சிவபுண்ணியத் தேற்றம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.
வணக்கம்,
திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஏழாம் பதிகமாகிய சிவபுண்ணியத் தேற்றம்.
பதிக அமைப்பு:
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால், வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் திருநீற்றில் அவசியம் இறைவனின் பெருமை முதலிய செய்திகளை இங்கு உறுதியாகப் பாடிப் பரவுகின்றார் வள்ளல் பெருமான்.
“பொருட்டே” என்னும் சொல் பாடல் தோறும் மகுடம் பெற்று நிறைவுறுகின்றது.
பதிப்புகள்:
திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஏழாவதாக வைத்துச் சிறப்பித்தார்.
திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஏழாவது பதிகமாகவே உள்ளது.
சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 38 வதாக இடம்பெற்றுள்ளது.
ஏட்டுச் சுவடிகள்:
இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 28, 29 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ. சிவமயம், சிவமயம்” என்றும், “உ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பதிகப் பொருண்மை:
சிவபுண்ணியத் தேற்றம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. தொன்மைச் சைவ நெறியின் அருட் சின்னமாம் திருநீற்றின் சிறப்பையும், அச் சைவ நெறியின் கண் இருந்தும் அதை அணியாது இருத்தலின் குறையும், சிவபெருமானின் பல்வேறு அருள் வரலாறுகளும், இப்பதிகத்தில் பெருமானால் விதந்து பேசப்படுகின்றது.
சில பாடல்களும் விளக்கமும்:
சைவ நெறியில் நின்று ஒழுகுபவர்களுக்குத் திருநீறு அணிவது மிகவும் அவசியமானதாகும். சைவ சமய அருட்சின்னங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திருநீறு அருளாளர்களால் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் முதலிய அருளாளர்கள் அருளிய "மந்திரமாவது நீறு" என்னும் பதிகத்தை ஓதுவோருக்கு, திருநீற்றின் உண்மைப்பொருள் நன்கு புலப்படும். அத்தகைய அருளாளர்களின் வழிநின்று, வள்ளல் பெருமானும் அத்திருநீற்றின் உண்மையையும் பெருமையையும் இங்கு சிறப்பித்துப் பாடுகின்றார்.
திருநீறு அணிவது என்பது சைவ சமயத்தின் ஒரு முக்கியமான கொள்கையாகும். இத்திருநீற்றை அணிவது, இறை அன்பை வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. திருநீறு அணிந்தவரே சிவபெருமானிடம் மிகுந்த அன்பு பூண்டவர் என்பதற்கு அது ஒரு முக்கிய சான்றாகும் என்பது சைவர்களின் நம்பிக்கை. அந்த வகையிலே வள்ளல் பெருமான் திருநீற்றை 'கடவுள் நீறு' எனக் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட கடவுளிடத்தில் இருக்கின்ற அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாகிய அத்திருநீற்றை அணியாதவரை, வள்ளல் பெருமான் இங்கு 'கடையர்' எனக் குறிப்பிடுகின்றார்.
எதற்காகத் திருநீறு அணிய வேண்டும் என்றால், அத்திருநீற்றின் வெண்மையைப் போல நம் மனமும் தூய்மையுற்று, நாம் ஒற்றியூர் இறைவனைச் சென்று வணங்கி வழிபட வேண்டும். அதன் பொருட்டு நாம் திருநீறு அணிதல் வேண்டும் என வள்ளல் பெருமான் இங்கு குறிப்பிடுகின்றார்.
அதுமட்டுமின்றி, இராவணனின் சாமகானப் பாடலுக்கு இசைந்து, இறைவன் அவருக்கு வாழ்நாளும் வாளும் அளித்தருளிய வரலாற்றையும் நமது பெருமான் இங்கு நினைவுகூர்ந்து பேசுகிறார்.
அப்பாடல் வருமாறு:
கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
மற்றொரு பாடலில்:
சைவ நெறியையும் ஜீவகாருண்யத்தையும் கடைப்பிடிக்காமல், துன்மார்க்கத்தில் நடப்போரை நாம் ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்று வள்ளல் பெருமான் நமக்கு அறிவுறுத்துகிறார். மாறாக, உண்மை ஒழுக்கத்தையும், ஜீவகாருண்யத்தையும் மேற்கொண்டு சைவ நெறியில் நடப்போரை நாம் மனதார மதித்து, அவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்.
எதற்காக நாம் இந்த வழியில் நடக்க வேண்டும் என்றால், உண்மையான அடியார்களை (நண்பர்களை) நம்மோடு இணைத்துக்கொண்டு அன்பு செலுத்தினால், அவ்வன்பு திருவொற்றியூர் இறைவனிடம் நாம் வைத்துள்ள அன்பை மேலும் வளர்க்கத் துணைபுரியும். அதன் பொருட்டே நாம் இதைச் செய்ய வேண்டும் என வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்.
அதுமட்டுமின்றி, அந்த இறைவன் எப்படிப்பட்டவர்? அவர் செய்த அருள் விளையாடல்கள் எத்தகையவை? என்பதையும் வள்ளலார் நமக்கு உணர்த்துகிறார். மேரு மலையை வில்லாக வளைத்தவர்; திருமாலைத் தனக்கு வாகனமான இடபமாக (காளை) உடையவர்; ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தவர்; பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து உண்டாகிய ஆலகால விடத்தைத் தானே அருந்தி உயிர்களைக் காத்தவர்—எனப் பலவாறாக நமக்கு அருள் செய்த அந்த இறைவனை, நாம் அன்போடு வழிபட வேண்டும் என வள்ளல் பெருமான் நமக்கு அறிவுறுத்துகின்றார்.
அப்பாடல் வருமாறு:
நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
இச்சிறந்த பதிகத்தை ஓதி, இறைவனின் அருட் பெருமைகளை உணர்ந்து ஓதி, வழிபட்டு, நாம் பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு – 8- ஆம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக