ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முத்தி உபாயம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 முத்தி உபாயம்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் எட்டாம் பதிகமாகிய முத்தி உபாயம்

பதிக அமைப்பு:

வஞ்சித்துறை விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட மிகச்சிறிய அழகிய பாமாலை இது. குழந்தைகளும் நினைவு வைத்து பாடுவது ஏற்றது. திருக்குறள் போல மிகவும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. இப்பதிகத்தின் பாக்களில் ஒற்றியூர் இறைவனை வணங்கி வாழ்த்த வேண்டும் என தன் நெஞ்சுக்கு வள்ளல் பெருமான் அறிவுரைப் பகர்கின்றார்கள். 

“ஒற்றி” எனத் தொடங்கும் இப்பதிகம் ‘ஒற்றியே’ என்னும் சொல் கொண்டு நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் எட்டாவதாக வைத்துச் சிறப்பித்தார். 


அதன் புகைப்படம்:


திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் எட்டாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 71-வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, இரண்டாம் சுவடியில் ஏடு எண் 201 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, ஒற்றியூர் ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பதிகப் பொருண்மை

முத்தி உபாயம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. திருஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை நெஞ்சமே நீ வாழ்த்தி வணங்கு, அவனை வணங்கினால் உனக்கு முத்தி நிச்சயம், அத்தகைய முத்தியினை தரும் இறைவனின் திருக்கோயில் தூரமல்ல, என்றெல்லாம் தமது நெஞ்சுக்கு அறிவுரை கூறி திருஒற்றியூர் பூங்கோயிலுக்கு அழைக்கின்றார் பெருமான்.   

சில பாடல்களும் விளக்கமும்: 

உயிர்களாகிய நாம் முக்தி அடைவதற்கு வள்ளல் பெருமான், இந்த அருட்பதிகத்தில் பல்வேறு உபாயங்களை குறிப்பிடுகின்றார். அதிலே மிக முக்கியமான உபாயம். இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டும் என்பது. இந்த பக்தி தான் நமக்கு முக்தியைக் கொடுக்கும். இறைவன் மீது நாம் செய்கின்ற அன்பு,  நமக்கு முத்தியாகிய பேரின்ப நிலையை பயக்கும் என வள்ளற் பெருமான் இங்கு குறிப்பிடுகிறார். இதை மிக அழகாகவும் எளிமையாகவும் 

“சேர நெஞ்சமே

தூரம் அன்று காண்

வாரம் வைத்தியேல்

சாரும் முத்தியே.

முத்தி வேண்டுமேல்

பத்தி வேண்டுமால்

சத்தியம் இது

புத்தி நெஞ்சமே”

எங்கின்றார்.                  

மற்றொரு பாடலில்:

பிறவிப்பிணி முதல் எல்லா பிணிகளும், ஒற்றியூர்அப்பன் திருவடிகளைத் தொழ நீங்கும் என்கிறார்.

ஊற்றம் உற்று வெண்_

நீற்றன் ஒற்றியூர்

போற்ற நீங்குமால்

ஆற்ற நோய்களே.

நோய்கள் கொண்டிடும்

பேய்கள் பற்பலர்

தூய்தன் ஒற்றியூர்க்கு

ஏய்தல் இல்லையே.  

இச்சிறந்த பதிகத்தை ஓதி,  இறைவனிடம் அன்பு பூண்டு, வழிபட்டு,  நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...