அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
“தனித்தலைமைப் பெரும்பதி” 27/06/2023
கட்டுரை: திரு. ஆனந்தபாரதி, வடலூர்.
முன்னுரை:
திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் விளக்கம் செய்த சுத்த
சன்மார்க்க நெறியின் முதல் தலையாய கொள்கை “கடவுள் ஒருவரே” என்பது, “கடவுள் ஒருவர்
உள்ளார் என்றும், அந்த ஒரே கடவுளாகிய
உண்மைக் கடவுளை உயிர்கள் கருத்தில் கருதி வழிபாடு செய்து,
அந்த கடவுளுடைய திருவருள் விளக்கம் உயிர்களிடத்து விளங்கி அந்த விளக்கத்தினால்
உயிர்கள் பெறவேண்டிய ஆன்ம லாபத்தை பெறலாம்” என்பது சுத்த
சன்மார்க்கத்தினுடைய முக்கிய கொள்கை.
“பல்வேறு கடவுள்களை சிந்தித்தும். மதத் தலைவர்கள், பதத் தலைவர்கள் முதலியவர்கள் இடத்தில் சிந்தையைச் செலுத்தியும் மக்கள் வீண்போது கழித்து தங்களுடைய பிறவிப் பயனை அடையாது,
திருவருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாது. பல்வேறு கற்பனைகளில் உழன்று வருகின்றார்கள்” என்று வள்ளல்பெருமான்
வருந்துகின்றார். கடவுள் ஒருவரே உண்டு என்பதையும் அந்த ஒரே கடவுளாகிய தனித்தலைமைப் பெரும்பதியின்
உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்குவதே
இக்கட்டுரையின் நோக்கம்.
மக்களினத்தில்
மயக்கம்:
ஆதிலே கடவுளுடைய அருளால் தோற்று
விக்கப்பட்ட சுத்த சன்மார்க்க கொள்கையின் அடிப்படையில் மக்களிடம் வாழ்ந்து
கொண்டிருந்தது. “இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம்” என்று வள்ளற் பெருமான் குறிப்பிடுவதுனாலே இதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அப்படி மக்களினம் தூய நெறியான சுத்த சன்மார்க்கத்தில் வழங்கி வந்த காலத்தில்,
காலப் போக்கில், பல்வேறு சமய மத மார்க்கங்கள் இங்கு தோன்றியன, அப்படி சமய மத மார்க்கங்களைத் தோற்றுவித்த
பெரியவர்களும் முழுமையாக மாயையிலிருந்து வெளிப்பட்டு
வந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது ஆதலினாலே அவர்அவருடைய போக்கின்படி இறைவனுக்கு வடிவம், வாகனம் முதலியவைகளை
அமைத்தும், தான்
வந்த வழியின்படியும் அல்லது தனக்கு தெரிந்த வழியின் படியும் தன்னைச் சார்ந்திருந்த
மக்கள் இனத்திற்கு வழிபாட்டு முறைகளை காட்டியும் அவர்கள் மறைந்தார்கள்.
அதன் காரணமாக வழிபாட்டு முறைகள் பல கடவுள் வழிபாடாக
மாறத் தொடங்கின. கடவுள் ஒருவர் என்றும் அந்த ஒரு கடவுள் ஆகிய தனித் தலைமைப்
பெரும்பதியையே நாம் வழிபட்டு அவருடைய திருவருளை நாம் அடைய வேண்டும் என்கின்ற
எண்ணமானது மாறுபட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் என்றும், ஒவ்வொரு தேவைக்கும்
ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்தால் அதன் மூலமாக நமக்கு அந்த பொருள் கிடைக்கும்
என்றும் கடவுள் வழிபாடானது உலக வாழ்க்கையினுடைய மயக்கத்திற்கு உதவுகின்ற ஒரு
செயலாக மாறிப் போய்விட்டது.
ஆக இப்படி பல்வேறு கடவுள்களும், பல்வேறு கற்பனைகளும்,
சமய சடங்குகளும் மதமாச்சரியங்களும் இங்கு உண்டாகி மக்களுடைய மனத்தில்
பதிந்து உண்மை நெறியிலே செல்லாமல் தடுத்துவிட்டது. இதையே வள்ளல் பெருமான்
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
(#6-066 ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு)
என்கின்ற பாடலில்
குறிப்பிட்டு வருந்துகிறார்கள்.
மதத்தலைவர் - பதத்தலைவர்:
கடவுளுடைய சமூகத்திலேயே பல்வேறு
சத்திசத்தர்களும், மதத் தலைவர்களும், பதத்
தலைவர்களும் பணி செய்கிறார்கள், அப்படி செய்கின்ற
அவர்களினாலேயே பரிபூரணமான திருவருளை அவர்களை வழிபடுகிறவர்களுக்கு வழங்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது என்று வள்ளல் பெருமான்
குறிப்பிடுகிறார்கள்,
“அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.”
#6-081
ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்
என்று மிக அழகாக தன்னுடைய அருட்பாவில்
குறிப்பிடுகிறார்கள்.
“மக்களினம் அடைய வேண்டிய. நான்கு புருஷார்த்தங்களாகிய 1.ஏமசித்தி 2. சாகாக்
கல்வி, 3.தத்துவ நிக்கிரகம் செய்தால் 3.
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கின்ற இந்த நான்கு உயரிய
மெய்ஞ்ஞான நிலைகளையும் மதத் தலைவர்களாலும், பதத் தலைவர்களாலும் அல்லது சிறு தெய்வங்களாலும்
வழங்கப்பட முடியாதவையாகவும், ஏக இறைவனாகிய தனிப்பெரும்
தலைவன் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவராலேயே இந்த புருஷார்த்தங்களை
உயிர்களுக்கு வழங்கி பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்ற முடியும்” என்று வள்ளல் பெருமான் நம் மனித இனத்திற்கு மிக மிக
உறுதியாகத் தெரிவித்துக் கொண்டே வருகிறார்.
கடவுள்
ஒருவரே எனத்தெளிதல்:
கடவுள் ஒருவர்தான் அந்த கடவுள்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக விளங்குகின்ற தனிப்பெரும் தலைமை தெய்வம் என்று நாம்
உணர்வது தான் சுத்த சன்மார்க்கத்தில் முதலிலேயே அடைய வேண்டிய தெளிவாகும்.
கடவுள் ஒன்றுதான் என்று உணராமல், கடவுள் ஒன்று
என்றும், இரண்டு என்றும் மூன்று என்றும் இப்படி பல வாறாக
நாம் எண்ணுவது, நம்முடைய உடம்புக்கு உயிர் பலவாக இருப்பதைப்
போல இருக்கின்றது என்று சொல்லி வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்கள்.
உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ
வர்கள்என்றும்
எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன்
றெனலாமே.
(#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்)
மேலும்
சத்திய சிறு விண்ணப்பதில் ஐந்தொழிலுக்கு ஆணை செலுத்தி உயிர்களை வாழ்விக்கின்ற கடவுள்
ஒருவரே என்று உறுதியாகக் கூறுகின்றார்.
“எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ்
செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம்
வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும்
பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டு” என்கின்றார்.
தெருள் பெறில் அருள்உரும்:
வள்ளற்பெருமான் மனிதர்களின் மீதும்
பிற உயிர்களின் மீதும் மிகுந்த கருணையை உடையவர்கள் ஆதலிளால் “மனிதர்கள், உண்மையான ஒரு கடவுளை தெரிந்து கொள்ளாது, பலவேறு கற்பனா மார்கங்களிலேயே சென்று அதனாலே வீண் போது
கழித்து மரணத்தை தழுவி, பிறந்து, பிறந்து
இறந்து இறந்து வீண் போகாமல் தடுப்பதற்கு இந்த சுத்த சன்மார்க்க கொள்கையை
நிறுவினார்”
இந்த சுத்த சன்மார்க்கத்தினுடைய அடிப்படையிலே, கடவுள் ஒருவர்
என்கின்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அந்த ஒரே உண்மைக் கடவுளை
கருத்தில் கருதியும், அன்பு செய்தும் ஜீவகாருண்யத்தையும். ஒழுக்கத்தையும் சாதனமாக கொண்டு, கடவுளை வழிபட்டு அவருடைய திருவருளை பெற வேண்டும். அப்படி அவருடைய திருவருளை நாம்
பெற்றால் அந்த திருவருள் நமக்கு மரணமில்லாத பெருவாழ்வு முதலியவற்றை வழங்கி மனித இனத்தை என்றும் அழியாத அருள் இனமாக
ஆக்கி திருவருள் செய்யும் என்பதற்காகவே வள்ளல் பெருமான் கருணையினாலே இந்த தெய்வம்
தெளிதல் என்கின்ற விஷயத்தை சுத்த சன்மார்க்கத்தின் முதற் கொள்கையாக
வைத்திருக்கிறார்.
நிறைவுரை:
சன்மார்க்ககளாகிய நாம் ஒவ்வொருவரும்
பல கடவுள் வழிபாடுகளை விடுத்து. சடங்கு,
சமயம், மதம் மார்க்கம்
முதலியவற்றில் இருக்கின்ற பற்றை விட்டு. ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கைவிட்டு, கருணை நன் முயற்சியினாலும், சுத்த சன்மார்க்க
ஒழுக்கத்தினாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கருத்தில் கருதி
வழிபாடு செய்து உண்மை அன்பினால் வழிபட்டு வந்தால் அந்த ஆண்டவருடைய திருவருளை. நாம்
பெற்றுக்கொள்ளலாம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சன்மார்க்களாகிய நாம்
முதலில் பெற வேண்டியது “தெய்வம் தெளிதல்” ஆகிய இந்த
ஒரு கொள்கையே. கடவுள் ஒருவரே என்பதை நாம் ஊன்றி
அறிந்து அந்த கடவுளை நினைந்து அவருடைய அருளை பெறுவோம்.
நன்றி,
வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக