அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
மனு
முறைகண்ட வாசகத்தின் நுட்பமும்
நூன்மாண்பும்
கட்டுரையாளர்:
லோக. ஆனந்த பாரதி,
2/47/3, மறைமலை
அடிகள் தெரு,
வள்ளலார் நகர்,
வடலூர் – 6073030
Ph: +91 9952654143
முன்னுரை:
திருஅருட்பிரகாச
வள்ளலார் என்றும் இராமலிங்க அடிகள் என்றும் அன்போடு மக்களால் அழைக்கபடுகின்றவர் வடலூர்
வள்ளல் பெருமான், சுத்த சன்மார்க்க நெறியை உலக மக்கள் அறிந்து கடை பிடித்து உய்வதற்காக அன்னெறியை அணிபெறச் செய்ய வந்தவர். வள்ளல் பெருமானின்
சுத்த சன்மார்க்கம் ஒரு பொது நெறியாகும், இன்னெறி இத்திரு நாட்டில் உத்தித்து இருப்பினும்,
உலக மக்கள் அனைவருக்குமானாதாய் விளங்குகின்றது, உயிர் இரக்கத்தை தனது உறுதியான அடைப்படையாக்
கொண்டுள்ளது.
சுத்த சான்மார்கத்தின்
முக்கிய இலட்சியம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை, இதை ஜீவகாருண்யம் என்று எளிமையாக
வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஜீவகாருண்யம், பர ஜீவகாருண்யம், அபர ஜீவகாருண்யம்
என்று இரண்டாக வள்ளல் பெருமானால் பகுக்கப்படுகின்றது. கொல்லாமை, பசி ஆற்றுவித்தல் ஆகிய
இரண்டும் பர ஜீவகாருண்யம் ஆகும்[1]
வள்ளல் பெருமான் சென்னையில் வாழ்ந்த காலத்தில், மாணர்வளுக்கு
அற நெறியை போதிக்க ஒரு நூல் வேண்டும் என்ற
சென்னை சாத்திர விளக்க சங்கத்தாரின் வேண்டுகோளின் படி வள்ளல் பெருமானால் சேக்கிழாரின்
பெரிய புராணத்திலுள்ள மனுநீதி சோழரின் வரலாற்றை[2] அடிப்படையாகக் கொண்டு இன்னூல்
எழுதப்பட்டு, மேற்படி சங்கத்தாரால் 1854 ஆம் ஆண்டு பதிப்பிக்க பட்டது.
சுத்த
சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய “கொல்லாமை, உயிர் இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாடு” ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு
வள்ளற்பெருமான் இந்த நூலினைச் செய்துள்ளார். இந்நூலில் கூறப்படும் மற்ற அனைத்து
செய்திகளும் இந்த கொல்லாமையாகிய உயிர் இரக்க உண்மையை அழகுபெறச் செய்ய எடுத்தாளப்படும்
உத்திகளாம், இந்த “மனு முறைகண்ட வாசகத்தின் உயிர்நாடி
உயிர் இரக்கமே” என்பதை நினைவிற் கொண்டு அதை உணர்த்துவது இந்த
கட்டுரையின் நோக்கம்.
குல முன்னோர்களாகிய
அரசர்களின் உயிர் இரக்கம்:
நூலின்
தொடக்கத்தில், திருவாரூரின் சிறப்பு, திருநகரத்தின் சிறப்பு, மனு நீதி சோழரின்
ஆட்சியின் மேன்மை முதலியவற்றை வரிசைப்படுத்தி கூறிக் கொண்டே வருகிற
வள்ளற்பெருமான், மனு நீதிச் சோழர் புத்திரப்பேறு இன்றி
துன்பப்படுவது பற்றியும், பல்வேறு விரதங்களினால், திருவாரூர் தியாகராசப் பெருமானுடைய திருவருளால் அவருக்கு “வீதிவிடங்கன்” என்னும் புத்திரன் பிறந்ததையும், அது நாட்டு மக்களால் கொண்டாடப் படுவதையும், பிறகு அவன் எல்லா கலைகளையும் கற்று, இளவரசுக்கு உரிய தகுதிகளோடு, திருவாரூர்
தியாகராசப் பெருமானை வழிபட தேர் ஊர்ந்து செல்வதையும், நாட்டு மக்கள் வீதிவிடங்கனின்
அழகையும், ஆண்மையையும் புகழ்வதையும், வள்ளல் பெருமான் பல வேறாக
இங்கு அழகுபடவும் வியக்கத்தக்க முறையிலும் விவரிக்கிறார். “தமிழ் உரைநடையின் தந்தை வள்ளலாரே” என்பது
இன்னூலினை ஆய்ந்து ஓதும் அறிஞர்களின் முடிபாகும்.
வீதிவிடங்கன்
சென்றுகொண்டிருந்த தேர் சக்கரத்தில் ஒரு இளங்கன்று, யாரும்
அறியாத விதத்தில், பாய்ந்தோடி வந்து தன்னுடைய இன்னுயிரை
மாய்த்துக் கொண்டது. அதை அறிந்து துயரப் படுகின்ற
வீதிவிடங்கன் தன்னுடைய குல முன்னோர்கள் எத்தகைய உயிர் இரக்கமுடையவர்கள் என்றும்
அத்தகைய உயிர் இரக்கமுடைய அரசர்களுடைய பாரம்பரியத்தில் தோன்றிய தான் இப்படி ஒரு
இளம் கன்றை கொலை செய்து விட்டேனே என்றும், வருந்தி பேசுகின்ற
பகுதி பண்டைய காலத்தில், நம்முடைய ஆட்சியாளர்களும், அரசர்களும் எந்த அளவிற்கு எல்லா உயிர்களிடமும் உயிர் இரக்கம் பூண்டு
இருக்கிறார்கள் என்பதை சிபிச்சக்கரவர்த்தி
வரலாறு மூலம் உணர்த்துகின்றது. அந்த பகுதி வருமாறு:
“பூர்வம் எங்கள் வம்சத்தில் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒருவர் ஒரு வேடன்
துரத்திக்கொண்டு வரப்பயந்து அடைக்கலமாகப் புகந்த புறாவுக்கு அபயஹஸ்தஞ்செய்து,
பின்பு அவ்வேடன் வந்து புறாவைக் கேட்டு வழக்கிட்டபோது, அந்தப் புறாவுக்கு ஈடாகத் தமது சரீரத்திலுள்ள மாமிசத்தை யெல்லாம்
அரிந்தரிந்து தராசில் வைத்தும் நிறைகாணாமலிருக்க, அதுகண்டு
தாமும் அந்தப் தராதசிலேறினார். அவர் பட்சி ஜாதிகளில் சாமானியப் பிறவியாகிய
புறாவின் உயிர்க் கொலைக்கே அஞ்சித் தம் உடம்பைக் கொடுத்ததுமன்றி உயிரையுங்
கொடுத்தாரானால், அப்பட்சி ஜாதிகளில் விசேடப் பிறப்பாகிய
கருடன் முதரான உயிர்களினிடத்து எப்படிப்பட்ட காருண்ணியமுள்ளவராய் இருக்கவேண்டும்?
அதனினும் உயர்ந்த மிருக ஜாதிகளில் எவ்வகைப்பட்ட கிருமையுடையவராய்
இருக்கவேண்டும்? அதனினம் அம்மிருக ஜாதிகளில் விசேடமாகிய
பசுக்களினிடத்தில் எப்படிப்பட்ட இரக்கமுள்ளவராய் இருக்கவேண்டும்? அதனினும் பசுவின் கன்றுகளிடத்தில் எவ்வகைப்பட்ட தயவுள்ளவராய் இருக்க
வேண்டும்?” என்று வீதிவிடங்கன் வாயிலாக இக்கருத்து வெளிப்படுகின்றது.
பிறகு, இந்த வழக்கு அரசனிடம் சென்ற போது, அரசன் தன்னுடைய
முன்னோர்களில் ஒருவராகிய சைவச் சோழர், இறந்த ஒருவரின்
உயிரையே இறைவன் அருளால் மீட்டு கொடுத்ததையும் அத்தகைய தகுதி இல்லாத எளியவனாகத்
தான் இருக்கின்றேன் என்பதை நினைத்து மனம் வருந்துகின்றார். அப்பகுதி:
“சிவபெருமான் திருவடியன்றி மற்றொன்றிலும் மனம் வையாத தமது வல்லமையால்
எமலோகத்தி லிருந்த உயிரை மீட்டுக் கொண்டு வந்து முன்னிருந்த உடலில் விட்டு,
அவ்வந்தணனை மகிழ்ச்சி செய்வித்து, அன்றுதொட்டு
எமனைத் தாமுள்ளவரையிலும் தமது நகரத்திலும் நாட்டிலும் வரவொட்டாமற் செய்த என்
குலமுதல்வராகிய சைவச்சோழரைப்போல, அவ்வளவு பெரிதான காரியஞ்
செய்யாவிட்டாலும், இப் பசுங்கன்றின் உயிரொன்றை
மாத்திரமானாலும் மீட்டுக்கொடுக்க வலியற்றவனாக விருக்கின்றேனே!”
எல்லா
உயிர்களையும் சமமாக எண்ணி நடக்க வேண்டும்:
எல்லா
உயிர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்கின்ற முக்கியமான கருத்து இந்த மனுமுறை
கண்ட வாசகத்தில் பயின்று வருகின்றது. அடிபட்டு இறந்தது இளங்கன்று என்றும். அந்த கன்று மிருக ஜாதி என்றும் அந்த மிருக ஜாதியில்
விதி வசத்தினால் ஒரு மிருகம் உயிர்
இழந்தாலோ, அல்லது கொல்லப் பட
நேரிட்டாலோ அதற்கு நாம் பரிகாரம், பிராயச்சித்தம்
முதலியவைகளைக் கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மந்திரிகளும், மற்றவரும் கூட அதை மறுத்து உயிர்க்கொலை என்பது மிகக் கொடியது
என்பதையும் உயிர் கொலையை செய்வது பெரும் பாவம் என்பதையும், பசுக்கள்,
மிருகங்களிலேயே மிகவும் உயர் உடையது
பசு என்றும் அப்பசுவினுடைய கொலையையும் அப்பசு மட்டுமன்றி
எவ்வுயிருக்கும் ஏற்படுகின்ற கொலையையும் நாம் பிராயச்சித்தம் முதலியவைகளால்
நீக்கிக்கொள்ள முடியாதது என்பதையும் இங்கு வள்ளல் பெருமான்
மிக அழகாக குறிப்பிடுகின்றார்.
வள்ளல் பெருமானின் மிக முக்கிய கருத்து எந்த வகையிலும் கொலை என்பது உயிரிடத்தில்
உண்டாக கூடாது என்பது. உணவிற்காகவும்,
பயம் கருதியும் அல்லது மற்ற எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரை மனித தேகத்தில்
இருக்கின்றவர்கள் கொலை செய்யக் கூடாது என்றும், அப்படி கொலை
செய்தால் அவர்களுக்கு மீளா நரகம் ஏற்படும் என்பதும் வள்ளற் பெருமானுடைய கருத்தாக இருக்கின்றது. அந்த கருத்தையே, மந்திரி முதலானவர்கள் உயிர்க் கொலைக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என அரசனுக்கு அறிவுரை வழங்கியபோது அரசன் இவ்வாறு
கூறி அந்த அறிவுரைகளை மறுக்கின்றார். இறைவன் எல்லா உயிர்களிடத்திலும்
இருக்கின்றான் என்றும் அதாவது இறைவன் சிற்சத்தினுடைய
வடிவமாகிய உயிர்களுக்குள் இருக்கின்றார் என்றும் வள்ளல் பெருமான் இங்கு விவரிக்கின்றார்,
அப்பகுதி,
“பரமேசுவரன் ஆன்மாக்கள் தோறும் விகற்பமில்லாமல் நிறைந்திருக்கின்றபடியால்,
மாயையின் காரியமாகி வேறுபட்ட அறிவை நோக்காமல், அப்பரமேசுவரனை நோக்கி எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி நடக்க வேண்டும் என்ற உத்தரபாகத்தின்படி, பிறப்பு, குணம், சாதி, தொழில் முதலான
விகற்பங்களை நாடாது உயிர்க் கொலையினிடத்துச் சமானமாகத் தண்டிப்பதே தகுதி”
இக்கருத்தையே பின்னாளில் தன்னுடைய
உபதேசங்களில் வள்ளல் பெருமான் மிகத்
தெளிவாக உணர்த்துகிறார்கள் “எல்லா உயிரையும் தன்னுயிர் போல
பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த குணம் வந்தவன் எவனோ அவனே இறந்தவரை எழுப்புகின்றவன், அவனே ஆண்டவனும் ஆவான்”[3] என்பது வள்ளுவர்
பெருமானின் உரைநடையில் காணப்படுகின்ற ஒரு அற்புதமான உபதேசம். வள்ளற் பெருமான்
அருளிய இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தில். ஆன்ம ஒழுக்கம் ஆகிய நான்காம்
ஒழுக்கத்தை இவ்வாறு விவரிக்கின்றார் வள்ளல் பெருமான்.
“ஆன்ம ஒழுக்கம்: எண்பத்து நான்கு லக்ஷம் யோனிபேத முள்ள ஜீவர்களிடத்திலும்
இரக்கம் வைத்து, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும்
கண்டு பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்.”[4]
கொலையின் துன்பம்:
உயிர்க்
கொலை நிகழக்கூடாது, உயிர்கள் துன்பம் அடையக் கூடாது என்ற
கருத்தில் உறுதியாக இருக்கின்ற வள்ளற்பெருமான் அக்கருத்தை மக்களுக்கு தெளிவாக
உணர்த்தும் பொருட்டு அந்த கொலையினால் கொலைபடும் உயிர்க்கு உண்டாகும் துன்பங்களைத் தன்னுடைய மிகவும் உருக்கமாக விவரிக்கின்றனர்,
“எவ்வுயிர்களையுஞ் சமமாகக் கொள்ளவேண்டுமென்பது எவ்வகையாலென்பீரேல்:
1.
உயிர்களெல்லாஞ்
சிற்சத்தியினுருவமாகலானும்
2.
எல்லா உயிர்களுக்கும் இறைவனே
தனுகரணங்களைக் கொடுத்தலானும்,
3.
அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன்
கொடுத்தருளிய உடம்பினின்றும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதமாகவானும்,
4.
எந்தெந்த உயிர்களும் இயல்பினால்
அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் பிரியும்படி நேரிட்டால் அந்தந்த
உயிர்களுக்கும் அவ்வவ் வுடம்பை விட்டு நீங்கும்போதுண்டாகும் வருத்தம் பெரிதாக
இருக்கமாகலானும்,
5.
அன்றியும் கொலை செய்யுமிடத்து:
கரும்பையும்
எள்ளையும் ஆலையிலுஞ் செக்கிலும் வைத்தாட்டும்போது நெருக்கிலகப்பட்டு அரைபட்டு
நசுக்குண்டு சின்னாபின்னப்பட்டு அக்கரும்பிலும் எள்ளிலுமிருந்து ரசமும் நெய்யும்
எப்படிக் கலங்கி வருமோ அப்படியே, உடல் நசுக்குண்டு அரைபட்டுச்
சின்னமாக அதிலிருந்து நடுநடுங்கி அறிவுகெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது
எவ்வுயிர்களுக்கும் பொதுவாகலானும்,
தமக்குக்
கொலை நேரிடுவதை அறிந்தபோது உடம்பு நடுங்கியும், பதைத்தும், வியர்த்தும் தடதடத்துந் தள்ளாடியும், கால்சோர்ந்தும்,
கண்கலங்கியும், இருளடைந்தும், காதுகள் கும்மென்று அடைபட்டும், நாசி துவண்டும்,
வாய்நீருலர்ந்தும், நாக்குழறியும், வயிறு பகீரென்று திகிலடைந்தும், மனம் திகைத்துப் பறை
யடித்தாற்போற் பதபதவென்று அடித்துத் துடித்துத் துக்கமுஞ் சோர்வுங் கொண்டு
மயங்கவும்,
பாய்மரச்
சுற்றி லகப்பட்ட காக்கை போலவும், நீர்ச்சுழியி லகப்பட்ட வண்டு
போலவும், சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், உயிர் சுழன்று சுழன்று அலையவும் உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும்
இயல்பாகலானும்,
இறந்தவுடன்
அவ்வுயிர்கள் இழப்பினாற்பட்ட இம்சையுமன்றி உடனே பிறப்பினாலும் வருத்தமடைந்து
துக்கப்பட வேண்டுமாகலானும்,
என்று கொலையின்
துன்பத்தை இங்கு பெருமான் விவரிக்கின்றார்.
உயிர் கொலை
செய்ய யார்க்கும் சுதந்திரம் இல்லை:
உயிர்க்கொலையாகிய கொடிய பாதகத்தை செய்வதற்கு யாருக்கும் சுதந்திரம் இல்லை என்று வள்ளல் பெருமான் கூறுகின்ற ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது. உயிர்கள் ஆனாதியாகிய நிலையில் உள்ளது[5] என்பது சித்தாந்தத்தில் கூறப்படுகின்ற கருத்து.
இறைவன்
உயிர்கள் பக்குவம் அடையும் பொருட்டு உயிர்களை இந்த உடம்பினோடு அதாவது தனு, கரண, புவன, போகங்களோடு
சேர்ப்பித்து உதவி செய்கிறார். அப்படி இறைவனால், உடம்போடு
பொருத்தப்பட்ட இந்த உயிரை நீக்குவதற்கு இறைவன் ஒருவனுக்கே சுதந்திரம் உள்ளது
என்றும், மற்றையர்கள் யாருக்கும் அந்த
சுதந்திரம் இல்லை என்றும் வள்ளற்பெருமான் மிக அழுத்தந்திருத்தமாக
குறிப்பிடுகின்றார். அதை மீறிக் கொலை செய்தால். அந்த பாவம் அவர்களை மீளா நரகத்தில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளல் பெருமான்
இங்கு குறிப்பிடுகிறார். அந்தப் பகுதி இங்கு வருமாறு.
“நாம் வேண்டி ஓருயிரைப் பிறப்பிப்பதற்குச்
சுதந்தரமில்லாதபடியால் நாம் வேண்டி ஓருயிரை இறப்பிப்பதற்கும் சுதந்திரமில்லை;
இறப்பிப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் இறைவனே சுதந்தரமுள்ளவனென்
றெண்ணாமல் ஆகாமியத்தால் கொலை செய்வதனால் மீளாநரகம் நேரும் என்றறிந்து கொள்வீர்;
ஆதலால் எவ்வுயிர்களிடத்துங் கொலைப்பாதகத்தைச் சமமாகக் கொள்ளவேண்டும்”.
ஜீவகாருண்யமே
வடிவம்:
மேற்குறித்த
பாவத்தை நினைத்து வருந்துகின்ற வீதிவிடங்கனின் தன்மையை மந்திரிகளின்
மூலம் “எங்கே தான் வேகமாக நடந்தால்
அதிர்ச்சியில் எறும்பு முதலிய சிற்றுயிர்களுக்கு துன்பம்
உண்டாகுமோ என்று நடக்கும் போது கூட மிக மென்மையாக நடக்கின்றவன் வீதிவிடங்கன் என்று வள்ளற் பெருமான் வீதிவிடங்கனை ஜீவகாருண்யத்தின்
வடிவமாகவே கூறுகின்றார். நாமும் நம் ஒவொரு அசைவிலும் ஜீவகாருண்யம்
உடையவராய் இருக்க வேண்டும் என வீதவிடங்கன் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். அப்பகுதி:
“உமது புத்திரன் சீவகாருண்ணியமே தேகமாகக் கொண்டவன். தான் பூமியதிராது
எந்தச் செந்துக்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோவென்று கீழ்நோக்கி அஞ்சி யஞ்சி
மெல்லென நடக்கின்றபோது, வேறோர் அதிர்ச்சியினால் நடுங்கிச்
சிற்றெறும்புகள் விரைவாக ஊர்ந்து போகின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு, 'ஓகோ என்ன பாவம்! இந்த உயிர்களுக்க நடுக்கம் உண்டாக நடந்தோமே' என்று எண்ணி முகஞ்சோர்ந்து பிரமைகொண்டு நிற்க நாங்கடள அனேக முறை
பார்த்திருக்கின்றோம்:
பாவங்களின்
பட்டியல்:
திருவருட்பிரகாச
வள்ளல் பெருமான், கொலை ஆகிய பெரும் குற்றத்தை
தவிர்த்து ஜீவகாருண்ய நெறியைப் பிரகாசிக்கச் செய்ய இந்த நூலை இயற்றினார் என்பது
பேருண்மை. அதற்கு இணங்க, ஜீவகாருண்யத்திற்கு எதிரான மற்றைய
குற்றங்களையும் கடிய நினைத்த வள்ளற்பெருமான் எவையெல்லாம் அந்த பாவங்கள் என்பதை
மனுநீதிச்சோழன் நான் என்ன பாவம் செய்தேனோ? என்று கூறி
வருந்துவதாக பட்டியலிட்டு நமக்கு காண்பிக்கின்றார்.
இந்த
பாவங்களில் இருக்கின்ற பட்டியல்களை நாம் தவிர்த்தாலே இறைவனுடைய திருவருளுக்கு முழு
பாத்திரராக நம்மால் மாற முடியும் என்பது வள்ளற் பெருமான் நமக்கு உணர்த்துகின்ற
செய்தி, “நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ” என்று தொடங்குகின்ற அந்த பகுதி, பல்வேறு
அறக்கருத்துக்களை தாங்கி நிற்கின்றது. பலவேறு நீதி நூல்களை நாம் படித்து தெரிந்து
கொள்ள வேண்டிய அத்தனை கருத்துக்களையும் வள்ளற்பெருமான் 42 வரிகளில், நமக்கு உணர்த்துகின்றார். மனிதப் பிறப்பை
பெற்ற ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகுதி இந்த பகுதி என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
நிறைவுரை:
உயிரிரக்கமும், ஜீவகாருண்யமும், புலால் மறுத்தலும் சுத்த
சன்மார்க்கத்தின் மிக அடிப்படையான கோட்பாடுகளாகும். இந்த அடிப்படையான
கோட்பாடுகளில் இருந்து நீங்கியவர்களை வள்ளற் பெருமான் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.
அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், வள்ளற்பெருமான்
அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டேன் என்று குறிப்பிடுகின்றார்.
ஒருவர் ஆணை
பெண்ணாக்கக்கூடிய தகுதியுடையவராயிருந்தாலும். பெண்ணை ஆண் ஆக்கினாலும், இறந்தவர்களையே எழுப்புகின்ற சித்துக்களை உடையவர்களாக இருந்தாலும், ஓர் உயிரை
கொன்று அந்த உடம்பை உண்ண வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவராக
இருந்தால். எண்ணம் உடையவராக இருத்தல் என்பது இங்கு நாம்
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி. அந்த செயலை செய்யவில்லை, ஆனால் அந்த எண்ணமுடையவராக இருந்தாலும் அவரை நான் ஞானி என்று கூற மாட்டேன், இது என்னை உடைய இறைவன் மீது ஆணை என்று
வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். [6]
எனவே இங்கு
வள்ளல் பெருமானுடைய உயிர் இரக்கக் கொள்கையும், அதுவே இறைவனை அடைவதற்கான முதல் வழி என்பதையும் மனு முறைகண்ட
வாசகத்தின் மூலம் மிகத் தெளிவாக நாம் உணர
முடியும். இக்கருத்தை உணர்ந்து ஜீவகாருண்ய வாழ்வில் நாமும் வாழ்ந்தால் இறைவன்
நம்மை நாடி வருவது உறுதி.
வளர்க சன்மார்க்க
நெறி!
[1]
ஜீவகாருண்ய ஒழுக்கம் நூல் – முதற்பாகம்
[2]
சேக்கிழார் அருளிய பெரியபுராணம் - திருமலைச் சருக்கம் - திருநகர்ச்
சிறப்பு
[3]
திருஅருட்பா உரை நடைப் பகுதி – உபதேசக் குறிப்புகள்
– 101. சன்மார்க்க சாதனம்
[4]
திருஅருட்பா உரை நடைப் பகுதி – உபதேசக் குறிப்புகள்
– 100. சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் புருஷார்த்தம்
[5]
திருமந்திரம்: 115 – பதியினைப் போல் பசு
பாசம் ஆனாதி
[6]
திருஅருட்பா - இரண்டாம்
திருமுறை 5. அறநிலை விளக்கம்
1. மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
ஞானிஎனக் கூறொ ணாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக