ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

நற்றுணை விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 நற்றுணை விளக்கம்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஐந்தாம் பதிகமாகிய நற்றுணை விளக்கம்

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் தன் நெஞ்சை அழைத்து நீ படுகின்ற துன்பங்களை நினைத்து கலங்காதே! என்று தேற்றி, இறைவனுடைய அருள்சீர்களைப்  பேசி, அத்தகைய பெருமைகள் கொண்ட இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாயம் என்கிற மந்திரம் நமக்கு என்றும் துணையாக இருக்கும் நெஞ்சக்கு உறுதி கூறுகிறார் வள்ளல் பெருமான். 

நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஐந்தாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஐந்தாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய பதிகம் இரண்டாம் திருமுறையுள் 37 வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 26, 27 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ- சிவமயம், சிவமயம். நமச்சிவாய” என்றும்,  “உ” எனப் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பதிகப் பொருண்மை

நற்றுணை விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமை காலத்தில் இயற்றப்பட்டது. 

இப்பதிகம் முழுவதும் இறைவனுடைய அருள் பெருமைகளைப் பேசிய வள்ளற்பெருமான், 'இப்பேரருள் பெருமைகளையுடைய இறைவன் நமக்குத் துணையாக இருக்கும்போது, நீ எதற்காக அஞ்சுகிறாய்? நீ அஞ்ச வேண்டாம். 'நமச்சிவாயம்' என்கின்ற அந்தத் திருநாம மந்திரமே நமக்கு என்றும் துணையாக இருக்கும், மனமே!' என்று இங்கு மிக அழகாகக் குறிப்பிடுகின்றார்.

சில பாடல்களும் விளக்கமும்: 

உலகத்துக்கு ஆதாரமாக இருக்கின்ற சூரியன் ஓடுகின்றான். அவனது சுழற்சியை அடிப்படையாக வைத்துக்கொண்டு மற்ற கோள்களும் உலகமும் அவன் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றன. காலங்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. வயது ஆகிக்கொண்டே போகிறது. இப்படி இருக்க, நமக்கு கால தத்துவத்தினாலே மரணம் உண்டாவது உறுதி. இனி, எமன் வந்து நம்முடைய உயிரைக் கொண்டுபோகும்போது நமக்கு யார் துணையாவார்கள் என எண்ணி வருந்துகின்றாய் நெஞ்சமே!

நீ வருத்தப்படாதே. இறைவனையே துணையாகக் கொண்டு, மார்க்கண்டேய முனிவர் அன்று மரணத்தை வெற்றி கொண்டதை நீ அறிந்திலையோ? அதனால், மார்க்கண்டேயரைப் போல, இறைவனுடைய திருநாமத்தை இறுதியாகப் பற்றியவர்களுக்கு மரணம் என்பதில்லை. அந்த 'நமச்சிவாயம்' என்கின்ற பரம்பொருளுடைய திருநாமமே, அவன் திருவருளே நமக்குத் துணை என்பதை நீ உணர்," என வள்ளற்பெருமான் இந்தப் பாடலில் மிக அழகாகக் குறிப்பிடுகின்றார்.

அப்பாடல் வருமாறு:

ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்

வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ

நாடு கின்றவர் நாதன்தன் நாமம்

நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே. (02:05:05)

( The Sun, which is the very basis (source/support) for the world, runs (moves). Keeping its rotation as the base, the other planets and the world run (move) behind it. Time continues to pass. Age keeps progressing. Given this reality, it is certain that death will come to us due to the principle of time. O my Mind! You worry, thinking, 'When Yama (the God of Death) comes to take our life, who will be our support?'

Do not worry. Have you not heard that Markandeya Muni defeated death that day by taking God (Shiva) as his sole support? Therefore, for those who hold on to the Holy Name of God until the very end, just like Markandeya, there is no death. Realize that the Holy Name of that Supreme Being, 'Namashivayam,' and His divine grace alone are our support," thus Vallalar Peruman beautifully states in this song)

மற்றொரு பாடலில், 

படைத்தல், காத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்யக் கூடிய கருத்தர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு காலத்தில்  இறந்து போய்விடுவார்கள் என்றால், நமக்கு அருள் செய்பவர்கள் யார் என்று எண்ணிக் கலங்குகிறாய். மனமே! நீ கலங்காதே.

அண்ட கோடி பிரபஞ்சங்களை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்ச கிருத்தியங்களையும் தன் ஆணையால் செய்யக்கூடியவன் யார் என்றால், அது 'நமச்சிவாயம்' என்கின்ற பரம்பொருள் என்று நான்கு மறைகளும் புகல்கின்றன.

அத்தகைய நமச்சிவாயம் ஆகிய பெருமான் நமக்குத் துணையாக இருக்க, நீ அஞ்சுவதற்கு இடம் இல்லை. எனவே, அவன் திருவடியைப் பற்றி, திருவருளில் முயன்று, முத்தியின்பத்தைப் பெறுவாய் என்று வள்ளற்பெருமான் தனது நெஞ்சுக்கு அறிவுரை கூறுகின்றார்.

அப்பாடல் வருமாறு:

மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்

மற்றை வானவர் முற்றிலும் அழிவார்

ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே

எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே

கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்

குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்

நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்

நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே. (02:05:07) 

( O my Mind! You worry, thinking, 'If even the creators who perform the five functions of creation, protection, and so on, and the thirty-three crores of Devas (celestial beings) will one day perish, then who will grant us grace?' Do not worry.

Who is it that, by His command, performs the Panja Kiruthyams (five cosmic functions)—namely, creation, sustenance (protection), dissolution (destruction), concealment, and granting grace—over countless universes? The Four Vedas proclaim that it is the Supreme Being known as 'Namashivayam.'

Since that great Lord, Namashivayam, is our support, there is no room for you to fear. Therefore, hold onto His sacred feet, strive for His divine grace, and attain the bliss of Moksha (liberation)," thus Vallalar Peruman advises his own heart (mind))

இந்த சிறந்த பதிகத்தை ஓதி,  இறைவனை மறவாத நிலை நின்று, நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

4. Thiruvarutpa English Translation - Loga. Anandha Bharathi 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...