ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகரி - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை
திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.
வணக்கம்,
திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் மூன்றாம் பதிகமாகிய ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகரி.
பதிக அமைப்பு:
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால், வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. “எழுதி என் நெஞ்சே.” என்று பாடல் தோறும் பெருமான் தன் மனத்தினுக்கும் ஊக்கம் அளித்து திருவொற்றியூர் திருக்கோயிலுக்கு அழைத்து, அங்கு இறைவனுடைய திருநாமத்தை ஒருமையுடன் “சண்முக சிவசிவ” என ஓத அறிவுறுத்துகின்றார்.
இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ”ஐயுறல், என்மேல் ஆணை காண்!, அவர் அருள்பெறல் ஆமே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைவுறுகின்றது.
பதிப்புகள்:
திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் மூன்றாவதாக வைத்துச் சிறப்பித்தார்.
திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் மூன்றாம் பதிகமாகவே உள்ளது.
சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரியப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 22 வதாக “சிவசண்முகநாமப் பதிகம்” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
ஏட்டுச் சுவடிகள்:
இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 91, 92 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ- ஒற்றியூர், உ-சிவநம” எனப் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பதிகப் பொருண்மை:
ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகரி என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது.
வள்ளற் பெருமான் தன் மனத்தினை அழைத்து, "மனமே! உதவி எப்போதும் செய்ய மனமில்லாத கருமிகளிடம் சென்று, அவர்களின் வாசலில் நின்று பொருளுக்காகவும், எதிர்பாலினத்தரை நாடி நின்று தேக இச்சைக்காகவும், காத்திருந்து எந்தப் பயனும் இல்லை, அதனால் துன்பமே வரும். இனிமேலும் நேரத்தை வீணாக்காதே, காலம் விரைந்து செல்கிறது என்பதை உணர். என்னுடன் திருவொற்றியூர் கோவிலுக்கு வா. அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது, அவன் அருள் நிறைந்த நாமமான 'சண்முக சிவ' என்பதை மனம் உருகித் தொடர்ந்து உச்சரித்து, வழிபட்டு வந்தால், இறைவனுடைய திருவருளையும், பொருளையும் பெறலாம். அதன்மூலம் நீ என்றும் பேரின்ப சுகத்தில் வாழலாம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம், என்மீது ஆணை! இறைவனின் அருளை நிச்சயமாகப் பெறலாம்!" எனப் பாடல் தோறும் அறிவுறுத்துகின்றார்.
சில பாடல்களும் விளக்கமும்:
"மனமே! மாய மயக்கம் தரும் மார்பகங்களை உடைய பெண்கள் மீது ஆசைப்பட்டு அலைந்து திரிகிறாய். அதனால் கிடைக்கும் சுகம் மிகக் குறைவுதான். எனவே, இந்த அற்ப சுகத்திலேயே காலத்தை வீணாக்காமல், என் உடன் எழுந்து வா.
சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர் திருத்தலத்திற்குச் சென்று, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை, 'சண்முக சிவ சிவ' என்று மனம் ஒன்றி, நமது எலும்புகளும் உருகும்படி வழிபடுவோம். நம் துயரங்களை அவரிடம் எடுத்துரைத்தால், அந்த இறைவனின் அருளை நாம் பெறலாம். இது என்மீது ஆணை! நிச்சயம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்" என்று வள்ளலார் தன் மனதிற்கு உறுதி கூறுகிறார்
அப்பாடல் வருமாறு:
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச் சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய்
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம்
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.
(Vallalar reassures his own mind "Oh Mind! You wander around, yearning for women with breasts that create illusory attachments. The pleasure gained from that is very fleeting. Therefore, don't waste your time on such trivial pleasures. Arise and come with me! Let's go to the sacred shrine of Thiruvottiyur, surrounded by groves. There, we will worship the Lord enshrined, chanting 'Sanmuga Siva Siva' with our hearts unified and our very bones melting. If we express our sorrows to Him, we can receive the Lord's grace. This is my solemn promise! We will surely attain God's grace,".)
மற்றொரு பாடலில்,
"மனமே! மனம் சற்றும் உருகாத, வஞ்சகம் நிறைந்தவர்களிடம் போய் உன் கஷ்டங்களைச் சொல்வதால் என்ன பயன்? உன் காலம் வீண்தான் போகிறது. என்னுடன் புறப்படு! அழகிய ஒற்றியூர் என்னும் அருள் ஆட்சி புரியும் நகரத்திற்குச் சென்று, 'சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர' என்று முரசு கொட்டுவது போல உரக்கச் சொல்லி வழிபடு. உன்னுடைய துன்பங்கள் நீங்கும். இது என்மீது ஆணை! நிச்சயம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்" என்று வள்ளலார் தன் மனதிற்கு உறுதி அளிக்கிறார்.
அப்பாடல் வருமாறு:
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இப் பொழுதும்
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.
(Vallalar reassures his own mind: "Oh Mind! What's the use of going to deceitful people with hearts that never melt, and telling them your troubles? Your time is simply being wasted. Come with me! Let's go to the beautiful city of Thiruvottiyur, where grace reigns. There, worship by loudly chanting, like a drumbeat, 'Sanmuga Guru Nama Siva Om Nimala Sirpara Harahara.' Your sorrows will vanish. This is my solemn promise! We will surely receive God's grace")
இந்த அருமையான பதிகத்தை ஓதி, உடல் மயக்கம் நீங்கி, அருளும் பொருளும் பெற்று, கடவுளிடத்திலேயே முழு அன்பு பூண்டு, சன்மார்க்க ஒழுக்கத்தைப் பின்பற்றி, நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.
நன்றி வணக்கம்.
துணை நூல் பட்டியல்:
1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.
2. திருஅருட்பா செம்பதிப்பு – 8- ஆம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன்
3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக