திருவடிப்புகழ்ச்சி - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
- ஆனந்த பாரதி. பெங்களூரூ.
வணக்கம்,
உலகம் உய்ய, ஞானக் களஞ்சியமாகிய, திருஅருட்பாவினை நம்முடைய அருட்தந்தையாகிய திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு அருளிச் செய்திருக்கின்றார்கள். திருவருட்பா பல்வேறு சன்மார்க்க பெரியவர்களான தொழுவூர் வேலாயுதனர், இறுக்கும் ரத்தினம், சிவானந்தபுரம் செல்வராயர், புதுவை வேலு, காரணப்பட்டு கந்தசாமி, ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை, ஊரன் அடிகள் முதலிய பல்வேறு அறிஞர்களின் உழைப்பாலும், தியாகத்தினாலும் இன்றைக்கு நம் கையில் அருட்செல்வமாகத் தவழுகின்றது.
இத்திருஅருட்பா ஆறு திருமுறைகளாகவும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஆகவும் விரிந்து இவ்வுலகத்திற்கு மெய்ஞ்ஞான கருத்துக்களை வழங்கி வருகின்றது. அத் திருஅருட்பாவினை அன்பர்கள் உணர்ந்து ஓதி பயன்பெறும் பொருட்டாக, திருவருட்பாவின் பதிகங்களை அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே, இக்கட்டுரைத் தொடர்.
திருவடிப்புகழ்ச்சி:
திருவடி + புகழ்ச்சி - திருவடிப்புகழ்ச்சி. இறைவன் திருவடியைப் புகழ்வது என்பது இந்தப் பதிக தலைப்பின் பொருள். இது நான்கு அடிகளைக் கொண்ட ஆசிரிய விருத்தம், இது 128 அடிகளால் மிக்குவந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனத் தொழுவூர் வேலாயுதனாரும், 192 சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என ஊரன் அடிகளாரும் குறிப்பிடுவர்.
“திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் கையெழுத்தில் உள்ள மூல ஏடு இந்த திருவடிப் புகழ்ச்சி அச்சுக்கு ஆதார ஏடாக அமைகின்றது. இதன் ஒவ்வோர் ஏட்டிலும் பெருமான் “உ சிவாயநம" என்னும் பஞ்சாட்சரத்தை முதற்கண் வைத்தே தொடங்கியிருக்கிறார்கள்” என்று பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய திருவருட்பா செம்பதிப்பில் குறிப்பிடுகின்றார்.
1867 இல் வெளிவந்த முதல் நான்கு திருமுறையில் இது முதல் திருமுறையில் அமைந்துள்ளது. ‘இன்று வருமோ’ என்னும் காப்புச் செய்யுளோடு இருப்பதால் இஃது ஓர் நூலாகும். முதல் திருமுறையில் உள்ள எட்டு நூல்களுள் இதனை முதல் நூலாக அமைத்தவர் தொழுவூர் வேலாயுதனர். ஊரன் அடிகளாரின் வரலாற்று முறைப் பதிப்பில் இது மூன்றாம் திருமுறையில் உள்ளது.
திருவடிப் புகழ்ச்சி நான்கு அடிகளாக அமைந்திருக்கின்றது. முதல் அடி ‘பரசிவம்’ என்றும், இரண்டாவது அடி 'தரம்மிகும்' என்றும் மூன்றாவது அடி 'மரபுறு' என்றும், நான்காவது அடி 'இரவுறும்' என்றும் தொடங்குகின்றது.
‘பரசிவம்’ என்னும் முதல் அடி, வேத ஆகமங்கள் இறைவனைத் தொழுகின்ற தன்மையை நமக்கு உணர்த்துவதற்காக அம்மறை மொழிகளைக்கொண்டே, வடமொழிச் சொற்களாலேயே இறைவனுக்கு பாமாலையாக சூட்டப்பட்டு இருக்கின்றது. முறையே இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஆகம இதிகாச புராணங்களின் வழி நின்று கடவுளின் அருள் செய்கைகளை, அவரின் திருவடியை, வாழ்த்தி வணங்குகின்றார் நமது பெருமான்.
கடவுளின் பொது இலக்கணம், கடவுளின் சிறப்பு இலக்கணம், இறைவனின் திருவடி பல்வேறு சத்திகளாய் தொழில் படுகின்ற தன்மைகள். இறைவனுடைய திருநடனத்திறம். ஐந்தொழில் கர்த்தர்கள், எண்திசைக் காவலர்கள், பல்வேறு கணத்தவர்கள், சிவகணத் தலைவர்கள், அடியவர்கள் முதலானவர்கள் இறைவனுடைய திருவடியை வழிபடுகின்ற விதம், முதலியவைகள் இங்கு வள்ளல் பெருமானால் விரிவாக பேசப்படுகின்றது.
நான்காவது பகுதியில், அருளாளர்கள் ஆகிய நால்வர் பெருமக்களுக்கு இறைவனின் திருவடி அருள் செய்த திறத்தையும், பின்பு தனக்கு அத்திருவடி அருள் செய்த விதத்தையும், தான் இறைவனின் திருவருளோடு கலந்து அனுபவிக்கும் அனுபவத்தையும், அது அழிவில்லாத நிலையை தனக்கு தந்தது பற்றியும் வள்ளல் பெருமான் இங்கு குறிப்பிடுகின்றார்.
பெருமான் சித்தி வளாகத்தில் உறைந்த காலத்தில், திருவடிப் புகழ்ச்சியே வெகுவாக பாராயணம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது செவி வழி செய்தி. ஒரு முறை, காரணப்பட்டு கந்தசாமி அவர்கள் திருவடிப் புகழ்ச்சியை இசையோடு பாடிக் காண்பிக்க, அவர் பாடியதை விடவும் மிகுந்த இசையோடு அழகாக வள்ளற் பெருமான் அத் திருவடிப்புகழ்ச்சியைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் என்கின்ற செய்தியையும், நாம் வள்ளல் பெருமானுடைய வரலாற்றில் காணலாம்.
இத் திருவடிப்புகழ்ச்சியை இறைவன் திருமுன்பு ஓதி வழிபடுவார்கள் வேதம், ஆகமம், புராணம். அருளாளர்கள் உடைய வாய் மொழிகள் ஆகியவற்றைக் கொண்டு இறைவனை வழிபட்ட பலனை பெறுவார்கள் என்பது பெரியோர்களுடைய கருத்து.
பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இத் திருவடிப் புகழ்ச்சியை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு
4. வடலூர் - வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பாடநூல் - முனைவர் இராம. பாண்டுரங்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக