ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 


 அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் ஒன்பதாம் பதிகமாகிய அவலத் தழுங்கல். 

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாக்களைக் கொண்ட அழகிய பாமாலை இது. திருவொற்றியூர் இறைவனான தியாகராசப் பெருமானிடம் தன் குறைகளை எடுத்துரைத்து வள்ளல் பெருமான் உருகும் பகுதியாக அமைந்துள்ளது. இப்பதிகத்திலுள்ள பத்து பாடல்களும் தன் மனதின் குற்றங்களை நீக்கி, இறைவன் தன் அளப்பரிய கருணையைத் தர வேண்டும் உருக்கமாக விண்ணப்பிக்கிறார். 

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் ஒன்பதாவதாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் ஒன்பதாவது பதிகமாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இப் பதிகம் இரண்டாம் திருமுறையுள் 40 -வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் பதிகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, சுவடியில் ஏடு எண் 84, 85 இல் இப்பதிகம் பெருமான் திருக்கரத்தால் எழுதப்பட்டுள்ளது என ஆ. பாலகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து. “உ, சிவமயம் ஒற்றியூர் ” எனவும் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பதிகப் பொருண்மை

அவலத் தழுங்கல் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் ஒற்றியூர் வழிபாட்டு காலத்தில் இயற்றப்பட்டது. திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை நோக்கி பெருமான் தனது குற்றம் குறைகளை ஆன்ம உருக்கத்தொடு முறையிடுவதாக   இப்பதிகம் அமைந்துள்ளது. 

சிலபாடல்களும் விளக்கமும்: 

பாடல்களின் தொடக்கத்திலேயே பெருமான், தான் எந்த நற்பயனையும் அடையாத "நிர்மூடன்" என்றும், வீண் வாதம் பேசும் வஞ்சகர்களுடன் காலத்தைக் கழித்தவன் என்றும் வருந்துகிறார். நஞ்சைக் கண்டாலே உலகம் நடுங்கும், ஆனால் வள்ளல் பெருமானோ, "என் மனதின் வன்மையையும் அன்பில்லாத தன்மையையும் நினைத்தால் அந்த நஞ்சமே நடுங்கும்" (பாடல் 1) என்று குறிப்பிடுவது மிக நீள நினைக்கத்தக்கது. 

ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் 

உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன்

வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் 

இழுக்குற வன்மைகள் பேசி

ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் 

அன்பு இலாத என் வன்பினை நினைக்கில்

தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

பெருமான், தன்னைத் தாழ்த்திக் கொண்டாலும், இறைவனிடம் பெருமான் காட்டும் உறுதி ஈடு இணையற்றது. "விஷ்ணு அல்லது பிரம்மன் பதவியைக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம், உன் சன்மார்க்க அடியாருடன் தொடர்பு கொள்ளும் வாழ்வே எனக்கு வேண்டும்" என பாடல் 6 இல் விண்ணப்பிக்கிறார். 

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி 

வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன்

மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் 

மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன்

ஒருப்படாத இ என்னளவு இனி உன் 

உள்ளம் எப்படி அப்படி அறியேன்

திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

உலகியல் வாழ்வில் நிலையற்ற இன்பங்களைத் தேடி அலைவதையும், கல்லினும் வலிய நெஞ்சம் கொண்டிருப்பதையும் பெருமான் இங்கு சுட்டிக்காட்டுகிறார். "அலையில் அகப்பட்ட துரும்பு போல" (பாடல் 7) என் மனம் அலைபாய்கிறது என்றும், தவமே உருவான பெரியோர்களின் பெருமையை அறியாது கயவர்களுடன் கலந்து பொழுதைக் கழித்தேன் என்றும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

நிலையிலா உலகியல் படும் மனத்தை 

நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன்

விலையிலா மணியே உனை வாழ்த்தி 

வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன்

அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் 

அற்பனேன் திரு_அருள் அடைவேனே

சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே 

திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

நிறைவாக, "மின்னிடைப் பொலி வேணியம் பெருமானே, நான் உன்னை விட்டு வேறல்ல; என்னை ஏற்றுக்கொள்வது உன் கடன்" (பாடல் 9) என்று சரணடைகிறார். எத்தனை பிழைகள் செய்திருந்தாலும், இப்பிறவியிலும் எப்பிறவியிலும் நீயே கதி  (பாடல் 10 )என்று இறைவனின் திருவடிகளை பெருமான் வழுத்துகின்றார்.

இச்சிறந்த பதிகத்தை ஓதி,  நம் சிறுமைகளை இறைவனிடம் முறையிட்டு, அவைகள் நீங்கப்பெற்று, நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...