அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
அருட்செல்வரைப்
பேற்றுவோம்!
-
ஆனந்த பாரதி
ஆன்மநேய
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வள்ளல்
பெருமானின் இருநூறாவது வருவிக்க உற்ற வருடத்தைக் கொண்டாடி வருகின்ற சன்மார்க்க உலகத்துக்கு மற்றொரு முக்கிய
நினைவு கூறத்தக்க நிகழ்வு அருட்செல்வர் என். மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு
நிறைவு. வள்ளலார் அவதரித்த 100 ஆண்டுகளுக்கு பிறகு இத்தமிழ்
மண்ணில் தோன்றி சன்மார்க்க வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்தவர் அருட்செல்வர்.
என். மகாலிங்கம் அவர்கள்,
அண்ணாரின் சன்மார்க்கப் பெரும் பணிகளை
நன்றியோடு நினைவு கூறி, அவருடைய பெரும் புகழைப் போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிறப்பும், இளமையும்:
திரு.நாச்சிமுத்து,
திருமதி.ருக்மணி தம்பதியினருக்கு 1923 ஆம்
ஆண்டு மார்ச் 21ஆம் நாள் அருட்செல்வர்
பிறந்தார். பொள்ளாச்சியில் பள்ளிக் கல்வி
முடித்து பின் சென்னை லயோலா
கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்றார், பின் கிண்டி
பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.
அருட்செல்வரின் தந்தை
நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக இருந்தவர். 1934இல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து
வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே காந்தியின்
கொள்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.
அருட்செல்வர்
அவர்களுக்கும்
அவரது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களுக்கும் 1945
இல் திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு ஒரு
மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர்.
அரசியல் தொண்டு:
பொள்ளாச்சி
சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞர் அருட்செல்வர் அவர்கள். பின்னர் 1957, 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்
மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப் பெற்று
தந்திருக்கிறார்.
இராமலிங்கர் பணி மன்றம்:
1969
முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக
முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் பணிகளை
மேற்க்கொள்ளத் தொடங்கினார். தனது தந்தை அவர்களின் வழியில் காந்தி அடிகள் மற்றும் வள்ளல்
பெருமானின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டு காந்திய மற்றும் சன்மார்க்கப் பணிகளில் ஆர்வம்
கொண்டார். சென்னையில் “இராமலிங்கர் பணி மன்றம்” என்னும் அமைப்பைத் தொடங்கி சன்மார்க்கத்தின்
வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.
திருஅருட்பா உரைத் திருப்பணி:
அண்ணாமலைப்
பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேரறிஞரும்-உரைவேந்தர் என்று தமிழ் உலகம் போற்றும்
தமிழறிஞருமான ஒளவை, சு.துரைசாமி அவர்களைக்
கொண்டு, பெரு நிதியும் செலவு செய்து திருவருட்பா
முழுவதற்கும் வரலாற்று முறைப்படி விரிவுரை எழுதச் செய்தார்கள் அருட்செல்வர்
அவர்கள். 1969 ஆம் ஆண்டுமுதல் ஏழாண்டு காலம் பொள்ளாச்சியில் அருட்செல்வரின்
இல்லத்தில் தங்கி இந்த அருட்பணியை செய்தார் ஒளவை, சு.துரைசாமி அவர்கள்.
திருவருட்பா
உரைப் பகுதிகள் அனைத்தையும் பல்கலைக் கழக இணைவேந்தரும்,
பெருவள்ளலுமான ராஜா சர். முத்தையா செட்டியார்
அவர்களிடம் அருட்செல்வர் ஒப்படைத்தார்கள். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்களின் துணையாலும்,
அரசர் அவர்களின் வழிகாட்டல் படியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவ்வுரைகளை 1983 ஆம்
ஆண்டு முழுவதும் வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியது.
திருவருட்பா
முழுதுக்கும் வரலாற்று முறைப்படி உரை காணச் செய்த அருட்செல்வர் அவர்களுக்கு சன்மார்க்க
உலகமும் சன்மார்க்க அன்பர்களும் அவரின் இன்னூற்றாண்டில் நன்றியோடு நினைவுகூற வேண்டும்.
அகவல் உரைவிளக்கத் திருப்பணி:
வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி
அகவலில் 1596 வரிகள் உள்ளன. இந்த அரிய
நூலுக்கு உரைகாண வேண்டும் என்று பலரை அருட்செல்வர் வேண்டிவந்தார். யாரும் முன்வரவில்லை. எதிர்பாராமல் அன்பர் ஒருவரின் மூலம் திண்டுக்கல்
தவத்திரு சரவணானந்தரைத் தரிசிக்கும் பேறு பெற்றார்.
அவரிடமும் இந்த வேட்கையை வெளிப்படுத்தினார். சுவாமிகளோ பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாக
அறைக்குள் சென்று நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களை அளித்தார். அவைதான் அகவல்
உரை.
ஞானசபைத்
திருப்பணி நடந்து வரும் அக்காலத்தில், அகவலின் விளக்க உரை நூல் வடலூர்த் திருநாளாகிய 1974 வைகாசி
11ல் அருட்செல்வரின் இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலம்
வெளிவந்தது.
சுத்த சன்மார்க்க நிலையம்:
முன்னால்
தமிழக முதல்வர் ஒ.பி. இராமசாமி அவர்கள் நிறுவிய வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் தலைவர் பொருப்பை
ஏற்று சிறப்பாக நடத்தினார். பல்வேறு கல்வி நிறுவனங்கள் இன்றும் வடலூரில் சிறப்பாக இயங்கி
வருவது இதற்குச் சான்றாகும். வடலூர் சத்திய
ஞான சபைத் திருப்பணி அண்ணாரின் சன்மார்க்கப்பணிகளில் மிகமுக்கிய பணியாகும்.
அக்டோபர் முதல் வாரத்தில்
ஆண்டுதோரும் நடைபெறும் வள்ளலார்-காந்தி விழா அருட்செல்வர் சன்மார்க்க உலகத்திற்கு
அளித்த முக்கிய கொடைகளில் ஒன்று.
சன்மார்க்க
உலகத்தின் பெரு வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற அத்தனை தொண்டுகளையும் செய்த அருட்செல்வர் அவர்கள். 91 ஆண்டுகள்
இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இந்த காலத்தில் அவர்கள்
சன்மார்க்க ஒழுக்கங்களை ஒழுகி, சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு
முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள் என்பது மிக மிக முக்கியமான செய்தியாகும்.
ஊரன்
அடிகளார், கோவை. சிவப்பிரகாச சுவாமிகள்,
சுவாமி சரவணானந்தர் முதலிய சன்மார்க்கப் பெரியவர்களை ஆதரித்து அவர்களுடைய தொண்டுக்கள் சிறக்க பல்வேறு உதவிகளை அருட்செல்வர் அவர்கள் செய்தார்கள். அருட்செல்வர்
அவர்களின் சன்மார்க்க தொண்டு இந்த சிறிய கட்டுரையினால் முழுவதுமாக விளக்கக்
கூடியவை அன்று. அவரின் தொண்டினை அறிமுகப்படுத்துவதே
இக்கட்டுரையின் நோக்கம்.
வள்ளல்
பெருமானின் வழிவழி தொண்டர்கள் வரிசையில் அருட்செல்வர் முக்கிய இடத்தை என்றும்
பெறுவார், வள்ளல் பெருமானை போற்றுகின்ற நாம் ஒவ்வொருவரும் அருட்செல்வரின்
சன்மார்க்க பெரும் தொண்டை போற்றி அவரை என்றும் நினைவுகூறுவோம். அதுவே நாம்
அவருக்கு செய்கின்ற பெரும் நன்றியாகும்.
நன்றி
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக