ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

திருஅருள் வழக்க விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 திருஅருள் வழக்க விளக்கம்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஆறாம் பதிகமாகிய திருஅருள் வழக்க விளக்கம்

பதிக அமைப்பு:

கட்டளைக் கலித்துறை விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய அருள் நூல்களின் மொழியப்படும் இறைவனின் அருட் செய்கைகளை இங்கு பத்திமையோடு பாடிப்பரவுகின்றார் வள்ளல் பெருமான். 

பெருமான் இறைவனை உரிமையோடு எம் கடவுளரே என அழைக்கும் தொடர் மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஆறாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஆறாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய பதிகம் இரண்டாம் திருமுறையுள் 24 வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 95, 96 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ- ஒற்றியூர்” என்றும்,  “உ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பதிகப் பொருண்மை

திருஅருள் வழக்க விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. 

சில பாடல்களும் விளக்கமும்: 

திருமறைக்காட்டின் கதவம் திறந்த அருள் நிகழ்வு இப்பாடலில் பெருமானால் இங்கு புகழ்ந்து ஓதப்படுகின்றது

ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து, பதிகங்களைப் பாடிவந்த திருநாவுக்கரசரும் (அப்பர்) திருஞானசம்பந்தரும் ஒருசேர திருமறைக்காடு வந்தடைந்தனர். கோவிலின் முன்பக்கக் கதவு மூடியிருக்கவே, மக்கள் அனைவரும் திட்டிவாசல் கதவு வழியாகக் கோவிலுக்குச் சென்று வருவதைக் கண்டு துணுக்குற்றனர். அங்கிருந்த சிவனடியார்களிடம் கோவிலின் பிரதான வாசல் கதவு மூடியிருப்பதன் காரணத்தைக் கேட்டறிந்தனர். வேதங்களைக் கற்றுத் தெளிந்த மறையோர்கள் பலர் முயன்றும் தாழிட்ட கதவுகளைத் திறக்க முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டனர்.

திருஞானசம்பந்தர் உடனே நாவுக்கரசரை நோக்கி,

“அப்பரே! வேதங்கள் ஆராதித்த வழியில்தான் நாம் கோவிலுக்குள் செல்ல வேண்டும். எனவே பூட்டியிருக்கும் கதவைத் திறக்க நீங்கள் பதிகம் பாடுங்கள்,” என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.

உடனே அப்பர் பெருமானும் “பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ” என்னும் தேவாரப்பதிகத்தை இறைவன் முன் விண்ணப்பிக்க, கதவு திறக்கவில்லை. நாவுக்கரசர் மிகவும் வருந்தினார். கலக்கத்துடன் பதிகத்தைப் பாடி நிறைவு செய்ததும், ஆலயத்தின் மணிகள் ஒலிக்க, கதவின் தாழ்ப்பாள் விலகி கதவு திறந்தது. இறைவன் அக்கதவுகளைத் திறப்பித்து அருளினார். 

இன்னிகழ்வு இப்பதிகத்தின் ஐந்தாம் பாடலில் பெருமானால் புகழப்படுகிறது. 

அப்பாடல் வருமாறு:

நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்

பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே

ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்

காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.

மற்றொரு பாடலில்:

மாணிக்க வாசகருக்காக இறைவன் குதிரைச் சேவகனாய் வந்த திருவிளையாடல் புராண அருள் நிகழ்வினை இங்கு அன்போடு நினைவு கூறுகிறார். 

பாண்டிய மன்னன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, தன் முதல் அமைச்சர் ஆகிய வாதவூரரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அவரும் அரசனின் ஆணையின் படி பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.

மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய, தானும் தன் பூதகணங்களும் குதிரை நடத்துபவர்களாய் வந்து பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார்.

இறைவனின் இவ்வருள் அற்புதம், இங்கு பெருமானால் புகழ்ந்து ஓதப்படுகின்றது. 

அப்பாடல் வருமாறு:

ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்

சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்

மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்

காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.

பத்தி சுவை தேன் போல் இனிக்கும் பதிகத்தை ஓதி,  இறைவனின் அருட் சீரினை உண்ர்ந்து ஓதி, வழிபட்டு,  நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...