின்னர்
ஆறாறு கடந்தான் அடிமலர்த்தனைக் காண
போறாத பசியும் வெப்பமும் பின்தொடர
ஏறாத நிலைஏற்றும் வடலூர் வந்தடைந்தார்.(30)
“போதாதாங்காணும்” என பெருமான் மொழிதல்:
ஊழ்வினை முற்றும்மாற்றும் உயர்தவ நெறியினோனின்
பாழ்பசி கண்டுவள்ளல் பரிந்துஅருகில்அழைத்து பின்னர்
கூழினை அவர்க்குவார்க்க குடித்தவண்ணமாய் இருக்கஅருள்
ஆழியான் மூர்த்தியைநோக்கி “போதாதாங்காணும்” என்றார். (31)
கல்பட்டார்க்கு “சிலுகிழைக்காதீர்கள்” என பெருமான் உத்தரவு:
ஊரார் பசியெல்லாம் உவப்புடனே போக்கிஅருள்
சீரார் செயல்புரியும் சித்திபுரச்சாலை தன்னில்
ஓர்ரோரம் கல்பட்டார் ஒருமையுடன் தியானிக்க
யாரும் “சிலுகிழைக்காதிங்காணும்” என்றிட்டார் வள்ளலவர்.(32)
வள்ளலாரின் சாலை உபதேசத்தில் கல்பட்டார்:
உண்டியே தரும்சாலையில் பலகால் உணர்வும்
பண்டியே வளர்க்கவாய் மலர்ந்தார் வள்ளலவர்
வேண்டிய போது விரைந்தழைத்து மூர்த்தியார்க்கு
ஆண்றிடும் அரும்பகுதி அறிவித்தும் வந்தார்.(33)
கல்பட்டார் கண்ணீர் ஒழுக மூர்ச்சையடைதல்:
அன்றொருநாள் பிரசங்கத்தின் இடையில் வள்ளலவர்
“நின்றிடு நெறியில் ஒருவரும் தேறிலர்என”
ஒன்றிடும் கருணை உணர்வால் ஒருத்துரைக்க
மன்றிடும்தவ கல்பட்டார் கண்ணீர்ஒழுக மூர்ச்சித்தார். (34)
கல்பட்டர் கவலை:
நாமும் தேறிலோம் நம்தவமும் பொய்போலும்
காமமும் கழற்றிலோம் கருணையும் பெற்றிலோம்
சேமமாய் முத்திவரும் என்பதும்இலை போலும்
ஏமவெற்பே எம்இறையே என்செய்வேன் எனஅயர்ந்தார்.(35)
“உம்மை சொல்லவில்லைங்காணும்” என பெருமான் கூறுதல்:
அதுகண்டு பெருமானும் அருட்செல்வா இங்கேவா!
“விதிகண்டு உண்டும், உடுத்தும் ஓடியும்திரியும்
கதிகண்டு நோக்காத மாந்தர்க்கு அதுஉடைத்து
மதிகண்டு வாழும் “உம்மை சொல்லவில்லைங்காணுமென்றார்”.(36)
கல்பட்டார்க்கு பெருமானே உணவிடல்:
இயலாமல் கல்பட்டார் அன்றுஒருநாள் இருந்திடயில்
அயலாரும் காணாது அமுதளிக்க மறந்திட்டார்
கயலாரும் கண்ணுடைய அருட்சித்தி மணவாளர்
செயலாரும் செய்கையாய் தான்அமுது வழங்கிட்டார்.(37)
தொண்டு செய்வது உண்டுங்காணும்:
அதிசயித்து கல்பட்டார், “அய்யனே!நீரோ! வந்தீர்
ஒதிசயித்த இவ்உடற்கு உணவினார் குறையிலை”என
கதிசெய்யும் அடியார்க்கு சிவஞானிகள் தொண்டுஉண்டென்று
பதிசெய்யும் வண்ண்மாய் வள்ளல்திருவாய் மலர்ந்திட்டார். (38)
சாலைப்பணி செய்ய வள்ளல் பணித்திடல்:
“ஒன்று உரைப்பேன் ஊன்றிச் செய்யும்”என
நன்று உரைத்த நாயகனார்நவில என்னஎன
கன்று அனையஉணர்வோடு கல்பட்டார்தான் கேட்க
இன்று முதல்சாலையில் கூழ்வாரும் என்றிட்டார்.(39)
அனைவருக்கும் சோறிடுங்கள்:
ஆண்டவரின் பணியாம் இச்சோறிடலை இன்றுமுதல்
ஈண்டிறிந்து நீர்செய்ய இன்பமுடன் தந்திட்டோம்
வேண்டவரும் வேண்டாரும் எனஇன்றி உணவை
கண்டவர்க்கும் கேட்பவர்க்கும் கனிந்துகொடு என்றிட்டார்.(40)
வள்ளல் கிடக்கவிரும்புதுங்காணும் என கல்பட்டாரிடம் உரைத்தல்:
நான்முகனும் செய்யா நற்தவத்தால் இன்னும்
வான்முகத்து இந்திரர்க்கும் வாய்க்காத பேறாக
மீன்முகத்து திருமாலும் வியப்புஎய்த வள்ளலார்
தன்முகத்தை கல்பட்டார் மடிகிடத்தி அருள்செய்தார். (41)
உலகமெலாம் இப்படி இருக்குதேங்காணும்:
இகம்நிறைந்த உலகமெலாம்இப்படி இருக்குதேங்காணும் இவர்கள்
சுகம்நிறைந்த இறையவனை காண்பது எப்போதோவென
முகம்கிடத்தி இருந்த அத்தருணம் வள்ளலார்தம்
அகம்கிடந்த அவ்உண்மை வெளிப்படவே உரைத்திட்டார்.(42)
நெருப்பிடும்:
ஒழிவி லொடுக்கம்எனும் நூலை ஆடூரார்
இழியாது பயின்று வருங்காலை வள்ளலார்
“அழிய இன்னூலை நெருப்பிடும்” எனக்கூற
பழியா அப்பொருள்உண்மை பகன்றார் கல்பட்டார்.(43)
சன்மார்க்க விவேகவிருத்திக்கு பொருள் தந்தது:
உலக வர்க்கும்உண்மை உரைத்தருளும் பொருட்டாக
இலக “சன்மார்க்கவிவேகவிருத்தி” எனும்இதழ் தொடங்க
அலகில் பெருமையான் அறிவிப்பு இட்டஉடன்
கலகில் கல்பட்டார் பொருள்அளித்து பேருற்றார்.(44)
போதநாச வந்தனம் செய்த விண்ணப்பம்:
இருள்பெருக்கும் தேகத்தின் ஆவிபொருள் முதலாய
மரும்பெருக்கும் தத்துவத்தை இறைவனுக்குச் சமர்பிக்க
தெருட்பெருக்கும் கல்பட்டுஅய்யனுக்கு பெருமானே
அருட்பெருக்கும் விண்ணப்பம் வரைந்து அளித்திட்டார்.(44)
சித்திவளாகத்தில் கதவை காப்பிட கல்பட்டு அய்யாவிடம் வள்ளல் கூறல்:
அருட்காப்பு உடையகல்பட்டீர் அடியவரீர் நாம்
திருக்காப்பு கொண்டு ஆண்டவனை அடைகின்றோம்
மருட்காப்பு உடைமாய உலத்தார்தாம் காண
பெருட்காப்பு செய்யக்கதவை பூட்டிடுங்கள் என்றிட்டார். (45)
கல்பட்டுஅய்யா சாலையை நடத்துதல்:
இருபதொடு ஐந்துஎன ஆண்டுகள் பலவாய்
அருவத்தொடு விளங்கும் அய்யனின் பணிஏற்று
உருவத்தை நோக்காது கருணைகொண்டு எவர்க்கும்
பருவத்தே உணவிட்டு சாலையை நடத்தினார். (46)
கல்பட்டாரின் தொண்டு நிறைவு:
பயிற்சியில் நிறைவுற்றால் பலன்வந்து சேரும்யோக
முயற்சியில் நிறைவுற்று ஞானம்கண்டு பின்பும்
அயற்சியில் தலைபடாது சாலைதனை அன்புடன்
இயற்சியில் நடத்தி அப்பணி நிறைவும் கொண்டார்.(47)
கல்பட்டார் சிவயோக சமாதி கூடல்:
ஆயிரத்து தொண்ணுற்று இரண்டாம் ஆண்டு
பாயிரமா மறைஎல்லாம் புகழும் மூர்த்தி
மாயிறு ஞாலவாழ்வை நிறைவுகொண்டு
வேயுறு தோளிபங்கன்தன் தாள் சேர்ந்தார்.(48)
கல்பட்டு அய்யா துதி:
பித்துண்ட மலமாயை என்னும் பிணியாய
நித்திரையின் கண்ணே நாள்போக்காது எனைக்காத்து
உத்திரஞான சித்திபுரத்து உறைந்து அருள்செய்
உத்தம கல்பட்டார் ஒண்மலர்த்தாள் போற்றி.
வாழி! கல்பட்டார்!
வாழி அருட்பிரகாசர்! வாழி கல்பட்டார்!
வாழிஅவர் செய்பணியும்! வாழிஅவர் சீர்தவமும்!
வாழிஅவர் புகழ்கேட்கும் தொண்டர்களும் அன்பர்களும்!
வாழி எவ்வுயிரும்! வாழிய! வாழியவே!
திருச்சிற்றம்பலம்.
உத்திரஞான சித்திபுரத்து உறையும்
“கல்பட்டு ஐயா” திவ்விய சரித்திரம் முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக